ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா?

ஒரே நாடு, ஒரே தேர்தல்: 'அதிபர் ஆட்சி', 'கூட்டாட்சிக்கு எதிரானது' - எதிர்க்கட்சிகளின் கவலைகள் நியாயமானதா?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தல் என்பது ‘ஜனநாயகத் திருவிழா’வாக பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரம், பொதுக் கூட்டங்கள், பேரணிகள், வாக்குறுதிகள், விநோதமான தேர்தல் பிரசார உத்திகள் என அனைத்தும் தேர்தல் ஒரு ‘ஜனநாயகத் திருவிழா’ தான் என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவே இருக்கும்.

கடந்த டிசம்பர், 2023 முதல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான ஓர் ஆண்டுக் காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல், எட்டு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக சுமார் 45 நாட்கள் நடைபெற்றன. சுமார் 100 கோடி வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். சட்டமன்ற தேர்தல்களையும் கருத்தில் கொண்டால், இந்த ஓராண்டின் பெரும்பாலான நாட்கள் தேர்தல் காலமாகத்தான் சில மாநிலங்களில் இருந்திருக்கும்.

இத்தகைய தேர்தல்களை நடத்துவதற்கு அதிக காலமும் பணமும் செலவாகிறது என்பதே, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு மத்திய அரசு கூறும் காரணமாக இருக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கான ஒரு பெரிய முன்னேற்றம் என்று மத்திய அரசு நீண்ட காலமாகக் கூறி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் ‘இது ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், அரசியலமைப்பு சட்டம்’ மூன்றுக்கும் எதிரானது என்ற குரலை எழுப்பி வருகின்றன.

எதிர்க்கட்சிகள் எழுப்பும் கவலைகள் நியாயமானவைதானா? அரசியலை கடந்து சாமானியர்கள் மீது இந்த மசோதா ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இது குறித்து நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

மசோதா அறிமுகம்

பல காலமாக பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆதரித்து வரும் இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறைக்கான மசோதா செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 17) அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்வது தொடர்பான வாக்கெடுப்பின் முடிவுகளை மக்களவை சபாநாயகர் அறிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 196 வாக்குகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகளின் கவலை என்ன?

ஒரே நாடு ஒரே தேர்தல், ராம்நாத் கோவிந்த், திரௌபதி முர்மு, நரேந்திர மோதி

பட மூலாதாரம், X/President of India

படக்குறிப்பு, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை’ அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளித்தது.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, “நாட்டின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றழித்து, நாட்டை ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் தள்ளிவிடும்,” என ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில சட்டமன்ற தேர்தல்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, இத்திட்டம், ‘ஜனநாயகத்திற்கு எதிரானது’ எனக் கூறி காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, மக்களவையில் செவ்வாய்க் கிழமை பேசுகையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீதான தாக்குதல்” என்றார்.

ஆதரிப்பவர்கள் கூறுவது என்ன?

ஒரே நாடு ஒரே தேர்தல்: கூட்டாட்சிக்கு எதிரானது என்ற எதிர்க்கட்சிகளின் அச்சம் நியாயமானதா?

பட மூலாதாரம், FACEBOOK

கடந்த ஐந்து ஆண்டுகளில் “800 நாட்கள்” தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்ததால், நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது தாமதமானதாக பாஜக கூறி வருகிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்த பரிந்துரைகளுக்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 47 கட்சிகள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தன. அவற்றில் 32 கட்சிகள் ஆதரவாகவும் 15 கட்சிகள் எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தன.

தேர்தல்களுக்கான நேரம், செலவினங்கள், வளங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மசோதாவுக்கு பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கவலைகள் நியாயமானதா?

“எதிர்க்கட்சிகளின் பயம் நியாயமானதுதான்” என்கிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

நேரம், செலவினங்களைத் தாண்டி, தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் தலையாயது என்கிறார் அவர்.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையை மாற்றும் மசோதா குறித்து வெற்றிச்செல்வன் கேள்வியெழுப்புகிறார்.

பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரைக் கொண்ட குழுவில் யாரேனும் இரண்டு பேர் என்ன முடிவெடுக்கிறார்களோ, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெறும் எனும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறை தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான முக்கியமான நடவடிக்கை என்கிறது மத்திய அரசு

“இந்த நடைமுறையே ஆளுங்கட்சிக்கு சாதகமானவரை தேர்தல் ஆணையராக நியமிப்பதற்கான முடிவுதான்” என்கிறார் வெற்றிச்செல்வன்.

எனினும், இந்த மசோதாவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்போது, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் முடிவுகளை தாமதமாகப் பதிவேற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பியதையும் அவர் கோடிட்டுக் காட்டுகிறார்.

“தேர்தல்கள் நியாயமாக நடைபெறுகிறதா என்ற கேள்வி பல காலமாக இருக்கிறது. எனவே, இந்த முறை செயல்பாட்டுக்கு வந்தால், தேர்தல் சுதந்திரமானதாக, நியாயமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் நியாயமானதாக நடைபெறும் என்ற நம்பிக்கை முதலில் மக்களுக்கு இருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதா?

தேர்தல் தேதிகூட மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் என்ற கவலையை அவர் எழுப்புகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு உரிமை எனக் கூறும் வெற்றிச்செல்வன், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ செயல்படுத்தப்பட்டால், சில மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கும் அல்லது அந்த சட்டமன்றங்களின் கால அளவை நீட்டிக்க வேண்டியிருக்கும், இரண்டும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்கிறார் அவர்.

செலவினங்களைக் குறைக்க உதவுமா?

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் மற்றொரு பிரச்னை, நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்தும்போது இரு தேர்தல்களுக்கும் பிரசாரம் உள்ளிட்ட செலவுகளை தேசிய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் மாநில கட்சிகளால் மேற்கொள்ள முடியாது என மாநில கட்சிகள் பல கூறுகின்றன.

“இது பொய்யான வாதம். ஒரே பிரசாரத்தில் இரு தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்க முடியுமே. அதனால் இது தவறான வாதம்” என்கிறார், பிபிசியிடம் பேசிய இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி.

அதேபோன்று, சில மாநிலங்களில் ஐந்து ஆண்டுக் காலம் முடிவுறாமலேயே தேர்தல்கள் மீண்டும் நடத்தப்படுவதற்கு இது வழிவகுக்குமே என அவரிடம் கேள்வி எழுப்பினோம்.

“அப்படி ஒருமுறைதானே நடக்கும். அடுத்த 50-100 ஆண்டுகளுக்கு நல்லது நடக்கும் என்பதால் இவ்வாறு செய்யலாம். ‘ஒரே நாடு, ஒரே தேர்தலால்’ எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாது” என்கிறார் கோபால்சாமி.

இந்த நடைமுறை செலவினங்களைக் குறைக்கும், தேர்தல்களில் சீர்திருத்தங்களை உருவாக்கும் என்பதிலும் மிகுந்த ஆதரவாக இருக்கிறார் அவர்.

‘நியாயமான தேர்தல்தான் முக்கியம்’

ஒரே நாடு, ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு மாதமும் எங்காவது தேர்தல் நடக்கும் என்ற நிலையை விடுத்து, ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பல விதங்களில் நன்மைகளையே விளைவிக்கும் எனக் கூறும் கோபால்சாமி, “எனினும், இந்த முறையால் சில நடைமுறை சிக்கல்கள், தடைகள் இருந்தாலும், அவை நன்மைக்கே” என்கிறார்.

ஆனால், இந்த வாதங்களில் இருந்து மாறுபடுகிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். “தேர்தல்களால் செலவுகள் அதிகரிக்கிறது என்பதால் இந்த முறையைக் கொண்டு வருகின்றனர். ஆனால், ஜனநாயகத்திற்கு சில விலைகள் கொடுத்துதான் ஆக வேண்டும். நியாயமான தேர்தல்தான் இலக்காக இருக்க வேண்டும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ வந்தால் தேர்தல்கள் நியாயமாக இருக்குமா என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தைக் காக்கும். அதைவிடுத்து, தேர்தல் செலவைக் குறைப்பதற்காகக் கொண்டு வரக்கூடாது” எனத் தெரிவித்தார் வெற்றிச்செல்வன்.

இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டால் எழும் மற்றொரு பிரச்னையையும் சுட்டிக் காட்டுகிறார் அவர்.

“ஒருவேளை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடனும் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களிலும் ஒரே கட்சியோ அல்லது ஒரு கட்சியை தலைமையாகக் கொண்ட கூட்டணியோ ஆட்சியைப் பிடிக்கிறது என வைத்துக்கொண்டால், அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடலாம், சர்வாதிகாரமாக மாறிவிடும்” என்ற கவலையை எழுப்புகிறார்.

தேர்தல்கள் என்பது அதிபர் முறையாக மாறும் என மு.க.ஸ்டாலின் கூறிய அச்சம், “நியாயமானதுதான்” என்கிறார் அவர்.

மக்களின் மீதான தாக்கம்

ஒரே நாடு, ஒரே தேர்தல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த நடைமுறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன

சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், தேர்வு செய்யப்பட்டவர்களின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய உரிமை மக்களுக்கு உள்ளது.

“இது மக்களை மறைமுகமாக அதிகாரப்படுத்துகிறது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால், ஒரே நேரத்தில் இரு அவைகளுக்கும் வாக்களித்துவிட்டு, ஐந்து ஆண்டுகள் மீண்டும் காத்திருக்க வேண்டும்” என்கிறார் வெற்றிச்செல்வன்.

ஆண்டு முழுதும் தேர்தல்கள் என்பது மக்கள் நலத்திட்டங்களை தாமதப்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம்.

“தேர்தல் என்பதே ஜனநாயக நடைமுறைதானே. தனித்தனியாக நடைபெறும் போதுதான் மக்களுக்கு பிரதிநிதிகள் வாக்குறுதி அளிப்பார்கள், ஏற்கெனவே வாக்குறுதி அளித்த திட்டங்களின் நிலை என்ன என்பதற்கான பதில் மக்களுக்கு அப்போதுதான் கிடைக்கும். ஒரே நேரத்தில் வாக்களித்துவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றுமே நினைக்கக்கூடாது என்பதே அரசியலற்ற, ஜனநாயகமற்ற நிலையை நோக்கிச் செல்ல வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.

‘மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது’

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த கட்சிக்குத்தான் சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது மக்களைக் குறைவாக எடைபோடும் எண்ணம் என்றும், அதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கிறது என்றும் வாதிடுகிறார் கோபால்சாமி.

“நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்களோ, அதே கட்சிக்குத்தான் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களிப்பார்கள் என்பதே தவறு. அதை எத்தனையோ தேர்தல்களில் மக்கள் நிரூபித்திருக்கின்றனர்” என்றார்.

மேலும், அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என எதிர்க்கட்சிகள் கூறுவதும் மிகையான வாதம் என்கிறார் அவர்.

சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும்போது, பிரதிநிதிகள் என்னென்ன பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை அவர்களின் கட்சித் தலைமைகள் உன்னிப்பாகக் கவனிக்கும், தேர்தல் அரசியலில் வெற்றி கிடைக்க வேண்டும், மக்களுக்கு பதில் கூற வேண்டும் என்பதற்காகவே வேட்பாளர்கள் அதிகமாக உழைப்பார்கள், மக்கள் நலப் பணிகள் சீராக நடக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.