புஷ்பா-2 சிறப்புக் காட்சி: தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டிற்கு நடிகர் அல்லு அர்ஜூன் விளக்கம்
புஷ்பா 2 சிறப்புக்காட்சி விவகாரத்தில் அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தன்னை பற்றி தவறாக சித்தரிக்கப்படுவதாக அல்லு அர்ஜூன் விளக்கம் கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது?
தெலங்கானா சட்டமன்றத்தில் சனிக்கிழமை பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, புஷ்பா 2 சிறப்புக் காட்சியின் போது அல்லு அர்ஜூன் போலீஸார் பேச்சை கேட்கவில்லை என்றும் அனுமதி மறுத்த போதும் திரையரங்கிற்கு அல்லு அர்ஜூன் வந்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய ரேவந்த் ரெட்டி, “கூட்ட நெரிசல் ஏற்பட்டதும் ஏசிபி நடிகரிடம் சென்று கிளம்பும்படி கூறினார். ஆனால், படம் முடிந்த பிறகே செல்வேன் எனக் கூறி முதலில் அவர் மறுத்திருக்கிறார். பின்னர், டிசிபி தலையிட்டு ஏற்கனவே இரண்டு பேர் கீழே விழுந்துவிட்டதால் உடனடியாக கிளம்பவில்லை எனில் கைது செய்யப்படுவீர்கள் என கூறியுள்ளார். அவ்வாறு கிளம்பும்போதும் காரின் மேற்கூரை வழியாக எழுந்து ரோட் ஷோ நடத்துகிறார்” என கூறினார்.
மனிதாபிமானமற்றவர்களாக இருக்கக் கூடாது என திரைப்பிரபலங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் எனக் கூறிய ரேவந்த் ரெட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை அரசு பொறுத்துக் கொள்ளாது என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அல்லு அர்ஜூன், “இது மிக துரதிர்ஷ்டவசமான நிகழ்வு, முற்றிலும் விபத்து, எனக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள்” எனக் கூறினார்.
“திரையரங்கம் எனக்கு கோவில் மாதிரி. அங்கே ஏதாவது நடந்தால் நான் வருத்தப்படமாட்டேனா? அனுமதியின்றி திரையரங்குக்கு சென்றேன் என்பது தவறான தகவல்” என அல்லு அர்ஜூன் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுவனை சந்திக்க விரும்பியதாகவும், ஆனால் வழக்கு பதியப்பட்டதால் அவர்களை நேரில் சந்திப்பது சரியாக இருக்காது என வழக்கறிஞர்கள் கூறியதால் சந்திக்கவில்லை என்றும் கூறினார். எனினும், அந்த சிறுவன் உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வந்ததாகவும் அல்லு அர்ஜூன் கூறினார்.
டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சிக்கு அல்லு அர்ஜூன் வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு