ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள் என்ன? எத்தனை கட்சிகள் ஆதரிக்கின்றன?
நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைக்கும், யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேசம் சட்ட (திருத்தம்) மசோதா 2024 ஆகியவை மக்களவையில் இன்று (டிசம்பர் 17) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்வது தொடர்பான வாக்கெடுப்பின் முடிவுகளை மக்களவை சபாநாயகர் அறிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 196 வாக்குகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ”அரசியலமைப்பை மாற்ற கோரும் இந்த மசோதா மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டபோது, இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு (Joint Parliamentary Committee- ஜேபிசி) அனுப்ப வேண்டும் என பிரதமர் மோதி தனது கருத்தை வெளிப்படுத்தினார்.”
“எனவே சபையின் நேரத்தை வீணடிக்காமல், இதை ஜேபிசியிடம் ஒப்படைக்கத் தயார் என்று அமைச்சர் சொன்னால், ஜேபிசியில் அனைத்து விவாதங்களும் நடக்கும். ஜேபிசி அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை அதை நிறைவேற்றினாலும் கூட, மீண்டும் அனைத்து விவாதங்களும் அதன் மீது நடைபெறும்.” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விதி 74இன் கீழ், இந்த மசோதாவுக்கு ஜேபிசி அமைப்பதை முன்மொழிவதாக தெரிவித்தார்.
இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது
நாடு முழுவதும் மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் மசோதாவுக்கு, டிசம்பர் 12-ஆம் தேதி பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாக ஏற்கனவே கூறியுள்ளது.
அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.
ஆனால், தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு மோதி அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை. எனவே இது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.
எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன?
மக்களவையில் இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீதான தாக்குதல். இந்த மசோதாவை பரிசீலிப்பது இந்த அவையின் சட்ட திறனுக்கு அப்பாற்பட்டது. அதைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.
முன்னதாக இந்த மசோதா குறித்து பேசியிருந்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக நிராகரிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை காங்கிரஸ் கட்சி ஏன் எதிர்க்கிறது என்பதை விளக்கி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
“அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவது ஒரு விஷயம், ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் மோதியின் உண்மையான நோக்கம் ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதுதான். அரசியலமைப்பு குறித்து ஆர்எஸ்எஸ் என்ன நினைக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.” என்று கூறினார் ஜெய்ராம் ரமேஷ்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
“‘ஒரே’ (One) என்ற வார்த்தையே ஜனநாயக அமைப்பிற்கு எதிரானது. ‘ஒரே நாடு- ஒரே தேர்தல்’ என்ற முடிவு ஜனநாயகத்திற்கு மரண அடியாக இருக்கும். இது நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மாநில பிரச்னைகளின் முக்கியத்துவத்தை இது வெகுவாக குறைத்துவிடும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “இந்த மசோதாவை திமுக எதிர்க்கிறது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது, கூட்டாட்சிக்கு எதிரானது மற்றும் மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் இப்போதைக்கு அவர்கள் அதை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.” என்று கூறினார்.
ஒரு நாடு ஒரு தேர்தல் தேர்தல் சீர்திருத்தத்திற்கு வழிவகுக்குமா?
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கான ஒரு பெரிய முன்னேற்றம் என்று மத்திய அரசு நீண்ட காலமாக கூறி வருகிறது.
கடந்த 2023 செப்டம்பரில், பிரதமர் மோதியின் அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தது.
இந்தக் குழு மார்ச் 2024இல் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், லோக்சபா முன்னாள் பொதுச்செயலாளர் டாக்டர். சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் குழுவின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.
இது தவிர, சிறப்பு அழைப்பாளர்களாக சட்டத்துறை இணையமைச்சர் (சுயேச்சைப் பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் டாக்டர் நிதன் சந்திரா ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
191 நாட்கள் ஆய்வுக்குப் பிறகு, இந்தக் குழு 18,626 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையைத் தயாரித்தது. செப்டம்பர் 2024இல், பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, டிசம்பர் 12இல், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அதை சட்டமாக்குவதற்கான நடவடிக்கையாக இன்று (டிசம்பர் 17) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு 32 கட்சிகளின் ஆதரவு
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இந்தக் குழு, அனைத்துக் கட்சிகள், வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் பேசி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
அறிக்கையின்படி, 47 அரசியல் கட்சிகள் குழுவுடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டன, அவற்றில் 32 கட்சிகள் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு ஆதரவாக இருந்தன.
“15 கட்சிகளைத் தவிர, மீதமுள்ள 32 கட்சிகள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை ஆதரித்து, இந்த தேர்தல் முறை வளங்களைச் சேமிக்கவும், சமூக நல்லிணக்கத்தைப் பேணவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் உதவும் என்று தெரிவித்துள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 1951 முதல் 1967 வரை, மக்களவை மற்றும் அனைத்து சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.
- 1999இல் சட்ட ஆணையத்தின் 170வது அறிக்கை: இந்த அறிக்கையில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களவை மற்றும் அனைத்து சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
- 2015இல் நாடாளுமன்ற குழுவின் 79வது அறிக்கை: இந்த அறிக்கையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழி இரண்டு கட்டங்களாக விளக்கப்பட்டது.
- ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு: இந்தக் குழு அரசியல் கட்சிகள், வல்லுநர்கள் உள்ளிட்ட பலரிடம் விவாதித்து ஆலோசனைகளைப் பெற்றது.
- தேர்தல் முறைக்கு பரவலான ஆதரவு: நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பரவலான ஆதரவு இருப்பதை உரையாடல்கள் மற்றும் கருத்துகள் வெளிப்படுத்தின.
குழு வழங்கிய பரிந்துரைகள்
- இரண்டு கட்டங்கள்: தேர்தலை நடத்துவதற்கான திட்டத்தை இரண்டு கட்டங்களாக அமல்படுத்த வேண்டும்.
- முதல் கட்டம்: மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
- இரண்டாம் கட்டம்: பஞ்சாயத்து, பேரூராட்சி போன்ற உள்ளாட்சித் தேர்தல்கள், பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.
- பொதுவான வாக்காளர் பட்டியல்: அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும்.
- விரிவான விவாதம்: இந்த விவகாரம் நாடு முழுவதும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும்.
- சிறப்பு குழு: தேர்தல் முறையில் மாற்றங்களை அமல்படுத்த சிறப்பு குழு அமைக்க வேண்டும்.
அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி அமைக்குமா?
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை 1983-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. ஆனால், அப்போது மத்தியில் இருந்த இந்திரா காந்தி அரசு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அதன்பிறகு இந்தியாவின் சட்ட ஆணையம், 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்தது. அப்போது மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருந்தது.
2014-ஆம் ஆண்டு பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த விஷயத்தை சேர்த்திருந்தது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதியும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மற்றும் மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகளும் அரசியல் ஆய்வாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கடந்த முறை ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. ஆனால், இந்த ஆண்டு இந்த இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடைபெற்றது. எதிர்கட்சிகள் இதனை ஒரு உதாரணமாக குறிப்பிடப்பட்டு வருகின்றனர்.
மூத்த வழக்கறிஞரும் அரசியல் சாசன நிபுணருமான சஞ்சய் ஹெக்டே, “இதை அமல்படுத்த அரசு, பல அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்ய வேண்டும். அதன் கூட்டணி கட்சிகள் இதை ஆதரிக்குமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி அமைக்கும் ஒன்றாக இருப்பதால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் உச்ச நீதிமன்ற பரிசீலனைக்காக செல்லும்” என்று குறிப்பிட்டார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு வகையான, அதிபர் முறை ஜனநாயகம் போல ஆகிவிடும். அதாவது ‘உங்களுக்கு நரேந்திர மோதியை பிடிக்குமா, பிடிக்காதா அல்லது ராகுல் காந்தியை பிடிக்குமா, பிடிக்காதா’ என்பதுபோல தேர்தல் ஆகிவிடும் என்று அவர் மேலும் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு