தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள், மீள வழங்க பணிப்பு !

by admin

தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள், மீள வழங்க பணிப்பு ! on Friday, December 20, 2024

தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை ஆய்வுக்குட்படுத்தும் பொருட்டு தற்காலிகமாக மீளவழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு வழங்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை 2024 நவம்பர் 21க்கு முன்னர் மதிப்பாய்வுக்காக அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு ஊடாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

இவ்வறிவிப்புக்கு அமைய, அனுமதிப் பத்திரம் பெற்றவர்களில் 85% பேர் துப்பாக்கிகளை திருப்பி ஒப்படைத்துள்ளனர்.

மேலும், அவர்கள் தொடர்ந்தும் துப்பாக்கிகளை வைத்திருக்க விரும்பினால், அதன் அவசியத்தை விளக்கி 2024 அக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் முறையீடுகளை சமர்ப்பிக்கவும் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்நது.

அந்த முறையீடுகளைச் சமர்ப்பித்த உரிமதாரர்களின் துப்பாக்கிகளை ஆய்வு செய்வதற்கும் மறுபரிசீலனை செய்வதற்கும் துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தற்பாதுகாப்பிற்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே வழங்கப்படும் என்பது பாதுகாப்பு அமைச்சின் முடிவாகும், மேலும் அது புலனாய்வுத்துறை அறிக்கைகளுக்கமைய மேற்கொள்ளப்படும். துப்பாக்கிகள் தொடர்பான அனைத்து முறையீடுகள் மற்றும் துப்பாக்கி தொடர்பான ஆய்வுகள் 2025 ஜனவரி 20 அன்று முடிவடையும் என்றும், அந்தத் திகதிக்கு முன் துப்பாக்கிகளை ஆய்வுக்காக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரும் குறிப்பிடத்தக்களவு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வழங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, 2024 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.எனவே, அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுகிறது.குறித்த திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் கணக்கெடுப்பு/ ஆய்வுக்கு உட்படாத உரிமதாரர்களுக்கு எதிராக 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தின்படி, சிவில் சமூகத்தில் துப்பாக்கிப் பாவனை மற்றும் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பான சமூகத்தை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கமைய, இதுவரைக்கும் ஒப்படைக்கப்படாத அனைத்து அனுமதிப் பத்திரம் பெற்ற துப்பாக்கிகளும் 2025 ஜனவரி 20 திகதிக்கு முன் ஆய்வுக்காக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்