ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க ‘நியாண்டர்தால்’ அடிகோலியது எப்படி?
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
ஆரம்ப காலத்தில் மனிதர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெற்றிகரமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறுவதற்கு முன்பு பல முறை அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் முடிவுகள் தெரிவித்துள்ளன.
புதிய மரபணு ஆராய்ச்சி, நவீன மனிதர்கள் உயிர் வாழ நியாண்டர்தால் மனிதர்கள் முக்கியமான பங்கு வகித்தனர் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.
ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய பிறகு ஆரம்பகால ஐரோப்பிய மக்களே உலகில் ஆதிக்கம் செலுத்தும் மனித இனமாக நீண்ட காலத்திற்கு கருதப்பட்டது. ஆனால் நியாண்டர்தாலுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்ட மனித இனத்தால் மட்டுமே செழித்து வாழ முடிந்தது, மற்ற மனித இனங்கள் அழிந்துபோயின என்று இந்த புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
உண்மையில், நாம் இதற்கு முன்பு எதிர்கொள்ளாத புதிய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க நியாண்டர்தால் மரபணுக்கள் முக்கியமானதாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
48,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஹோமோ சேபியன்ஸ் (இன்றைய மனிதர்கள்), நியாண்டர்தாலுடன் குறுகிய காலத்திற்கு இனச்சேர்க்கையில் ஈடுபட்டதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதன் பிறகு இந்த மக்கள் உலகம் முழுவதும் சென்று வாழத் தொடங்கினர்.
“ஹோமோ சேபியன்ஸ் அதற்கு முன்பும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் அந்த மக்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. நியாண்டர்தாலுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பின்பு தான் அவர்களால் வெற்றிகரமாக உலகம் முழுவதும் சென்று வாழ முடிந்தது” என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் பரிணாம உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியர் ஜோஹன்னஸ் கிரவுஸ், பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில், நவீன மனிதர்களின் வரலாறு இனி மாற்றி எழுதப்பட வேண்டும் என்று கூறினார்.
“நாம் நவீன மனிதர்களை ஒரு பெரிய வெற்றிக் கதையாகப் பார்க்கிறோம், 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, உலகெங்கும் சென்று வாழ்ந்து, இந்த கிரகத்தின் மிகவும் வெற்றிகரமான உயிரினமாக மாறியுள்ளோம். ஆனால் ஆரம்பத்தில் இது போன்ற நிலை இல்லை, நமது இனம் பல முறை அழிந்து போயிருக்கிறது.”, என்று அவர் கூறினார்.
நீண்ட காலமாக, நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் புதைபடிவ எச்சங்களின் வடிவங்களை ஆராய்ந்து, அந்த மக்களின் உடற்கூறியல் காலப்போக்கில் எவ்வாறு மெதுவாக மாறியது என்பதை கவனித்ததன் மூலமும், எப்படி ஒரே ஒரு மனித இனம் உயிர் பிழைத்து, பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை தெரிந்துகொள்ளமுடிந்தது.
இந்த புதைபடிவ எச்சங்கள் அரிதானவை மற்றும் பெரும்பாலும் சேதமடைந்த நிலையில் மட்டுமே கிடைக்கும். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான எலும்புகளிலிருந்து மரபணு குறித்த தரவுகளை பற்றி செய்த ஆராய்ச்சி, மனித இனத்தின் மர்மமான கடந்த காலத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
புதைபடிவங்களில் உள்ள மரபணுக்கள் மூலம், அந்த மக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தனர் என்பதை பற்றிய கதைகளை நமக்கு கூறுகிறது.
நியாண்டர்தாலுடன் இந்த மக்கள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த பிறகும், ஐரோப்பாவில் உள்ள இந்த மக்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது.
நியாண்டர்தாலுடன் வெற்றிகரமாக இனச்சேர்க்கை செய்த முதல் நவீன மனிதர்கள் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் சந்ததியினர் உலகம் முழுவதும் சென்று பரவி வாழத் தொடங்கியதற்கு முன்பு, ஐரோப்பாவில் முற்றிலும் அழிந்து போயினர்.
நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே வந்த பிறகு நியாண்டர்தால்கள் ஏன் இவ்வளவு விரைவாக அழிந்துபோயினர் என்பதற்கான புதிய கண்ணோட்டத்தையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது.
இது ஏன் நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், நம் மனித இனம் அவர்களை வேட்டையாடி அழித்தது அல்லது நாம் அவர்களைவிட எப்படியாவது உடல் ரீதியாகவோ அல்லது அறிவு ரீதியாகவோ மேம்பட்டவர்கள் என்ற கோட்பாடுகளிலிருந்து புதிய ஆதாரங்கள் நம்மை வேறு பக்கம் திருப்புகின்றன.
மாறாக, நியாண்டர்தால்களின் அழிவு சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்பட்டது என்று பேராசிரியர் க்ராஸ் கூறுகிறார்.
“அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் ஐரோப்பாவில் ஹோமோ சேப்பியன்ஸ், நியாண்டர்தால் ஆகிய இரு மனித இனங்களுமே எண்ணிக்கையில் குறைந்து வந்துள்ளன. இன்றும் வெற்றிகரமாக இருக்கும் நமது இனமே( ஹோமோ சேப்பியன்ஸ்) அந்த பகுதியில் முழுமையாக அழிந்துவிட்ட நிலையில், அதைவிட குறைந்த எண்ணிக்கையில் இருந்த நியாண்டர்தால்கள் அழிந்து போனதில் பெரிய ஆச்சரியம் இல்லை,” என்று அவர் கூறினார்.
அந்தக் காலத்தில் காலநிலை மிகவும் நிலையற்றதாக இருந்தது. சில சமயங்களில் இன்று இருப்பதைப் போலவே அப்போது சூழல் வெப்பமாக இருந்திருக்கலாம் அல்லது திடீரென கடுங்குளிராக மாறியிருக்கலாம், என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் ஸ்ட்ரிங்கர் கூறுகிறார்.
“நியாண்டர்தால் மக்களின் இறுதி காலகட்டத்தில் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுடன் வாழ்ந்த நவீன மனிதர்களை (ஹோமோ சேப்பியன்ஸ்) விட அவர்கள் மரபணு ரீதியாக குறைவான வேறுபாடு கொண்டவர்கள். இதனால் அவர்கள் அழிவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை என்று இந்த ஆய்வு காட்டுகிறது”, என்று அவர் கூறினார்.
“நியாண்டர்தால்களிடம் இருந்து நவீன மனிதர்கள் சில முக்கிய மரபியல் பண்புகளை பெற்றிருந்ததாக ஆய்வு கூறுகிறது. அது அவர்களுக்கு ஒரு பரிணாம நன்மையை அளித்திருக்கலாம்” என்று சயின்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு மரபணு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
ஒன்று அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையது. ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றிய போது, அவர்கள் இதுவரை சந்தித்திராத புதிய நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்பட்டனர். நியாண்டர்தாலுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்டதே அவர்களின் சந்ததியினருக்குப் பாதுகாப்பைக் கொடுத்தது.
“ஒருகட்டத்தில் நியாண்டர்தால் மரபணுவை பெற்றதன் மூலம் இந்த மனிதர்களால் ஆப்பிரிக்காவிற்கு வெளியே சென்று சிறந்த வாழ்க்கையை வாழ ஏதுவாக இருந்தத்து”, என்று பேராசிரியர் ஸ்டிரிங்கர் கூறினார்.
“நாம் ஆப்பிரிக்காவில் உருவானோம், அதேநேரம் நியாண்டர்தால்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரிணாம வளர்ச்சியடைந்தனர்”. என்றும் அவர் தெரிவித்தார்.
“நியாண்டர்தால்களுடன் இனச்சேர்க்கை செய்ததன் மூலம் நமது நோயெதிர்ப்பு சக்தி வலுவானது”. என்பது அவரது கருத்து.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.