நேற்று இந்தியாவிற்கு நன்றி:இன்று சீனாவுக்கு?

by guasw2

இந்தியாவிற்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன தேசியக் குழுவின் பிரதிநிதிகளிற்கு இடையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (18.12) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி நன்றித் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் சீன தரப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல் நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உதவிகளை வழங்கியமைக்கு நன்றி கூறிய ஜனாதிபதி சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் மத்திய அதிவேக வீதியில் சீனாவிற்கு பொறுப்பான பகுதிகளை நிறைவு செய்ய வேண்டுமெனவும் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை மையப்படுத்தி விநியோக மத்தியஸ்தானம் மற்றும் நிறுவன வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும், பல்வேறு காரணங்களுக்காக இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் சமுத்திர ஆய்வு பணிகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் சீன தரப்பு கோரியுள்ளது.

அத்தோடு, ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அண்மித்து சீன நிறுவனங்களை அமைத்து உலக அளவில் இலங்கைக்கு மிகச் சிறந்ததொரு பிரவேசத்தை ஏற்படுத்தித் கொடுக்க எதிர்பார்த்திருப்பதுடன்,எதிர்வரும் காலங்களில் சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதியை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சீன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்