by adminDev2

போலியான கல்வித் தகைமையை குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய அசோக்க ரன்வலவுக்கு எதிரான நடவடிக்கை என்ன? – சாகர காரியவசம் ! on Sunday, December 15, 2024

போலியான கல்வித் தகைமையை குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி, பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வலவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்னவென்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகத்தை மக்கள் வெகுவிரைவில் விளங்கிக்கொள்வார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

சபாநாயகர் பதவியை அசோக்க ரன்வல இராஜினாமா செய்தமை குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தது வரவேற்கத்தக்கது.

போலியான கல்வித் தகைமையை சமர்ப்பித்து, சபாநாயகராக பதவி வகித்ததன் பின்னர் உண்மை வெளிவந்ததை தொடர்ந்து ஏற்பட்ட கடும் சர்ச்சையால் சபாநாயகர் பதவி விலகினார்.

போலியான கல்வி தகைமையை காண்பித்து ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய அசோக்க ரன்வலவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

போலியான வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.அவர்கள் குறிப்பிட்ட விடயங்கள் அவர்களுக்கே எதிரானதாக அமையும். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும்.

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அரசாங்கத்தின் தவறை சுட்டிக்காட்டும் பலமிக்க எதிர்க்கட்சியாக நாங்கள் செயற்படுவோம்.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் பிரதான அரசியல் கட்சியாக மீண்டும் எழுச்சிப் பெறுவோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்