தென்னிந்தியாவில் ஐரோப்பாவுக்கு நிகராக குழந்தை பிறப்பு விகிதம் சரிவதால் காத்திருக்கும் புதிய சவால்
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர், இந்தியா
கடந்த ஆண்டு உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருந்தது.
தற்போது இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 1.45 பில்லியன் ஆகும். ஆகவே இந்தியா, இன்னும் குழந்தைகளை பெற்றெடுக்க மக்களை ஊக்குவிக்காது என்று நீங்கள் கருதலாம். ஆனால் சமீபகாலமாக அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பது பற்றிய விவாதங்கள் இந்தியாவில் அதிகம் எழுந்துள்ளன.
மக்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்பதை, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரித்து வருகின்றனர்.
குறைந்த குழந்தை பிறப்பு விகிதங்கள் மற்றும் வயதான மக்கள் தொகை ஆகியவற்றைக் காரணம் காட்டி, ஆந்திர பிரதேச மாநிலம், மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டுமென ஊக்குவிப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலின்போது “இரண்டு குழந்தைகள் கொள்கையை” அம்மாநில அரசு ரத்து செய்தது. அதன் அண்டை மாநிலமான தெலங்கானாவும் விரைவில், இதுபோல செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் தமிழ்நாடும் இது சார்ந்த கருத்துகளையே வலியுறுத்தி வருகின்றது.
இந்தியாவின் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. 1950 ஆம் ஆண்டு சராசரியாக ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற அளவில் இருந்த குழந்தை பிறப்பு விகிதம் தற்போது 2 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுள் 17-இல், மக்கள் தொகையை நிலையாக பராமரிக்க தேவையான அளவான, ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை பிறப்பு என்கிற அளவுக்கும் கீழே குழந்தை பிறப்பு விகிதம் உள்ளது.
ஐந்து தென்னிந்திய மாநிலங்களே இந்தியாவின் மக்கள் தொகை மாற்றத்திற்கு வழிவகுக்கின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஐந்து தென் மாநிலங்களிலும் மக்கள் தொகையை நிலையாக பராமரிக்க தேவையான அளவுக்கு குழந்தை பிறப்பு விகிதம் இல்லை. ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை பிறப்பு என்கிற நிலையை கேரளா 1988 ஆம் ஆண்டிலும், தமிழ்நாடு 1993 ஆம் ஆண்டிலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் 2000களின் நடுப்பகுதியிலும் அடைந்தன.
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என கவலை
தற்போது, ஐந்து தென் மாநிலங்களின் மொத்த குழந்தை பிறப்பு விகிதம் 1.6 க்கும் குறைவாக உள்ளது. கர்நாடகாவின் குழந்தை பிறப்பு விகிதம் 1.6 ஆகவும், தமிழ்நாட்டின் குழந்தை பிறப்பு சதவீதம் 1.4 ஆகவும் உள்ளது. எளிமையாக சொல்லவேண்டும் என்றால், இந்த தென் மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதங்கள், ஐரோப்பாவில் உள்ள பல வளர்ந்த நாடுகளுடன் ஒத்துப் போகின்றன அல்லது அதைவிடக் குறைவாக உள்ளன.
ஆனால் இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் வேறுபட்ட மக்கள் தொகை இருக்கின்றது. இதனால் நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் மத்திய அரசிடமிருந்து ஒவ்வொரு மாநிலமும் நிதி பெறும் அளவு ஆகியவை பாதிக்கப்படும் என்று இந்த தென் மாநிலங்கள் கவலைப்படுகின்றன.
“சிறந்த பொருளாதார செயல்திறன் மற்றும் மத்திய அரசின் வருவாயில் கணிசமான பங்களிப்பை வழங்கினாலும், மக்கள் தொகை சார்ந்த அவர்களின் கொள்கைகளுக்காக அவர்கள் பிரச்னைக்கு ஆளாவார்களோ என்று இந்த தென் மாநிலங்கள் அஞ்சுகின்றன”, என்று சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கழகத்தின் மக்கள் தொகை பேராசிரியரான ஸ்ரீனிவாஸ் கோலி பிபிசியிடம் கூறினார்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 2026 ஆம் ஆண்டில் இந்தியா தனது தேர்தல் தொகுதிகளின் எல்லையை மறுநிர்ணயம் செய்ய தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் தென் மாநிலங்கள் புதிய சவாலை எதிர்கொள்கின்றன.
மக்கள் தொகை எவ்வாறு மாறியுள்ளது என்பதை பொருத்து நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும். இதன் காரணமாக தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையலாம். மாநிலத்தின் மக்கள் தொகையை பொருத்தே மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படுவதால் தென் மாநிலங்களுக்கு நிதி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் அவர்கள் சொந்தமாக திட்டங்களை செயல்படுத்துவதை கடினமாக்கும் என்று அம்மாநிலங்கள் அஞ்சுகின்றன.
இந்திய நாடாளுமன்றத்தில் தொகுதிகள் ஒதுக்கப்படும் விதத்தில் வரவிருக்கும் மாற்றங்கள் (எல்லை மறுநிர்ணயம்) உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற தென் மாநிலங்கள் சில தொகுதிகளை இழக்கக் கூடும் என்றும் மக்கள்தொகை ஆய்வாளர்கள் கே.எஸ். ஜேம்ஸ் மற்றும் சுப்ரா கிருதி ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது (நிதி பங்கீடு) மற்றும் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மாநிலமும் எத்தனை தொகுதிகளை பெறுகின்றது என்பதில் மாற்றங்கள் விரைவாக செயல்படுத்தப்படாது என்று பிரதமர் நரேந்திர மோதி உட்பட பலரும் கூறியுள்ளனர்.
“ஒரு மக்கள் தொகை நிபுணராக, இந்த பிரச்னைகளை பற்றி மாநிலங்கள் இவ்வளவு கவலை கொள்ள தேவையில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் இதற்கு தீர்வு காண முடியும். என்னுடைய கவலை வேறு”, என்று ஸ்ரீனிவாஸ் கோலி கூறுகிறார்.
முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதால், அதன் மக்கள் தொகை மிக விரைவாக முதுமை அடைந்து வருகிறது. இதுவே இந்தியாவின் முக்கிய சவால் ஆகும் என்று மக்கள் தொகை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வயதானவர்களின் எண்ணிக்கை 7% -இல் இருந்து 14% ஆக இரட்டிப்பாக பிரான்சில் 120 ஆண்டுகள் ஆனது மற்றும் ஸ்வீடனில் 80 ஆண்டுகள் ஆனது. ஆனால் இந்தியா இந்த கட்டத்தை வெறும் 28 ஆண்டுகளில் எட்டும் என்று ஸ்ரீநிவாஸ் கோலி கூறுகிறார்.
இந்தியாவின் மக்கள் தொகை மிக விரைவாக முதுமை அடைந்து வருவது, குழந்தை பிறப்பு விகிதத்தின் வீழ்ச்சியுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில், மேம்பட்ட வாழ்க்கைத் தரம், கல்வி மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் வசதிகள் மேம்பட்டுள்ளன. இதனால் இயற்கையாகவே குழந்தை பிறப்பு விகிதத்தில் சரிவு ஏற்படுகிறது.
ஆனால் இந்தியாவில், குறைந்த அளவிலான சமூக- பொருளாதார முன்னேற்றம் இருந்த போதிலும், குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதன் காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்தது.
உதாரணத்திற்கு ஆந்திரா மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். அதன் குழந்தை பிறப்பு விகிதம் ஸ்வீடனுக்கு இணையாக 1.5 என்ற நிலையில் இருக்கின்றது. ஆனால் ஸ்வீடனுடன் ஒப்பிடுகையில் ஆந்திராவின் தனிநபர் வருமானம் 28 மடங்கு குறைவாக உள்ளது என்கிறார் ஸ்ரீநிவாஸ் கோலி. பெருகி வரும் கடன் மற்றும் குறைந்த பொருட்களுடன் இது போன்ற மாநிலங்கள் வேகமாக முதுமை அடைந்து வரும் மக்களுக்கு அதிக அளவில் ஓய்வூதியம் அல்லது சமூகப் பாதுகாப்பை வழங்க முடியுமா?
இந்தியாவின் முதுமை அடைந்து வரும் நிலை பற்றிய ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 40% க்கும் அதிகமான முதுமை வயதிலுள்ள இந்தியர்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஏழ்மையான நிலையில் இருக்கின்றார்கள். நாட்டின் செல்வம் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கும் போது அவர்கள் ஏழைகளின் மக்கள் தொகையில் 20% பங்கு வகிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
“இந்தியா பணக்கார நாடாக மாறுவதற்கு முன்பே அதிக முதியவர்கள் கொண்ட நாடாக மாறும்”, என்று ஸ்ரீநிவாஸ் கோலி கூறுகிறார்.
மக்கள் குறைந்த அளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் போது, முதியவர்களைக் கவனித்துக் கொள்வதற்கு குறைவான இளம் வயதினரே இருப்பார்கள். இந்தியாவில் வளர்ந்து வரும் முதியவர்களின் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க போதுமான மருத்துவமனைகள், சமூக கூடங்கள் மற்றும் முதியோர்கள் தங்குவதற்கான இடங்கள் (முதியோர் இல்லங்கள்) தயாராக இல்லை என்று மக்கள் தொகை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நகரமயமாக்கல், இடப்பெயர்வு மற்றும் மாறிவரும் தொழிலாளர் சந்தைகள் ஆகியவை மக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள வயதான உறுப்பினர்களை கவனித்துக் கொள்வதை கடினமாக்குகிறது. இது முன்பு இந்தியாவில் பெரிய பலமாக இருந்தது. இப்போது, அதிகமான வயதானவர்கள் தங்கள் குடும்பத்தினரின் போதிய ஆதரவின்றி தவிக்கின்றனர்.
அதிக மக்கள் தொகையில் இருந்து குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் இடம்பெயர்வதால், வேலைச் சந்தையில் போதுமான இளைஞர்கள் இருப்பதை உறுதி செய்யலாம். ஆனாலும், இது ஏற்கனவே அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தக் கூடும்.
“வளர்ந்து வரும் முதிய மக்கள் தொகையை சமாளிக்க, உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கவும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உரிய பராமரிப்பு அளிக்கவும் சமூக உள்கட்டமைப்பு ஆகியவற்றில் வலுவான முதலீடுகள் செய்வது அவசர தேவை” என்கிறார் ஸ்ரீநிவாஸ் கோலி.
தென் மாநிலங்களின் கவலைகள் போதாது என்பது போல், இந்த மாத தொடக்கத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) தலைவர் மோகன் பாகவத், ஒரு தம்பதியர் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். “மக்கள் தொகை அறிவியலின் படி, குழந்தை பிறப்பு விகிதம் 2.1-க்கு கீழே குறையும்போது, ஒரு சமூகம் தானாகவே அழிந்துவிடும். அது அழிக்க வேறு எதுவும் தேவைப்படாது”, என்று அவர் ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார்.
மோகன் பாகவத்தின் இந்த கருத்து, சில அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், அவை முற்றிலும் துல்லியமானவை அல்ல என்கின்றனர் மக்கள் தொகை ஆய்வாளர்கள்.
இதுபோல மக்கள் மிகக் குறைந்த அளவிலே குழந்தைகளைப் பெற்றால், வரும் 10 அல்லது 20 ஆண்டுகளில் மக்கள் தொகை விரைவில் வீழ்ச்சி அடையும் என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் மக்கள்தொகை நிபுணரான டிம் டைசன் கூறுகிறார்.
ஒரு பெண்ணுக்கு 1.8 என்ற குழந்தை பிறப்பு விகிதம் மெதுவாக மக்கள்தொகை குறைய வழிவகுக்கிறது. அதை நிர்வகிக்க முடியும். இருப்பினும், அது 1.6 அல்லது அதற்கும் குறைவாகக் குறைந்தால், மக்கள் தொகை வீழ்ச்சி வேகமாக அதிகரித்து, கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.
“சிறிய எண்ணிக்கையிலான மக்கள் இனப்பெருக்கம் மற்றும் வேலை செய்யும் வயதில் இருப்பார்கள். இது சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசாங்கத்திற்கு கடுமையான பிரச்னைகளை உருவாக்கும். இந்த போக்கு மக்கள் தொகை மாற்றத்தின் இயல்பான பகுதியாகும் ஆனால் அதனை மாற்றுவது மிகவும் கடினமாக இருக்கும்”, என்று டிம் டைசன் கூறுகிறார்.
இந்த பிரச்னையை ஏற்கனவே சில நாடுகள் சந்தித்து வருகின்றன.
கடந்த மே மாதம், தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், அந்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்த குழந்தை பிறப்பு விகிதத்தை “தேசிய அவசரநிலை” என்று அறிவித்தார் மற்றும் அதற்கான தீர்வு காண அதற்கென தனி அமைச்சகத்தையும் திட்டங்களையும் அறிவித்தார்.
கிரீஸின் குழந்தை பிறப்பு விகிதம் 1950 இல் இருந்ததை விட பாதியாக 1.3 ஆக சரிந்துள்ளது, இது நாட்டின் எதிர்காலத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் எச்சரித்தார்.
ஆனால், அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள மக்களை வலியுறுத்துவது வீண் என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“பெண்களும் இப்போது ஆண்களைப் போலவே பணிகளை செய்கின்றனர். இதனால் பாலின ஏற்றத்தாழ்வுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்த போக்கு மாற வாய்ப்பில்லை”, என்று டிம் டைசன் கூறுகிறார்.
தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில், மக்கள் குறைவாக குழந்தை பெற்றுக்கொள்வதால், அங்கு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது அம்மாநிலங்களுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது. இந்த இடைவெளியை நிரப்ப யார் வருவார்கள்? வளர்ந்த நாடுகள், குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை சரிசெய்ய முடியாமல், அவர்கள் முதுமை காலத்திலும் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருப்பதை மக்களிடம் வலியுறுத்த கவனம் செலுத்துகின்றன. இதனால் அவர்கள் இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வயதானாலும் தொடர்ந்து பணியாற்ற முடியும்.
இந்தியா ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று மக்கள் தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வயதானவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், அவர்கள் சமூகத்திற்கு இன்னும் பங்களிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், சுகாதார பரிசோதனைகளை மேம்படுத்துவதிலும் சமூக பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் சுறுசுறுப்பான மற்றும் வேலைக்கு செல்லும் முதுமையான மக்கள் தொகையை உறுதிபடுத்த முடியும்.
இந்தியா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உழைக்கும் வயதினருக்கான வேலைகளை உருவாக்கவும், முதியவர்களுக்கான வளங்களை ஒதுக்கவும் 2047 ஆம் ஆண்டு வரை வாய்ப்பு இருப்பதாக ஸ்ரீநிவாஸ் கோலி நம்புகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.