- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்தி
கூகுள் மேப் காட்டிய வழியில் கோவா செல்ல முயன்று டெல்லியில் இருந்து காரில் கிளம்பிய சிலர் நள்ளிரவில் கர்நாடகா அருகே நடு காட்டில் சிக்கியுள்ளனர். காரணம் என்ன? கூகுள் மேப்பை சரியாகப் பயன்படுத்துவது எப்படி?
ராஜ் தாஸ் என்ற 28 வயதான இளைஞர், நாடு முழுக்கப் பல்வேறு இடங்களுக்கு காரில் பயணித்துள்ளார். அவர் தனது பயணத்திற்கு வழிகாட்டியாக கூகுள் மேப் போன்ற ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்தும் பழக்கமுடையவர்.
அந்த வகையில், ராஜ் தாஸ் கடந்த வாரம் எதிர்கொண்ட ஒரு சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கோவாவில் பனாஜிக்குச் செல்ல அவர் கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார்.
கூகுள் மேப்பை வழிகாட்டியாகக் கொண்டு, சக ஊழியர் மற்றும் இரண்டு உறவினர்களுடன் தனது காரில் அவர் புறப்பட்டார். டெல்லியில் இருந்து கிளம்பிய அவர்களின் பயணத்தின் நடுவே, கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் இருந்தபோது ஒரு குறுக்கு வழியில் தாஸ் சென்றார். ஆனால், அவர் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கானாபூர் காட்டுப் பகுதியில் சிக்கிக் கொண்டார்.
“அது யு-டர்ன் கூட எடுக்க முடியாத பாதை. எங்களுக்கு முன்பாக சாலை எதுவும் இருக்கவில்லை, நாங்கள் காட்டில் இருந்தோம்,” என்று தாஸ் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
நல்வாய்ப்பாக, இது உத்தர பிரதேசம் பரேலியில் நடந்ததைப் போல் முழுமையடையாத மேம்பாலம் இல்லை. உத்தர பிரதேசத்தில் ஒரு கார் முழுமையாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் இருந்து பல அடி கீழே விழுந்ததில் அதிலிருந்த 3 பேரும் உயிரிழந்தனர்.
ராஜ் தாஸ் மற்றும் அவரது நண்பர்களுக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. அவர்கள் சிக்கிய அந்த ஆபத்தான காட்டிற்குள் மொபைல் போன்களில் சிக்னல் கூட கிடைக்காமல் நள்ளிரவில் இருந்து காலை வரை இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவா செல்ல முயன்றவர்கள் காட்டுக்குள் சிக்கியது எப்படி?
தாஸ் மற்றும் அவரது சகாக்கள், பேமென்ட் கேட்வே தொடர்பான ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் பனாஜியில் ஒரு மாநாட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்பியுள்ளனர். அந்த மாநாட்டின் வேலைகளை முடித்துவிட்டு, சில நாட்கள் கோவாவில் ஓய்வெடுக்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதனால், அவர்களுடன் ராஜ் தாஸின் இரண்டு உறவினர்களும் சென்றுள்ளனர்.
“நாங்கள் முழுநேரமும் கூகுள் மேப்பை பயன்படுத்தியே பயணித்தோம். அதுவரை எந்தப் பிரச்னையையும் சந்திக்கவில்லை,” என்று தாஸின் உறவினரான ஆகாஷ் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
ராஜ் தாஸ், டெல்லியில் இருந்து பெலகாவி வரை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளார். ஆனால், பெலகாவியில் ஓரிடத்தில் தேசிய நெடுஞ்சாலை முடியவே, அதற்கு அருகில் கோவா நோக்கிச் செல்வதற்கான ஒரு சாலை என கூகுள் மேப்பில் காட்டப்பட்டுள்ளது. ஆகையால், அவர் அந்தச் சாலையில் செல்ல முடிவெடுத்தார்.
அப்போது வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் காலை 6 மணிக்குத்தான் அந்தச் சாலைக்கான கதவுகள் திறக்கப்படும் எனக் கூறியுள்ளனர். ஆனால், “நாங்கள் அதிகாலையில் 2 அல்லது 3 மணியளவில் அங்கு இருந்தோம். பின்னர் அதிகாரிகள் பாதையின் முடிவில் உடனடியாக வலதுபுறம் திரும்புமாறும், அங்கு தேசிய நெடுஞ்சாலையை அடையலாம் என்றும் எங்களுக்குப் பரிந்துரைத்தனர்,” என்று தாஸ் நடந்ததை விவரித்தார்.
நெடுஞ்சாலைப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அந்தச் சிறிய சாலையில் சுமார் 4.5கி.மீ பயணித்து நெடுஞ்சாலையை அடையலாம் என்று அதிகாரிகள் கூறியதாக தாஸ் கூறுகிறார்.
பின்னர் கூகுள் மேப் காட்டிய திசையைப் பின்தொடர்ந்து சென்றபோது, ஒரு மண் சாலை இருப்பதைக் கண்டதாகவும், அந்த நேரத்தில் மேலும் சில வாகனங்கள் தங்களைக் கடந்து செல்வதைக் கண்டதாகவும் தாஸ் கூறினார். தன்னுடன் நான்கு பேர் இருந்ததால், தானும் அந்தச் சாலையில் செல்ல முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
“இதற்கு முன் இதுபோன்ற சாலையை நான் கண்டதே இல்லை. அது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சுமார் இரண்டு, மூன்று கிலோமீட்டர் சென்ற பிறகுதான் அங்கு சாலையே இல்லை என்பதை உணர்ந்தோம்,” என்றார்.
“இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அங்கு யு-டர்ன் கூட எடுக்க முடியவில்லை. ஆகையால், எங்களால் சாலை தொடங்கிய இடத்திற்குத் திரும்பிச் செல்லக்கூட முடியவில்லை,” என்று விவரித்தார் ராஜ் தாஸ். “அது ஆபத்தான காடு” என்று முன்பே கூறப்பட்டிருந்ததால், அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க நினைத்தனர்.
தொலைபேசி இணைப்பும் கிடைக்காத சூழலில், நான்கு பேரும் காருக்கு உள்ளேயே காலை வரை இருந்துள்ளனர்.
அதிகாலையில் தொலைபேசி நெட்வொர்க் கிடைப்பதற்காக அவர்கள் சில கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்றுள்ளனர். அங்கிருந்து வனத்துறையைத் தொடர்புகொள்ள முயன்றனர். பின்னர் 112 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொண்டு விஷயத்தை தெரிவித்தனர்.
காலை 6 மணியளவில் காவல் துணை ஆய்வாளர் கே.எல்.படிக்கர் அவர்களை மீட்பதற்கு வந்தார். காவல்துறைக்காகக் காத்திருந்த அந்த நான்கு பேருக்கும் அன்றைய சூரிய உதயம் நம்பிக்கையளித்தது. அந்த நேரத்தில் தாஸும் அவரது உறவினரும் அந்தப் பாதை ஒரு சிறிய கால்வாயை நோக்கிச் செல்வதைக் கண்டனர்.
விடை தெரியாத கேள்விகள்
“அங்கு பாதை இல்லையெனில், வனத்துறை அதிகாரிகள் எங்களை எதற்காக அந்தச் சாலையில் செல்லுமாறு கூறினார்கள்?” என்று கேள்வியெழுப்பும் ராஜ் தாஸ், அது காட்டுப் பகுதி என்பதைக் குறிக்கும் வகையில் சாலையில் எங்குமே பலகை இல்லை என்றும் கூறினர்.
மேலும் இரவில் அனுமதிக்கப்படாத ஒரு பாதையை கூகுள் காட்டியது குறித்துப் பேசிய அவர், “கூகுள் மேப்பிலும் இப்போதெல்லாம் இத்தகைய பல தவறான வழிகள் காட்டப்படுகின்றன. இதற்கு முன்பு இவ்வளவு தவறான பாதைகளை நாங்கள் பார்த்தது இல்லை,” என்று கூறினார்.
ஆகையால், கூகுள் மேப் பயன்படுத்துவோருக்கு தாஸ் சில ஆலோசனைகளைக் கூறுகிறார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கூகுள் மேப் பயன்படுத்துவதைத் தான் முற்றிலும் நிறுத்திவிடவில்லை என்று கூறுகிறார் ராஜ் தாஸ்.
“அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் நான் கூகுள் மேப் பயன்படுத்துகிறேன். ஆனால் முன்பு பயன்படுத்திய அதே வழிமுறைகளின்படி இல்லை.”
“முன்பெல்லாம் நான் கூகுள் மேப்பையே முழுவதுமாக நம்பியிருந்தேன். ஏனெனில், நாம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தனியாக, அதுவும் விவரம் தெரியாத இடத்திற்குப் பயணிக்கும் போது, இந்தச் செயலியை முழுமையாகப் புறக்கணிக்க முடியாது,” என்று கூறுகிறார் தாஸ்.
ஆனால், “அதைப் பயன்படுத்துவது நல்லது என்றாலும், அதையே முற்றிலுமாகச் சார்ந்திருக்கக் கூடாது” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
கூகுள் மேப் காட்டும் வழிகளைப் பற்றி உள்ளூர் மக்களிடம் விசாரித்து தொடர்ச்சியாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அத்தகைய அணுகுமுறைகளின் மூலம், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் என்றும் ராஜ் தாஸ் நினைக்கிறார்.
கூகுள் நிறுவனத்தின் தகவல்கள் கூறுவது என்ன?
கூகுளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, அந்த நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பையும் அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
“பயனர்களுக்குப் பயனுள்ள, அவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க ஏதுவான தகவல்களை வழங்கத் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்” என்று கூகுள் கூறியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் நிகழும் மாற்றங்கள் மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும், அது தங்களுக்குக் கிடைக்கும் தரவுகளுக்கு சவாலாக இருப்பதாகவும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.
உதாரணமாக, “ஏ’ என்ற இடத்தில் இருந்து ‘பி’ என்ற இடத்திற்குச் செல்வதற்கான சிறந்த, பாதுகாப்பான பாதை கூட, வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்ற காரணிகளால் மாறக்கூடும்,” என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கூகுள் மேப் வரைபடத்தைப் புதுப்பிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், டேட்டா பார்ட்னர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து தினசரி பெறப்படும் கோடிக்கணக்கான உள்ளீடுகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்துகிறது.
நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன் கூகுள் இணைந்து பணியாற்றுகிறது. சாலைகள் மூடப்பட்டிருந்தால் அல்லது ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலைப் பெறுவதே இந்தக் கூட்டாண்மையின் நோக்கம். கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டியின்போதும், உலகக்கோப்பை போட்டியின் போதும் இந்த அணுகுமுறை காணப்பட்டது.
இதுதவிர, அல்காரிதம்கள், ஆபரேஷன் சேனல்கள், பயனர்கள் பதிவு செய்யும் புகார்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் சாலைகளின் மாறி வரும் நிலை குறித்த தகவல்களை கூகுள் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.
இருப்பினும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகவும், அவற்றை மேம்படுத்த பணியாற்றி வருவதாகவும் கூகுள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நிதின், அஜித், அமித் என்ற மூன்று சகோதரர்கள் காரில் முழுமையடையாத பாலத்தின் மீது சென்றதால் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தில், நான்கு பொறியாளர்கள் மற்றும் பெயர் வெளியிடப்படாத கூகுள் மேப்ஸ் அதிகாரி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.