குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?
- எழுதியவர், ரக்ஷனா ரா
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
இந்திய செஸ் வீரரான குகேஷுக்கு கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு ‘நெகட்டிவ்’ என வந்துள்ளது.
பொதுவாக, தடகளம் போன்ற உடல் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில்தான் ஊக்க மருந்து சோதனை நடைபெறும்.
ஆனால், செஸ் போன்ற அறிவுத்திறன் சார்ந்த விளையாட்டுகளிலும் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்படுமா? இந்தியாவின் முன்னணி வீரரான குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டதற்கு என்ன காரணம்? அதன் முடிவுகள் என்ன?
ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய செஸ் போட்டியான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த (2024) ஆண்டுக்கான செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டி, சிங்கப்பூரில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி, டிசம்பர் 13ஆம் தேதி நிறைவடைகிறது.
இதில், இந்தியாவை, குறிப்பாக சென்னையைச் சேர்ந்த குகேஷ் தொம்மராஜுவும், நடப்பு உலக சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரனும் மோதுகின்றனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் விஸ்வநாதன் ஆனந்திற்கு அடுத்து, உலக சாம்பியன்ஷிப்பை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை 18 வயதாகும் குகேஷ் பெறுவார். டொரன்டோவில் நடைபெற்ற கேன்டிடேட்ஸ் டோர்னமென்டில் வெற்றி பெற்று இந்தப் போட்டியில் பங்குபெறும் வாய்பை குகேஷ் பெற்றுள்ளார்.
இந்தத் தொடரானது 14 சுற்றுகளை உள்ளடக்கியது. இரண்டு போட்டியாளர்களுமே ஒரே மதிப்பெண்களைப் பெறும் பட்சத்தில் அவர்களுக்கு டை-பிரேக்கர் சுற்று நடைபெறும்.
இதற்கிடையில், கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டியில், குகேஷ் வெற்றி பெற்ற பின் அவரை ஊக்க மருந்து சோதனைக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பரிசோதனையின் முடிவுகள் ‘நெகட்டிவ்’ (ஊக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை) என்று வந்துள்ளது.
ஊக்க மருந்து பரிசோதனை என்பது என்ன, எதற்காக அதை மேற்கொள்கின்றனர்? செஸ் வீரர்களுக்கான ஊக்க மருந்து பரிசோதனை எவ்வாறு இருக்கும்?
ஊக்க மருந்து பரிசோதனை என்பது என்ன?
விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள், அவர்களுடைய செயல்திறனை அதிகரிக்க ஊக்க மருந்துகளை உட்கொள்வர். இது விளையாட்டு விதிகளின் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு வீரர்கள் ஊக்க மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனரா என்பதைக் கண்டறியும் பரிசோதனைதான் இது. இதை மேற்கொள்ளும் வீரர்கள் தங்களது ரத்த மாதிரிகளையோ அல்லது சிறுநீர் மாதிரிகளையோ பரிசோதனைக்குக் கொடுப்பர்.
செஸ் விளையாட்டில் எதற்காக டோப் டெஸ்ட் ?
செஸ் விளையாட்டை ஒலிம்பிக்ஸில் இணைப்பதற்காக 1999ஆம் ஆண்டு முதல் முறையாக செஸ் விளையாட்டில் ஊக்க மருந்து தடுப்பு செயல்முறை, சர்வதேச செஸ் கூட்டமைப்பால் (FIDE) அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக்ஸ் ஆணையத்தால் செஸ் அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும், உடல் சார்ந்த விளையாட்டாக இது இல்லாததால் செஸ் இன்னும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டாக அறிவிக்கப்படவில்லை.
செஸ் விளையாட்டில் ஊக்க மருந்தை உட்கொள்வதற்கான சாத்தியம் இல்லை என்ற பரவலான கூற்றுக்கு எதிராக இந்தப் பரிசோதனை கொண்டு வரப்பட்டது. பொதுவாக பளுதூக்குதல், தடகளம் போன்ற உடல் செயல்பாடு மிக்க விளையாட்டுகளுக்குத்தான் ஊக்க மருந்து பரிசோதனை தேவைப்படும் என்ற கருத்து இருந்து வந்தது.
ஏனென்றால், மருந்துகளை உட்கொள்ளும்போது உடலின் வேகம் மற்றும் செயல் திறன் அதிகரிக்கும். ஆனால், ஆராய்ச்சிகளின்படி குறிப்பிட்ட சில மருந்துகளால் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், கூர்மையாக்கவும் முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
எந்தெந்த மருந்துகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது?
ஐரோப்பிய நரம்பியல் மருந்தியல் கல்லூரியின் அதிகாரப்பூர்வ ஆய்வு, மெதில்பெனிடேட் (Methylphenidate), மொடாபினில் (Modafinil) ஆகிய மருந்துகள் வீரர்களின் விளையாட்டில் 13% முதல் 15% அதிக செயல்பாட்டை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த மருந்துகள் போட்டியாளர்களை பல மணிநேரம் விழிப்புடன் இருக்கச் செய்யும். மொடாபினில் என்பது மாறுபட்ட நேரங்களில் வேலை பார்ப்பதால் ஏற்படும் ‘ஷிப்ட் வொர்க் ஸ்லீப் டிஸ்-ஆர்டர்’ (Shift work sleep disorder) என்ற நிலைக்கு வழங்கப்படும் மருந்தாகும். காலைப் பொழுது மற்றும் வேலை நேரங்களில் வரும் தூக்கத்தைக் கட்டுப்படுத்தி வெகுநேரம் விழிப்புடன் வைக்க இது உதவுகிறது.
ரிடலின் என்று அறியப்படும் மெதில்பெனிடேட், ஏடிஹெச்டி (ADHD) என்று அழைக்கப்படும் கவனக்குறைவு அல்லது அதியியக்கக் குறைபாடு என்னும் மூளையின் நரம்பியல் குறைபாட்டிற்கு வழங்கப்படும் மருந்தாகும். இதை எடுத்துக்கொள்வதன் மூலம் விளையாட்டில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியும்.
உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனமான ‘வாடா’வின் ( World Anti Doping Agency) விதிமுறைப்படி அட்ரெல், ரிடலின் ஆகிய ஆம்ஃபீடமின்களும், எஃபிட்ரின் மற்றும் மெத்தில்பெட்ரின் ஆகிய மருந்தின் அளவுகளும் 10 மைக்ரோ கிராம் பெர் மில்லிலிட்டருக்கு மேல் உடலில் இருக்கக்கூடாது. மேலும் கஃபின் மற்றும் உடல்வலி ஆகியவற்றுக்காக எடுத்துக் கொள்ளும் ஆன்டிபயாடிக், வலி நிவாரணி மருந்துகளுக்கு மருத்துவரின் பரிந்துரை அவசியம்.
ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்படுவது எப்படி?
ஊக்க மருந்து சோதனையில் பெரும்பாலும் வீரர்களின் சிறுநீர் மாதிரிகள்தான் எடுக்கப்படும். சில நேரங்களில் மட்டுமே ரத்த மாதிரிகளைப் பயன்படுத்துவர்.
இதற்காக எடுக்கப்படும் மாதிரிகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும். முதலில் எடுக்கப்படும் மாதிரியை தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையம் (National Anti Doping Agency) சோதனை செய்யும். அதில், ஊக்க மருந்து இருந்தால், குறிப்பிட்ட அந்த வீரருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, போட்டியில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்படும்.
அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டால் எந்தச் சிக்கலும் இருக்காது. அதுவே, தான் எந்தவித ஊக்க மருந்தும் எடுத்துக்கொள்ளவில்லை என்று போட்டியாளர் மறுத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கும் இரண்டாவது மாதிரியை ‘வாடா’ அல்லது மற்ற நாடுகளின் ஊக்க மருந்து சோதனை நிறுவனம் பரிசோதிக்கும். இதில், குற்றம் உறுதி செய்யப்பட்டால், அதற்கான தண்டனை வழங்கப்படும்.
தண்டனை என்பது எடுத்துக்கொண்ட மருந்தின் இயல்பு, அளவு மற்றும் தனிப்பட்ட விளையாட்டின் விதிமுறைப்படியே அமையும். இந்தியாவில் ஒருமுறை நடத்தப்படும் இந்த சோதனைக்கு 250 டாலர் முதல் 350 வரை (சுமார் ரூ. 30,000 வரை) செலவாகும். ஆனால், இதுவரை யாரும் செஸ் விளையாட்டில் ஊக்க மருந்து உட்கொண்டதாகக் குற்றம் சாட்டப்படவில்லை
செஸ் வீரர்களின் கருத்து என்ன?
செஸ்ஸில் நடத்தபடும் ஊக்க மருந்து பரிசோதனை 2008ஆம் ஆண்டில்தான் வெளிச்சத்திற்கு வந்தது. பிரபல செஸ் வீரரான யுக்ரேனை சேர்ந்த வாசிலி இவான்சுக்கிடம் பரிசோதனைக்கு மாதிரிகளை வழங்குமாறு கேட்கப்பட்ட போது, அவர் அதை மறுத்துவிட்டார். இது பெரும் பேசுபொருளானது. இவரைத் தொடர்ந்து, பல்வேறு செஸ் வீரர்கள் இந்தப் பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன்கூட இந்தப் பரிசோதனையின் மீதான அதிருப்தியை தெரிவித்திருந்தார். “இதைச் செய்யவேண்டும் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, நான் எங்கு இருக்கிறேன் என்று எல்லா முறையும் நான் அவர்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இது எனக்கு பழக்கப்படலாம், ஆனால் இது அவசியமற்றது,” என்று கார்ல்சன் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் நிஹஸ் சரின், கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த போட்டிக்குப் பிறகுதான் இரண்டு முறை பரிசோதனைக்காக மாதிரிகளை வழங்கியும் அது நீர்த்துப் போய்விட்டதாக அதிகாரிகள் கூறியதாகத் தெரிவித்தார்.
“மூன்றாவது முறை சரியான மாதிரிகளை வழங்கி, இரவில் நெடுநேரம் கழித்துதான் வீட்டிற்கு வந்தேன்” என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தச் சோதனை தேவையா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
ஊக்க மருந்து சோதனையின் அவசியம் என்ன?
செஸ்ஸில் ஊக்க மருந்துகள் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்ள ஸ்பார்க் இன்ஸ்ட்டிட்யூட் எனப்படும் மருத்துவம் மற்றும் உடற்பயிற்சிக்கான நிறுவனத்தின் மருத்துவர் கண்ணன் புகழேந்தியிடம் பேசினோம். இவர் பல ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.
“சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் கீழ் செயல்படும் அனைத்து விளையாட்டுகளுக்குமான விதிமுறை ஒன்றுதான். எந்த விளையாட்டாக இருந்தாலும், ஊக்க மருந்துக்கான தேர்வை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். இது விளையாட்டு நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்கிறது,” என்று மருத்துவர் கண்ணன் தெரிவித்தார்.
“ஊக்க மருந்து என்பது வெறும் உடல் வேகத்தையும் தசையைத் திடப்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை. மூளையின் செயல்பாட்டையும், அதன் வேகத்தையும் அதிகரிக்க, அதாவது அசாதரணமான முறையில் அதிகரிக்க ஊக்க மருந்துகள் உள்ளன,” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “மத்திய நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் மருந்துகள் இதற்குப் பயன்படுத்தப்படலாம். இந்த மருந்துகள் பெரும்பாலும் மூளை வளர்ச்சியில் அல்லது அதன் செயல்பாட்டில் குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கப்படும். அவ்வாறான மருந்துகளை மேம்பட்ட மூளை திறனுக்காக செஸ் வீரர்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதால் இந்த ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
ஊக்க மருந்து எடுத்துக்கொண்டால் மூளையில் என்ன நடக்கும்?
மருத்துவர் கண்ணன் புகழேந்தி ஊக்க மருந்து எடுத்துகொண்டால் மூளையில் என்ன நடக்கும் என்பதை விவரித்தார்.
“போட்டிக்குப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே இந்த மருந்துகளை எடுத்துக்கொண்டால், போட்டியில் அதன் விளைவைப் பார்க்க முடியும். ஒரே நேரத்தில் பல்வேறு செஸ் காய்களின் அசைவை மூளையால் நொடிப்பொழுதில் கணக்கிட முடியும். பல மணிநேரம் தொடர்ந்து கவனச் சிதறல் இல்லாமல் போட்டியில் விளையாட முடியும்” என்று விளக்கினார் அவர்.
இதன்மூலம், நியூரோபிளாஸ்டிசிட்டி என்னும் நிலையை அவர்கள் வெகு விரைவில் அடைந்துவிடுவார்கள். நியூரோபிளாஸ்டிசிட்டி என்பது புதிய நரம்பியல் இணைப்புகளையும், மறுசீரமைப்பையும் உருவாக்குவதாகும்.
“எளிதாகச் சொல்லவேண்டுமெனில், நாம் மூளைக்கு எவ்வளவு கடினமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அந்தச் சூழலுக்கேற்ப தன்னை அது வடிவமைத்துக் கொள்ளும். இதை அடைய நிறைய பயிற்சியும் அனுபவமும் தேவை. ஆனால், மருந்துகள் மூலம் இந்த செயல்திறனை விரைவில் அடையலாம்” என விளக்கினார் அவர்.
ஊக்க மருந்து எடுத்துக் கொள்வதால் இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை, ஹாலோஸினேஷன் போன்ற பின்விளைவுகளை வீரர்கள் சந்திக்கலாம். அதனால், இந்த ஊக்க மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது என்றும், மருத்துவர் கண்ணன் புகழேந்தி அறிவுறுத்தினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு