இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி – தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?

இந்தியா - இலங்கை, அநுர குமார திஸாநாயக்க விஜயம்

பட மூலாதாரம், INSTA/ANURAKUMARAOFFICIAL

படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியுடன் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

“இலங்கை நிலம், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம்”

இலங்கை அதிபரான பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ள அநுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே வி பி) கட்சியை சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முதன் முறையாக இலங்கை அதிபரான போது இந்தியா – இலங்கை இடையிலான உறவு எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.

இலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ள, சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹம்பன்தோட்டாவில் சீனாவின் ஆய்வுக் கப்பல் ‘யுவான் வாங்க் 5’ நிறுத்தப்பட்டதை தனது பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக பார்த்த இந்தியாவுக்கு திஸாநாயக்கவின் வார்த்தைகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

இந்நிலையில் திஸாநாயக்கவின் பயணமும், அவரது வாக்குறுதியும் முக்கியமானதாக இரு தரப்பிலும் பார்க்கப்படுகிறது.

இந்தியா - இலங்கை, அநுர குமார திஸாநாயக்க விஜயம்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதிபராக திஸாநாயக்கவின் முதல் பயணம்

இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார். அவர் அதிபரான பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது.

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை கடந்த காலங்களில் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியை சேர்ந்த அநுர குமார திஸநாயக்கவின் இந்திய பயணம் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இடது சாரியான அநுர குமார திஸநாயக்க சீனா பக்கம் சாய்வாரா அல்லது இந்தியா பக்கம் சாய்வாரா என்ற கேள்விகள் அவர் பதவியேற்றது முதல் எழுந்தன.

இந்திய அமைதி படையை ( IPKF -Indian Peace Keeping Force) இலங்கைக்கு அனுப்ப வழி வகுத்த 1987-ம் ஆண்டு கையெழுதிடப்பட்ட இந்தியா-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை திஸாநாயக்காவின் ஜனதா விமுக்தி பெருமுனா கடுமையாக எதிர்த்தது. இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டை அவசியமற்றதாக கருதிய அக்கட்சி, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இருந்து இந்தியா விலகியிருக்க வேண்டும் என்று 1980களில் வலுவாக குரல் எழுப்பியது.

ஆனால், இப்போது “மிகப்பெரிய அண்டை நாடான இந்தியாவை எதிர்க்க முடியாது என்று இலங்கைக்கும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட கட்சியாக இருந்தாலும் மக்கள் அங்கீகாரத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கும் அரசை புறக்கணிக்க முடியாது என்று இந்தியாவுக்கும் தெரியும்.” என்கிறார் இலங்கையில் உள்ள மூத்த பத்திரிகையாளர் நிக்சன்.

இந்தியா - இலங்கை, அநுர குமார திஸாநாயக்க விஜயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க

புது தில்லியில் நடைபெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்பின் போது, பொருளாதாரம், கட்டமைப்பு, ஆற்றல் உருவாக்கம் என பல்வேறு விசயங்கள் குறித்து பேசப்பட்டது. இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக இந்தியா-இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“அதிபராக எனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவதில் பெருமை அடைகிறேன். நாங்கள் வர்த்தகம், பாதுகாப்பு, ஆற்றல், பிரிக்ஸ், சட்டவிரோதமாக மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்துவது குறித்து ஆலோசித்தோம்” என்று அநுர குமார திஸாநாயக்க தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா உதவி”

இந்தியா - இலங்கை, அநுர குமார திஸாநாயக்க விஜயம்

பட மூலாதாரம், INSTA/ANURAKUMARAOFFICIAL

2022-ம் ஆண்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து, இலங்கை மீள்வதற்கு இந்தியா வழங்கிய நிதியுதவி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி வழங்கிய ஆதரவுக்கு தான் நன்றிக் கடன்பட்டிருப்பதாக இலங்கை அதிபர் திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையிலும் ‘சாகர்’ தொலைநோக்குத் திட்டத்திலும் சிறப்பு இடம்பெற்றுள்ள இலங்கைக்கு இந்தியா தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்று அவரிடம் பிரதமர் நரேந்திர மோதி உறுதியளித்தார்.

இலங்கைக்கு வழங்கியிருந்த 20.66 மில்லியன் டாலர் கடனை, நிதி உதவியாக இந்தியா மாற்றிக்கொண்டது என்று இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

“இதுதான் இந்தியா எதிர்பார்த்தது. அநுரா இவ்வளவு நெருக்கம் காட்டினால், இந்தியா அதை விட அதிகமாக திருப்பிக் கொடுக்கும். இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்தது இந்தியா தான். இந்தியாவின் உதவி இல்லாமல் இலங்கை தாக்குப் பிடித்திருக்க முடியாது என்று இலங்கை அரசு அதிகாரிகள் பலர் தெரிவிக்கின்றனர். அதை திஸாநாயக்க உணர்ந்துள்ளார்.” என்று பிபிசி தமிழிடம் பேசிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் டி.பி. சீனிவாசன் தெரிவித்தார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் இணை செயலாளராக பணியாற்றிய அவர், பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவின் தூதராக இருந்துள்ளார்.

இந்தியா - இலங்கை, அநுர குமார திஸாநாயக்க விஜயம்

பட மூலாதாரம், TP Sreenivasan

படக்குறிப்பு, டி.பி. சீனிவாசன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர்

இந்தியா-சீனா : யாருடன் நெருக்கம் காட்டும் இலங்கை?

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்குமே இலங்கை குறிப்பிடத்தக்க புவியியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இலங்கை, இந்திய பெருங்கடலில் ஒரு மூலோபாய கடல்சார் நுழைவாயிலாக இருக்கிறது. எண்ணெய் வர்த்தகப் போக்குவரத்து உட்பட உலக வர்த்தகத்திற்கான பிரதான கப்பல் பாதையில் இலங்கை அமைந்திருக்கிறது.

இலங்கையில் துறைமுகம் போன்ற உள்கட்டமைப்புகளில் சீனா முதலீடு செய்வதை இந்தியா சந்தேகத்துடன் பார்க்கிறது. தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இதனை இந்தியா கருதுகிறது.

இந்த சூழலில்தான், இலங்கையின் நிலம், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நோக்கங்கள் கொண்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாது என்று இந்தியாவுக்கு உறுதியளித்ததாக திஸாநாயக்க தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“சீனாவுடன் உறவே வைத்துக் கொள்ளக் கூடாது என்று இந்தியா கூறவில்லை. ஆனால் இலங்கையை, சீனா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்கிறது. எனினும் சீனா சென்றால் அங்கு என்ன பேசுவார் என்று தெரியாது” என்கிறார் டி பி சீனிவாசன்.

“இந்தியா இலங்கைக்கு அளித்த உதவிக்கு அவர் நன்றியுடன் இருக்கிறார். இந்த பயணத்தின் முக்கிய அம்சமே, அவர் இந்தியாவுக்கு எதிராக தங்கள் நிலம் பயன்படுத்தப்படாது என்று அளித்த வாக்குறுதி தான்” என்று பிபிசி தமிழிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளராகவும், நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராகவும் இருந்த வேணு ராஜாமணி சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியா - இலங்கை, அநுர குமார திஸாநாயக்க விஜயம்

பட மூலாதாரம், Venu Rajamony

படக்குறிப்பு, வேணு ராஜாமணி, இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் இணைச் செயலாளர்

பிரிக்ஸில் சேர இலங்கை விருப்பம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கு இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு, பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பாக வழங்கியிருந்தது. தான் பிரிக்ஸ் உறுப்பினராவதற்கான ஆதரவையும் இந்தியாவிடம் கேட்டுள்ளது இலங்கை.

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதன் மூலம் சீனாவுடன் எந்த நெருடலும் இல்லாமல் நட்பு பாராட்டி அதன் பொருளாதார உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்பது இலங்கையின் எண்ணமாக உள்ளது என்கிறார் நிக்சன்.

இந்தியாவுடன் நெருக்கத்தை பேணும் அதேவேளையில் சீனாவை விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும் என இலங்கை நினைக்கிறது என்பது அவரது கருத்து. இலங்கையில் சீன முதலீடுகளுக்கு எதிராக சிங்களர்கள் குரல் எழுப்பியது இல்லை என்று சுட்டிக்காட்டும் நிக்சன், “ஈழத் தமிழர்கள் விவகாரம் காரணமாக இந்தியா மீது இலங்கைக்கு ஒருவித பயம் உள்ளது. ஆனால் சீனாவிடம் அதற்கு எந்த பயமும் இல்லை” என்கிறார்.

இந்தியா - இலங்கை, அநுர குமார திஸாநாயக்க விஜயம்

பட மூலாதாரம், நிக்சன்

படக்குறிப்பு, நிக்சன், இலங்கை மூத்த பத்திரிகையாளர்

இலங்கை தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?

தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவை இந்திய பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார். அதன் பிறகு பேசிய மோதி, இலங்கை அரசு தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்று நம்புவதாக தெரிவித்தார். மாகாண சபை தேர்தல்கள் நடத்தி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 13வது சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவின் வலியுறுத்தல் அநுர அரசுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்காது என்கிறார் பத்திரிகையாளர் நிக்சன்.

“முந்தைய அரசுகளுக்கும் இந்தியா இதையே வலியுறுத்தியுள்ளது. ஆனால் எந்த அரசும் அதை செய்யவில்லை. அநுர அரசு அதை செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக மாகாண சபை தேர்தல்களை இந்த அரசு நடத்துவது சந்தேகமே. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் மட்டுமே கொண்டுவரப்படலாம்” என்று நிக்சன் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு