செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல்

பெர்சிவரன்ஸ் ரோவர், செவ்வாய், நாசா ஆய்வு

பட மூலாதாரம், NASA/JPL-Caltech

படக்குறிப்பு, நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் மிகவும் கடினமான, வழுக்கக்கூடிய நிலப்பரப்பைக் கொண்ட ஜெஸிரோ கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் ஏறுவதைக் காட்டும் புகைப்படம்.
  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்

செவ்வாய் கோளில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வரும் பெர்சிவரன்ஸ் ரோவர் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாயின் ஜெஸிரோ கிரேட்டரில் ஆய்வு செய்துகொண்டிருந்த ரோவர், தற்போது அந்தப் பெரும் பள்ளத்தில் இருந்து மேலேறி அதன் முனைப் பகுதிக்கு வந்துள்ளது.

இதன்மூலம், இதுநாள் வரை செய்த ஆய்வுகளைவிட, செவ்வாயின் ஆதிகால பாறைகளை ஆய்வு செய்யவும், அங்கு கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதைக் கண்டறியவும் ஒரு புதிய பாதை திறந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தில் ரோவரை கண்காணித்து வரும் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்கள் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளதாகவும், ரோவர் தரையிறங்கியதில் இருந்து இதுவரை காணாத மிகக் கடினமான நிலப்பரப்பில் அதைச் சாமர்த்தியமாக இயக்கி மேலே ஏற வைத்திருப்பதாகவும் இந்த ஆய்வுத் திட்டத்தின் துணை மேலாளரான ஸ்டீவன் லீ தெரிவித்துள்ளார்.

பெர்சிவரன்ஸ் ரோவரின் இந்தப் புதிய பயணம் எவ்வளவு முக்கியமானது? அதன் எதிர்கால ஆய்வுகளில் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன?

பெர்சிவரன்ஸ் ரோவர், செவ்வாய், நாசா ஆய்வு

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பழங்கால ஏரிப் படுகையில் நடந்த ஆய்வுகள்

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை இறுதியில், செவ்வாய் கோளை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற ரோபோட்டை நாசா விண்வெளிக்கு அனுப்பியது.

பூமியிலிருந்து விஞ்ஞானிகளால் இயக்கப்படுவது மட்டுமின்றி தானியங்கி செயல்திறனும் கொண்ட இந்த ரோவர், ஏழு மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 2021 பிப்ரவரியில் செவ்வாய் கோளில் தரையிறங்கியது.

ஒரு கோளின் மீது விண்கற்களோ சிறுகோள்களோ மோதும்போது, அதன் தாக்கத்தால் ஏற்படும் பள்ளமே கிரேட்டர் எனப்படுகிறது. செவ்வாயில் இருக்கும் அத்தகைய ஒரு பெரும்பள்ளமான ஜெஸிரோ கிரேட்டரில் பெர்சிவரன்ஸ் ரோவர் தனது ஆய்வைத் தொடங்கியது.

பெர்சிவரன்ஸ் ரோவர், செவ்வாய், நாசா ஆய்வு

பட மூலாதாரம், ESA/DLR/FU-Berlin

படக்குறிப்பு, ஜெஸிரோ கிரேட்டரில் உள்ள ஒரு பழங்கால டெல்டா பகுதியின் எச்சங்களைக் காட்டும் புகைப்படம். இங்குதான் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த ஜெஸிரோ கிரேட்டர் பகுதியில் பழங்காலத்தில் ஒரு ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

இதன் காரணமாக, செவ்வாயில் உயிர்கள் இருந்திருந்தால் அல்லது உயிர்கள் வாழ்வதற்கான சூழலில் இருந்தால் அதைக் கண்டுபிடிக்க இது சரியான இடமாக இருக்கக்கூடும் என்பதாலேயே நாசா விஞ்ஞானிகள் இந்த கிரேட்டரை பெர்சிவரன்ஸ் ரோவரின் ஆய்வுத் தளமாக முடிவு செய்தனர் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

“செவ்வாயில் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பாக, குறிப்பாக எந்தப் பகுதியில் ஆய்வு செய்தால் எதிர்பார்த்த தரவுகள் அதிகமாகக் கிடைக்கும் என்பதைத் திட்டமிட்டு, ஆய்வுப் பகுதி வரையறுக்கப்படும். அந்த வகையில், ஜெஸிரோ கிரேட்டரில் இருக்கும் ஒரு பழங்கால ஏரிப்படுகை தேர்வு செய்யப்பட்டது,” என்று அவர் விளக்கினார்.

அங்கு தரையிறங்கியது முதல், செவ்வாயின் நிலப்பரப்பில் உள்ள பாறை மாதிரிகளைச் சேகரிப்பது, அவற்றை ஆய்வு செய்வது, ஆதிகால உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைத் தேடுவது போன்ற பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளை மேற்கொள்வதோடு, அவற்றின் தரவுகளை பூமிக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டும் இருக்கிறது இந்த ரோவர்.

ரோவரின் ஆய்வுப் பணியில் புதிய மைல்கல்

பெர்சிவரன்ஸ் ரோவர், செவ்வாய், நாசா ஆய்வு

பட மூலாதாரம், NASA/JPL-Caltech

படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் ரோவரில் இருந்த கேமராக்களில் ஒன்று, ஜெஸிரோ கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் ஏறும்போது அது ஏற்படுத்திய தடங்களைப் படம் பிடித்துள்ளது.

பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியது முதல், ஜெஸிரோ கிரேட்டரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுக் காலமாக அந்தப் பெரும்பள்ளத்தின் பாறைகள், மண் பரப்பு, நிலவியல் ஆகியவற்றை ஆய்வு செய்துகொண்டிருந்தது.

கிட்டத்தட்ட நியூயார்க் நகரத்தின் பரப்பளவுக்கு நிகராக இருக்கும், 45 கி.மீ விட்டம் கொண்ட அந்தப் பெரும் பள்ளத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவியல் மாதிரிகளைச் சேகரித்து பெர்சிவரன்ஸ் ரோவர் ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று அதன் பாதையில் ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, அந்தப் பெரும் பள்ளத்தின் மேல் பகுதியான கிரேட்டர் ரிம்மில் (crater rim) வெற்றிகரமாக ஏறியுள்ளது. இந்த கிரேட்டர் ரிம் என்பது சிறுகோள் தாக்கத்தால் உருவான பள்ளத்தின் விளிம்புப் பகுதி என்று கூறலாம்.

“சிறுகோளோ, விண்கல்லோ மோதும்போது, அது ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்குகிறது. அப்போது, அந்தக் குழி – அதாவது பள்ளம் – உருவாகும்போது, அந்த நிலப்பரப்பில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்படும். அவை ஒரு கூட்டாகச் சேர்ந்து, கிரேட்டரின் ஓரங்களில் மேட்டுப் பகுதியாக உருவாகியிருக்கும்,” என்று விளக்கினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

பெர்சிவரன்ஸ் ரோவர், செவ்வாய், நாசா ஆய்வு

பட மூலாதாரம், NASA/JPL-Caltech

இதற்கு ஏரியின் அமைப்பை உதாரணமாகக் கூறுகிறார் அவர். ஒரு ஏரி அல்லது குளத்தின் விளிம்புகளில் அதன் கரைப்பகுதி சிறிது மேடாக இருப்பது போலவே, இங்கும் கிரேட்டரிலும் இந்த ரிம் என்ற அமைப்பு இருக்கும். அத்தகைய விளிம்புப் பகுதிதான் கிரேட்டர் ரிம் என்று அழைக்கப்படுகிறது.

“சிறுகோள் தாக்கத்தால் ஏற்படும் பள்ளத்திற்குள், சிறுகோளின் பொருட்கள் மற்றும் செவ்வாய் நிலப்பரப்பிலுள்ள பொருட்கள் கலந்த நிலப்பரப்புதான் இருக்கும். அங்குள்ள மண், பாறை என அதன் நிலவியல் முழுக்க அப்படித்தான் இருக்கும்.”

ஆனால், “கிரேட்டர் ரிம் பகுதியில் அதற்கும் முந்தைய, மிகவும் பழமைவாய்ந்த பாறைகள் மற்றும் நிலவியல் அமைப்பைக் காண இயலும். அவற்றை ஆய்வு செய்வதன் மூலம், செவ்வாயின் நிலவியலில் ஏற்பட்ட மாற்றங்களை அறிய முடியும்,” என்று விளக்கினார் வெங்கடேஸ்வரன்.

இத்தனை காலமாக ஜெஸிரோ பெரும் பள்ளத்தின் உள்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டிருந்த ரோவர் தற்போது அந்தப் பள்ளத்தின் மேட்டில் ஏறி, கிரேட்டர் ரிம் எனப்படும் விளிம்புப் பகுதிக்கு வந்துள்ளது. இதன்மூலம், செவ்வாய் கோளின் ஆதிகால பாறைகள் மற்றும் நிலப்பரப்பில் அதனால் ஆய்வு செய்ய முடியும்.

இதுகுறித்துப் பேசியபோது, “இளம் பாறைகளில் இருந்து பெர்சிவரன்ஸ் ரோவர் தனது கவனத்தை மிகப் பழமையான பாறைகளின் மீது திருப்பியுள்ளது” என்று கூறியுள்ளார் இந்த ஆய்வுத் திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான கென் ஃபார்லி.

அவரது கூற்றுப்படி, ஜெஸிரோ பெரும்பள்ளத்தில் இருக்கும் இளம் பாறைகள், சுமார் 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பிரமாண்ட சிறுகோள் மோதலில் விளைவாகத் தோன்றியவை. ஆனால், கிரேட்டரின் முனைப் பகுதியில் இருப்பவை, அதைவிடப் பல நூறு கோடி ஆண்டுகள் பழமையானவை.

ஆதிகால பாறைகளை ஆய்வு செய்வதால் என்ன பயன்?

பெர்சிவரன்ஸ் ரோவர், செவ்வாய், நாசா ஆய்வு

பட மூலாதாரம், NASA/JPL-Caltech/MSSS

படக்குறிப்பு, கடந்த ஜூலை 23ஆம் தேதியன்று பெர்சிவரன்ஸ் ரோவர் எடுத்த செல்ஃபி

இதுவரை ஜெஸிரோ பெரும்பள்ளத்தின் ஏரிப்படுகையில் உள்ள பாறைகளை ரோவர் ஆய்வு செய்தது. அவையனைத்துமே இளம் பாறைகள் என வரையறுக்கப்படுபவை. அதாவது, சிறுகோள் மோதலில் இந்தப் பெரும்பள்ளம் தோன்றிய பிறகு உருவானவை.

ஆனால், கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் அதைவிடப் பல கோடி ஆண்டுகள் பழமையான, செவ்வாயின் ஆழத்தில் புதைந்துகிடந்து சிறுகோள் மோதலின்போது வெளிவந்த பாறைகளைக் கொண்டுள்ளது.

இந்தப் பாறைகள், ஜெஸிரோ கிரேட்டர் உருவாகக் காரணமாக இருந்த சிறுகோள் மோதியதற்கும் நெடுங்காலம் முன்பே செவ்வாயில் தோன்றிய ஆதிப் பாறைகள் என்பதால் அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல அறியப்படாத தகவல்கள் தெரிய வரக்கூடும்.

அதோடு, “இந்தப் பாறைகள் அந்த நிலப்பரப்பின் ஆழத்தில் முன்னர் புதைந்திருந்தவை. சிறுகோள் மோதலின் விளைவாக அவை மேலே வெளிப்பட்டிருப்பதால், ஆழத்திற்குத் தோண்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே அவற்றை ரோவரால் ஆய்வு செய்ய முடியும்,” என்கிறார் முனைவர் வெங்கடேஸ்வரன்.

இத்தகைய ஆதிகால பாறைகளை ஆய்வு செய்வதன் மூலம், அந்த செவ்வாயின் பல கோடி ஆண்டுக்கால இயற்கை வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பெர்சிவரன்ஸ் ரோவர், செவ்வாய், நாசா ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

இவற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், “வளிமண்டலம், காலநிலை ஆகியவற்றின் விவரங்கள் உள்பட செவ்வாயின் ஆரம்பக்கால இயற்கை வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும். அதுமட்டுமின்றி, பூமியின் ஆதிகால நிலவியலை, சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்வதிலும் இந்த ஆய்வின் தரவுகள் உதவக்கூடும்,” என்கிறார் வெங்கடேஸ்வரன்.

மேலும், செவ்வாயின் பழங்கால சுற்றுச்சூழல் உயிர்கள் வாழ ஏதுவானதாக இருந்திருக்ககூடும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே, அங்கு உயிர்கள் வாழ ஏதுவான சூழல் வரலாற்றின் ஏதாவதொரு கட்டத்திலேனும் நிலவியதா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இந்தப் பாறைகள் உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் பெரிய இடையூறுகள் இல்லாத நிலவியலில் செயல்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர் தற்போது மிகவும் கடினமான கிரேட்டர் ரிம் பகுதியில் ஏறும் அளவுக்குத் திறன் பெற்றுள்ளது.

“இந்த முன்னேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம், இந்த ரோவர் செவ்வாயின் நிலவியல் குறித்த இன்னும் பல அறியப்படாத தகவல்களை வழங்கக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.