தென் தமிழகத்தில் தொடரும் கனமழை: நிரம்பும் அணைகள், ஏரிகள் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை மழை, வடகிழக்கு பருவமழை, தமிழக வானிலை, சென்னை வானிலை

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 11ம் தேதி முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

பல்வேறு அணைகள் மற்றும் ஏரிகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் டிசம்பர் 13 (வெள்ளி) காலை முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது? எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது? பிரதான அணைகள் மற்றும் நீர்தேக்கங்களின் நிலவரம் என்ன? முழு விபரமும் இந்த செய்தித் தொகுப்பில்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இன்று எந்தெந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் அதிகமான இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் கன்னியாகுமரியின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி டவுன் பகுதியை சூழ்ந்த வெள்ளம்

படக்குறிப்பு, திருநெல்வேலி டவுன் பகுதியை சூழ்ந்த வெள்ளம்

தாமிரபரணி நதியோர மக்களுக்கு எச்சரிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ராமநதி, கடனாநதி பகுதிகள் மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவு நீர் தாமிரபரணி ஆற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.

தாமிரபரணி அணையில் இருந்து விநாடிக்கு 1500 கனஅடி நீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது என்ற போதிலும், மழைநீர் காரணமாக தாமிரபரணி சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சுமார் 41,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்ற காரணாத்தால் தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறைகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு, சென்னை மழை, வடகிழக்கு பருவமழை, தமிழக வானிலை, சென்னை வானிலை

பட மூலாதாரம், @Collectortnv/x

படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு

நேற்று இரவு முழுவதும் பெய்த மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் குறிப்பாக திருநெல்வேலி டவுன் குன்னத்தூர் சாலை பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி செல்வதால், தெருக்களிலும் வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள பாத்திரங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் எடுத்துச் செல்கின்றனர்.

தென்காசி மாவட்டத்தின் நிலை என்ன?

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிச. 12 அதிகாலை முதல் தற்போது வரை கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக, நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சுமார் 1,884 மில்லி மீட்டர் மழைப்பொழிவு தென்காசி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மேலும், குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக, குற்றாலம் மெயின் அருவி கரையில் உள்ள கைப்பிடிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.

மேலும், பொதுமக்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு போலீசார் தடை விதித்துள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருவதால், நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தஞ்சாவூர் குளம் உடைந்து கேரளாவிற்கு செல்லும் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஆனது வெள்ளநீர் சூழ்ந்து சாலை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கேரளாவிற்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்

படக்குறிப்பு, குற்றாலத்தில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர், திருவேங்கடம், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், பனவடலிசத்திரம், நடுவக்குறிச்சி, இருமன்குளம், கரிவலம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.

அதனால் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும், புளியங்குடி செல்லும் சாலையில் தண்ணீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும், வடக்குப்புதூர் கிராமத்தில் புளியங்குடி செல்லும் சாலையில் தண்ணீரானது தேங்கியுள்ளது. அதனை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் என்ன நிலை?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இனாம் மணியாச்சி, அத்தைக்கொண்டான் கண்மாய்கள் முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது.

இளையரசனேந்தல் சாலையில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்துகள் வெளியே வர முடியாமல் உள்ளன.

மேலும், அண்ணா பஸ் நிலையத்திற்குச் சென்ற அரசு பேருந்து மழைநீரில் சிக்கி வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளது.

அதேபோன்று, அப்பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க், லாரி செட்டுகள், தனியார் நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தேனி மாவட்டத்தின் நிலை

தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், சுருளி அருவியின் நீர்பிடிப்புப் பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி அருவி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்ததால், இன்று அதிகாலை முதலே அருவியில் அதிகளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று முதல் தொடர் தடை விதித்துள்ளனர்.

மேலும், நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும், சுருளி அருவியின் ஆற்றுப் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றுப் பகுதிக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் கரையோரப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தின் நிலவரம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் பரப்பளாறு அணைக்கு தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியும் முழுவதுமாக நிரம்பியுள்ளது.

அணைக்கு விநாடிக்கு 3,760 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும், அணையில் இருந்து விநாடிக்கு 1,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒட்டன்சத்திரம் நங்கஞ்சி ஆறு கரையோர உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை

தமிழக – கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் மூன்றாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 120.65 கன அடியாக உள்ளது.

தமிழக – கேரளா எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை உள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர்ப்பாசன ஆதாரமாகவும் இந்த முல்லைப் பெரியாறு அணை உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று வரை வெறும் 300 கன அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 3,153.11 கன அடியாக அதிகரித்து வருகின்றது.

மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 400 கன அடியாகவும், அணையின் மொத்த நீர் இருப்பு 3,479.40 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

தற்போது 152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 120.65 அடியாக இருந்து வருகிறது.

இதனைத் தவிர்த்து, அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான ஏரிகளில் இருந்து நீர் வெளியேற்றம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

21.20 அடி ஆழம் கொண்ட ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியாகும். டிசம்பர் 13 காலை நிலவரப்படி நீர் இருப்பு 19.69 அடியாகவும், கொள்ளளவு 2,950 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. மேலும் நீர் வரத்தானது விநாடிக்கு 2,281 கன அடியாக இருப்பதை தொடர்ந்து உபரி நீர் திறக்கப்படும் என்றும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் போன்ற பகுதிகளில், கால்வாயின் இரு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் நிலை என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் அணையின் மொத்த உயரம் 24 அடியாகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23.29 ஆக இருந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 13ம் தேதி காலை 8 மணியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளாது.

“ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,” என்று நீர்வளத்துறை தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதே போன்று, திருவள்ளூரில் அமைந்திருக்கும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னை மழை, வடகிழக்கு பருவமழை, தமிழக வானிலை, சென்னை வானிலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனமழையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரியில் இன்று மூன்றாவது நாளாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும், வீடூர் அணையிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனிடையே, வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலத்தின் கீழ் இளைஞர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தண்ணீரில் தத்தளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், சேலம், தர்மபுரி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் டிசம்பர் 13, வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர், திருச்சி, விழுப்புரம், தஞ்சை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.