on Thursday, December 19, 2024
(நூருல் ஹுதா உமர்)
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பொருட்களின் விலைகளை குறைப்போம், மின்சார கட்டணங்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளை குறைப்போம் என்று பல்வேறு விடயங்களை சொல்லி ஆட்சிக்கு வந்த அரசு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நிறைவடைந்தும் பொருட்களின் விலையை குறைத்ததாக தாம் அறியவில்லை என்றும் மாறாக அரிசி, தேங்காய் மற்றும் சில பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் விலைகளை குறைக்க முடியாத நிலையில் அரசு திண்டாடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரித்தார்.
நேற்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அரசாங்கம் பொருட்களின் விலைகளை குறைத்து நாட்டினுடைய பொருளாதார சுமையை மக்கள் மீது சுமத்தாமல் தாம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதேபோன்று அத்தியவசியமான உணவுப்பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மக்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்குரிய நிலையினை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.
அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கும் ஆறாயிரம் ரூபா வட்டியில்லாத கடனாக வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மரங்கள் விழுந்து சேதமடைந்த நிலையில் பல பாடசாலைகளை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது அதேபோல் பல வீதிகளும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை கருத்திற்கொண்டு அதற்கான நிதியினை மாகாண சபையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக பெற முடியாமல் இருப்பதால் மத்திய அரசாங்கத்தின் ஊடாக அதற்கான நிதியினை வழங்கி பாடசாலை, வீதிகளை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.