டங்ஸ்டன் சுரங்கம்: சட்டமன்ற தீர்மானத்தால் என்ன நடக்கும்? மத்திய அரசின் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?

டங்ஸ்டன் சுரங்கம், அரிட்டாபட்டி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் திங்கள் அன்று (டிசம்பர் 09) தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தான் பதவியில் இருக்கும் வரையில் இத்திட்டத்தைக் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது கூறியிருந்தார்.

சுரங்க அனுமதிக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரையில் போராட்டம் தொடரும் என, சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் சுரங்கம் அமைவதற்கு வாய்ப்புள்ளதா? மத்திய அரசின் சட்டத்திருத்தம் சொல்வது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மத்திய சுரங்கத் துறை அமைச்சகம், கடந்த ஜூலை 24 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஏல அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.

இந்த ஏலத்தில், வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக, நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது.

கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்திருத்தம் 2023-ன்படி இந்த ஏலம் நடத்தப்பட்டதாக, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?

சுரங்கம் மற்றும் கனிமங்கள் சட்டம் 1957ல், பல்வேறு திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சுரங்க மற்றும் கனிம சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

இந்த சட்ட திருத்தத்தின்படி கிராஃபைட், கிளாக்கோனைட், பாஸ்போரைட், நிக்கல், பொட்டாஷ், டங்ஸ்டன், வனேடியம், கிளாக்கோனைட், கோபால்ட் போன்ற கனிமங்களை ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிலக்கரியை தவிர, பிற கனிமங்களையும் மத்திய அரசின் அனுமதியுடன் ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுக்கு இருந்தது.

பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட 107 கனிமங்களில் வெறும் கிராபைட், நிக்கல் போன்ற 19 கனிமங்களையே மாநில அரசுகள் ஏலம் விடுவதாக மத்திய அரசு கூறுகிறது.

இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் தேவையான முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் இந்த சட்ட திருத்தத்தின்படி மத்திய அரசுக்கு வழங்கப்பட்டதாக தனது செய்தி குறிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசால் ஏலம் நடத்தப்பட்டாலும், ஏலதாரர்களுக்கு இந்த கனிமங்களுக்கான சுரங்க குத்தகை அல்லது உரிமம் மாநில அரசால் மட்டுமே வழங்கப்படும். மேலும் ஏல தொகை மற்றும் பிற சட்டப்பூர்வ தொகைளை மாநில அரசே தொடர்ந்து பெறும் எனவும் சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டங்ஸ்டன் சுரங்கம், அரிட்டாபட்டி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம், கடந்த ஜூலை 24 ஆம் தேதி அன்று இதுதொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது

மாநில அரசின் விளக்கம்

இதற்கு சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால், பல்லுயிர் பெருக்க மண்டலமாக மாநில அரசால் அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி முழுமையாக அழிந்துவிடும்” எனக் கூறி, எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய சுரங்கத்துறையின் அறிவிப்புக்கு எதிராக மதுரையில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், ‘டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதியளிக்கவில்லை’ என, தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை; அனுமதியும் வழங்கப்படவில்லை’ எனக் கூறியது.

டங்ஸ்டன் சுரங்கம், அரிட்டாபட்டி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

‘மாநில அரசு கோரிக்கை வைக்கவில்லை’

டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரம் அரசியல் ரீதியாக விவாதப் பொருளாக மாறவே, இதுதொடர்பான விளக்கத்தை நவம்பர் 29 ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அந்தப் பதிவில், ‘2024 பிப்ரவரி மாதம் ஏலம் முன்மொழியப்பட்டது . ஏலத்துக்கு எதிர்ப்பு இருப்பது குறித்து மாநில அரசு உள்பட எந்தத் தரப்பில் இருந்தும் தகவல் வரவில்லை.

நாயக்கர்பட்டியை ஏலத்தில் இருந்து கைவிடுமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைக்கவில்லை’ எனவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘நாயக்கர்பட்டியில் 20.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே சுரங்க குத்தகைக்கு வழங்கப்படுகிறது; அங்கு கனிமங்கள் இருப்பதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன’ எனக் கூறியுள்ளது.

எந்த வனப்பகுதியாக இருந்தாலும் ஆய்வு மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்துறை வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதாக கூறியுள்ள சுரங்கத்துறை அமைச்சகம், ‘மேற்கண்ட துறைகள் ஒப்புக் கொள்ளப்படாத எந்தப் பகுதியும் சுரங்க குத்தகை பகுதியில் சேர்க்கப்படாது’ என விளக்கம் அளித்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்கம், அரிட்டாபட்டி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, நாயக்கர்பட்டியில் 20.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே சுரங்க குத்தகைக்கு வழங்கப்படுகிறது என, மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்திருந்தது

தீர்மானத்தில் என்ன உள்ளது?

இந்தநிலையில், ‘டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யவும் மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமம் வழங்கக் கூடாது’ என மத்திய அரசை வலியுறுத்தி, திங்கள் அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த தீர்மானத்தில், ‘இன்றியமையாத கனிமங்களின் உரிமையை மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு ஏலம் விடக் கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இதையும் மீறி ஏல நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோவில்கள், சமண சிற்பங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள், பஞ்ச பாண்டவர் படுகைகள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களையும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்துக்கு முன்னதாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘எந்தக் காரணம் கொண்டும் தமிழ்நாட்டுக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பு இல்லை. ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன்’ என்றார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

படக்குறிப்பு, இத்திட்டம் வந்தால் தான் முதலமைச்சராக இருக்க மாட்டேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

ஆனால், இந்த விவகாரத்தில் சுரங்க ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு உரிமம் இறுதி செய்யப்படும் வரையிலான 10 மாதங்களில் தமிழ்நாடு அரசு அமைதியாக இருந்ததாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

‘மாநில அரசிடம் இருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை’ என மத்திய சுரங்கத்துறை வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவையும் எடப்பாடி பழனிசாமி மேற்கோள் காட்டிப் பேசினார்.

இதற்குப் பதில் அளித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது” என்றார்

சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தபோது தமிழ்நாடு அரசு எதிர்த்ததாக கூறிய தங்கம் தென்னரசு, “மாநில அரசின் உரிமையில் தலையிடுவதால் இந்த திருத்தத்தை நாங்கள் ஏற்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அப்போதும், இப்போதும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்” என்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 10 மாதங்களில் தமிழ்நாடு அரசு அமைதியாக இருந்ததாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்

சட்டமன்ற தீர்மானத்தால் என்ன நடக்கும்?

“நிலம் என்பது மாநிலப் பட்டியலில் வருகிறது. அது, மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்தவகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிக முக்கியமானது” என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன்.

இதையே பிபிசி தமிழிடம் கூறிய வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், “கனிமம் மற்றும் சுரங்கத்துறை சார்பில் ஏலம் விடுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏலம் விடப்பட்ட பின்னர், மாநில அரசிடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுமதி பெற வேண்டும். நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் பணியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். இதன்பிறகு, மாநில அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை ஆகிய துறைகள் அனுமதி அளிக்க வேண்டும். அந்தவகையில், மாநில அரசின் அனுமதியில்லாமல் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதற்கு வாய்ப்பில்லை” என்கிறார்.

அதற்கு உதாரணமாக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்ட சம்பவத்தை வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் மேற்கோள் காட்டினார்.

“நெடுவாசலில் திட்டம் கொண்டு வரப்படுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை கொடுக்க மாட்டோம்’ என மாநில அரசு கூறியது. அதனால் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், மத்திய அரசு ஏலத்தை ரத்து செய்யும் வரையில் பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடர உள்ளதாக கூறுகிறார், டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கம்பூர் செல்வராஜ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “திங்கள் அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மக்கள் போராட்டம் காரணமாகவே, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களுடன் அரசு இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று” என்கிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)