வடக்கு கடற்தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க கடற்தொழில் அமைச்சர் அக்கறையாக உள்ளார்

by smngrx01

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகiளை கடற்றொழில் அமைச்சருக்கு பரிந்துரைக்கவுள்ளதாகவும் இவற்றை விரைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள், நெக்டா, நாரா நிறுவனப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்றனர். 

இவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமரும் கலந்துகொண்டார்.

கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தின் பிரதான பொருளாதார வளமாக விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன இருக்கின்றது.  அந்தத் தொழிலை முன்னெடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும்.

 மீனவ சமூகங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வது தனக்குத் தெரியும். அவை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, கடற்றொழில் அமைச்சருக்குப் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 

அத்துடன் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள், வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றார். அவர் ஊடாக எதிர்காலத்தில் இங்கு அடையாளம் காணப்படும் விடயங்களை தீர்த்து வைக்க முடியும என நம்புகிறேன் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார். 

அதேவேளை குறித்த கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் கடலட்டைப் பண்ணைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மீனவ சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. 

அதனால் ஏற்படும் கடல்வளப் பாதிப்பு மற்றும் ஏனைய தொழிலை முன்னெடுக்கும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. 

இதேவேளை இதுவரை வழங்கப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைகளை மீளாய்வு செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரையும்  முன்வைக்கப்பட்டது. 

மேலும் வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் பாதுகாப்புத் தரப்பினர் பாஸ் நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலும் மீனவ சமூகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மீனவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்