டிஜிட்டல் அரெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

நீலகிரி மாவட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்து வந்த ஐ.டி. பெண் ஊழியர் ஒருவரை, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாகக் கூறி, 8 நாட்கள் வீட்டிற்குள் முடக்கி வைத்ததுடன், ரூ.16 லட்சத்தையும் ஏமாற்றிப் பறித்துள்ளனர்.

பல நாட்களுக்குப் பின் புகார் தெரிவித்ததால், பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்து, ஊட்டி சைபர் க்ரைம் போலீசார், பிபிசி தமிழிடம் விளக்கினர்.

அவர்கள் கூறிய தகவல்களின்படி, குன்னுாரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், தனது சேமிப்பை இழந்ததுடன், 8 நாட்கள் வீட்டிலும் முடக்கப்பட்டுள்ளார்.

பட்டப்படிப்பை முடித்துள்ள அந்தப் பெண், கோவையிலுள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்து பணி புரியும் வாய்ப்பைப் பெற்று, அங்கிருந்து பணியை மேற்கொள்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் அவருக்கு வாட்ஸ் ஆப் காலில் ஓர் அழைப்பு வந்துள்ளது. அதில் ஆங்கிலத்தில் பேசிய ஒரு நபர், மும்பையிலுள்ள ஒரு கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகத் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு

பட மூலாதாரம், Getty Images

அந்தப் பெண்ணின் ஆதார் எண் மற்றும் பான் எண்ணைப் பயன்படுத்தி, மும்பையிலிருந்து சீனாவுக்கு ஒரு பார்சல் சென்றிருக்கிறது. அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள், பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்றவை இருந்தது என்று கூறியிருக்கிறார்.

அதற்கு இந்தப் பெண், தான் அப்படி எந்த பார்சலையும் அனுப்பவில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் தங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி அந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளதால் சுங்கத்துறை அதிகாரிகள் உங்களிடம் இப்போது பேசுவார்கள் என்று கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் அலுவலகத்திலிருந்து புதிய லேப் டாப் அனுப்புவதாகக் கூறியிருந்ததால், அது தொடர்பான பார்சலாக இருக்குமோ என்று இந்தப் பெண் நினைத்துள்ளார்.

அதன்பின் சுங்கத்துறை, மும்பை சைபர் க்ரைம் என்று வெவ்வேறு துறை அதிகாரிகள் என்று கூறி, ‘ஸ்கைப்’ ஐடி கொடுத்து, அவற்றில் வீடியோ கால்களில் பேசியுள்ளனர். அதில் பேசியவர்கள், சுங்கத்துறை, போலீஸ் சீருடைகளிலும் இருந்துள்ளனர்.

”அவர்கள்தான் இவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாகக் கூறி, வேறு யாரிடம் சொன்னாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. உடனடியாக நேரில் வந்து கைது செய்து விடுவார்கள் என்று மிரட்டியுள்ளனர்” என்று விவரித்தார் ஊட்டி சைபர் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீணா.

மேலும் ”அவர்கள் பேச்சு, நடவடிக்கை எதிலும் சந்தேகமே வராத அளவுக்கு, மிகவும் துணிச்சலாகவும், தெளிவாகவும் பேசியுள்ளனர். எல்லா நேரத்திலும் வீடியோ காலில் தொடர்பில் இருக்க வேண்டுமென்றும் கூறியதால், 8 நாட்களாக இவர் எங்குமே போகாமல் முடங்கியுள்ளார்.” என்றார் பிரவீணா

8 பரிவர்த்தனைகளில் பறிக்கப்பட்ட ரூ.16 லட்சம்!

டிஜிட்டல் அரெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

பெற்றோர்களிடம் கூட சொல்லாமல் 8 நாட்களாக வீட்டை விட்டே வெளியேறாமல் இருந்துள்ளார் அந்தப் பெண்.

அந்த 8 நாட்களிலும் இயற்கை உபாதை கழிப்பது, குளிப்பது, உடை மாற்றுவது எல்லாவற்றுக்கும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

பல நாட்கள் இப்படி மிரட்டியபின், தங்கள் கணக்கிலுள்ள பணத்தை, அவர்கள் கூறும் அக்கவுண்ட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று கூறியுள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மோசடியும் இதில் இருப்பதால், தவறு இல்லை என்று தெரிந்தபின்பே பணம் திருப்பி அனுப்பப்படும் என்று தெரிவித்து, அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.

இவ்வாறு மொத்தம் 8 பரிவர்த்தனைகளில் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை அவர் மாற்றிக் கொடுத்துள்ளார் என்று அவர் ஏமாற்றப்பட்ட விதத்தை விளக்கினர் சைபர் க்ரைம் போலீசார்.

மொத்தப்பணத்தையும் அனுப்பிய பின், அவர்கள் கொடுத்த எண்களிலும் ஐடிகளிலும் அவர்களிடம் பேச முயன்றபோது யாரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதற்குப் பின்பே, தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.

சில நாட்களாக சரியாகப் பேசாமல், மிகவும் சோர்வுடனும், சோகத்துடனும் இருந்ததைப் பார்த்து, அவருடைய அப்பாவும், அம்மாவும் இதுபற்றி விசாரித்துள்ளனர். அதன்பின் முடிவெடுத்து, பல நாட்கள் கழித்தே புகார் தெரிவித்ததாக பிபிசி தமிழிடம் போலீசார் தெரிவித்தனர்.

”பணத்தைச் செலுத்தியவுடனே ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வந்திருந்தால், மோசடி செய்த நபர்களின் கணக்கை முடக்கி பணத்தை மீட்டிருக்கலாம். குறிப்பாக 24 மணி நேரத்துக்குள் வந்திருந்தால் முழுதாகப் பணத்தை மீட்டிருக்க முடியும். இப்போதைக்கு அந்த வங்கிக் கணக்கை முடக்கியுள்ளோம்.” என்று ஊட்டி சைபர் க்ரைம் பெண் காவலர் ஒருவர் தெரிவித்தார்.

பணம் அனுப்பப்பட்ட கணக்கை முடக்கினாலும் அதில் பணம் இருந்தால்தான் கோர்ட் உத்தரவை வைத்து, பணத்தை மீட்க முடியும். பணம் இல்லாவிட்டால் பணத்தை மீட்பதில் பெரும் சிரமம் இருப்பதையும் போலீசார் விளக்குகின்றனர்.

”நாங்கள் பள்ளிகள், கல்லுாரிகள், நிறுவனங்கள் என பல இடங்களிலும் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு குறிப்புகளைப் பரப்பி வருகிறோம். நாட்டின் பிரதமரே பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, இதுபற்றி தெளிவாகப் பேசியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படாததுதான் இந்த மோசடி அதிகரிக்கக் காரணம்” என்கிறார் கோவை சைபர் க்ரைம் பிரிவின் காவல் ஆய்வாளர் அருண்.

படித்தவர்களே அதிகமாக ஏமாறுகின்றனர் என்கிறார் ஊட்டி சைபர் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீணா.

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இணைய வழி மோசடிகள் தொடர்பாக 15 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி ராஜேஷ் குமார் தகவல் வெளியிட்டிருந்தார்.

அதற்கு முந்தைய ஆண்டில் 9.60 லட்சமாக இருந்ததாகவும், நடப்பாண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் இணைய வழி வர்த்தகம் என்ற பெயரில் ரூ.1420 கோடியும், முதலீட்டு மோசடியாக ரூ.222 கோடியும், ரொமான்ஸ் மோசடியால் ரூ.13.23 கோடியும் இந்திய மக்களிடம் இருந்து ஏமாற்றி பறிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட தகவலின்படி, அந்த 4 மாதங்களில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் ரூ.120 கோடியை பலர் இழந்துள்ளனர்.

இணைய வழி மோசடிகளில் ஏமாறாமலிருக்க சைபர் க்ரைம் போலீசார் கூறும் சில அறிவுரைகள்:

* மோசடி நபர்கள் குறித்து தேசிய சைபர் கிரைம் உதவி எண் ‘1930’-ஐ தொடர்பு கொண்டு அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனே தகவல் தெரிவிப்பது அவசியம்.

* அரசுகளின் விசாரணை அமைப்பு அதிகாரிகள் ஒரு போதும் வங்கி விபரங்களைக் கேட்க மாட்டார்கள்; வாட்ஸ் ஆப், ஸ்கைப் போன்ற இணைய வழிகளில் தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

* இத்தகைய மிரட்டல் வந்தால் முதலில் அச்சப்படக்கூடாது.

* விசாரணை அதிகாரி என்று பேசும் நபரிடம் துறை அலுவலக முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் கேட்க வேண்டும்.

* இதுபோன்று மிரட்டல் வரும்போது, வங்கியை தொடர்பு கொண்டு தங்கள் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும்.

* முக்கியமாக அந்த அழைப்பு விபரங்கள், பணம் அனுப்பிய விபரங்கள், அவர்கள் அனுப்பிய தகவல்கள் ஆகியவற்றை ஆதாரங்களாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு