இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி முறைமைக்கு புதிய அரசாங்கத்தை வற்புறுத்துவது தொடர்பில் வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில், 2016ஆம் ஆண்டு தமிழ் வெகுஜன அமைப்புகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டு பேச்சுக்களை முன்னெடுப்பதே, பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் ஒற்றையாட்சியையும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையையும் பாதுகாக்கும் வகையில் மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை வரைபை இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்வதற்கான விருப்பத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
2016ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவுகளில் முதன்மையானது இலங்கை ஒரு சமஷ்டி குடியரசாக இருக்க வேண்டும் என்பதாகும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் தமிழ் தேசிய கட்சிகளிடையே ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.