கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துகளில் 8பேர் உயிரிழப்பு !

by wp_shnn

கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (21) மாரவில, அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல, மட்டக்களப்பு, மிரிஹான, கெப்பத்திகொல்லாவ மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பேலியகொட – புத்தளம் வீதியில் மாரவில நகரில் கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸுடன் முன்னால் வந்த முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ, திவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு-வெல்லவாய வீதியின் வளவல பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் டிப்பர் ரக வாகனம் மோதியதில் 64 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, கம்பளை-தொலுவ வீதியில் தவுலம் மோதர என்ற இடத்தில் வீதியின் ஓரமாக நடந்து சென்ற பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பாதசாரி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

கம்பளை, நாரங்வில பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மெதகம கொஸ்தெனிய வீதியின் துத்திரிபிட்டிகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் வந்து கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் 43 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமாங்கம் கோவில் புறவழிச்சாலையில் கோவிலுக்கு அருகில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

மாமாங்கம் பகுதியில் உள்ள பாடசாலை வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹைலெவல் வீதியில் விஜேராம சந்திக்கு அண்மித்த பகுதியில் பாதசாரி கடவையில் வீதியைக் கடந்தவர் மீது கார் ஒன்று மோதிய விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், கெப்பத்திகொல்லாவ – பதவிய வீதியில் உஸ்கொல்லாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த கெப் வண்டியின் மீது மோதியதில், சாரதியால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து வந்து கொண்டிருந்த சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கெப்பத்திகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

கல்னேவ – சினிமா மண்டபத்திற்கு அருகில் வசித்து வந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ரத்தொலுவ – உடன்விட்ட வீதியின் அமந்தொலுவ பிரதேசத்தில் வீதியோரத்தில் துவிச்சக்கரவண்டியை தள்ளிச் சென்றவர் மீது வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் சைக்கிளை தள்ளிச் சென்றவர் படுகாயமடைந்து விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரத்தொலுவ – வீடமைப்புத் திட்டத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வேன் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹட்டன், கடுகண்ணாவ மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பகுதிகளில் நேற்று (21) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆகும்.

நேற்று (21) காலை ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ நுழைவுப் பகுதிக்கு அருகில் நேற்று (21) அதிகாலை 1:15 மணியளவில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பஸ் ஒன்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தெல்தெனிய டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள்தாக தெரியவருகிறது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்