சைத்னயா சிறை: சிரியாவில் அசத் ஆட்சியை எதிர்த்தவர்களை துன்புறுத்திய கொடூர சிறை
- எழுதியவர், மாட் மர்பி
- பதவி, பிபிசி செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை சிரியாவில் அசத் ஆட்சி சரிந்தது. அதன் பிறகு சிரிய மக்கள் தங்கள் உறவினர்கள் பற்றிய செய்திகளை எதிர்பார்த்து நாட்டின் மிக ரகசியமான மற்றும் மோசமான சிறைச்சாலையான சைத்னயாவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
இந்தச் சிறை, 1980களின் முற்பகுதியில் தலைநகர் டமாஸ்கஸுக்கு வடக்கே 30 கி.மீ (19 மைல்) தொலைவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நிறுவப்பட்டது. அசத் குடும்பம் பல ஆண்டுகளாகத் தங்கள் ஆட்சியை எதிர்ப்பவர்களை இங்கே அடைத்து வைத்திருக்கிறது.
உரிமைக் குழுக்களால் “மனிதப் படுகொலை கூடம்” என்று இச்சிறை குறிப்பிடப்படுகிறது. 2011இல் சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்து தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சைத்னயா மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியமாக உள்ளது. சிறைச்சாலையின் உள்ளே எப்படி இருக்கும் என்று இதுவரை யாரும் பார்த்ததில்லை.
சிறைச்சாலையின் அமைப்பைப் பற்றிய விவரங்கள் முன்னாள் காவலர்கள் மற்றும் கைதிகளுடனான நேர்காணல்களின் அடிப்படையில் மட்டுமே விவரிக்கப்பட்டது.
ஆனால் உரிமைக் குழுக்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவல்கள், பஷர் அல் அசத்தின் கொடூரமான அடக்குமுறை ஆட்சியின் அடையாளமாக மாறிய கட்டடத்தைப் பற்றிய தெளிவை வழங்கியுள்ளன. சைத்னயா சிறைச்சாலை எப்படி இருக்கும்? அங்கு என்ன நடந்தது?
சைத்னயா சிறையில் யாரெல்லாம் அடைக்கப்பட்டனர்?
சைத்னயா பல ஆண்டுகளாக சிரிய ராணுவ காவல்துறை மற்றும் ராணுவ உளவுத் துறையால் நிர்வகிக்கப்பட்டது. 1.4 சதுர கிலோமீட்டர் வசதி கொண்ட சைத்னயா சிறைச்சாலையில் 1987 முதல் கைதிகள் அடைக்கப்பட்டனர். இது பஷர் அல்-அசத்தின் தந்தையான அதிபர் ஹபீஸ் அல்-அசத் ஆட்சியின் 16வது ஆண்டில் நடந்தது.
சிறைச்சாலையில் இரண்டு முக்கியத் தடுப்பு வசதிகள் இருந்தன. உரிமைக் குழுக்களின் தகவல்படி, ஆட்சிக்கு விசுவாசமற்றவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் ராணுவ அதிகாரிகள் மற்றும் துருப்புகளை வைத்திருப்பதற்காக வெள்ளைக் கட்டடம் கட்டப்பட்டது.
இந்தக் கட்டடம், பரந்த வளாகத்தின் தென்கிழக்கில் எல் வடிவ வளாகமாக இருந்தது. சிவப்புக் கட்டடம், பிரதான சிறை. இது ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கானது. தொடக்கத்தில், இஸ்லாமிய குழுக்களின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரை இந்த சிவப்பு கட்டடத்தில் அடைத்தனர்.
மேலும் அது தனித்துவமான Y-வடிவத்தைக் கொண்டது. இக்கட்டடத்தின் நடுவில் இருந்து நேராக மூன்று தாழ்வாரங்கள் பரவுகின்றன. விடுவிக்கப்பட்ட கைதிகளுடன் பேசிய உரிமைக் குழுக்களின் தகவலின்படி, இரண்டு கட்டடங்களிலும் சுமார் 10,000 – 20,000 பேர் அடைத்து வைக்கப்படலாம்.
சமீபத்தில், சைத்னயா சிறைக்குள் ஒரு பெரிய கண்காணிப்பு அறை இருப்பதைப் போன்ற காணொளிகள் இணைய தளத்தில் வெளிவந்தன.
பிபிசி வெரிஃபை மூலம் உண்மைத்தன்மை உறுதிசெய்யப்பட்ட அந்தக் காணொளியில் சிறைச்சாலையில் உள்ள அனைத்து அறைகளையும் கண்காணிக்கும் வகையிலான ஏராளமான சிசிடிவி கேமராக்கள் கொண்ட பெரிய கண்காணிப்பு அறை இருந்தது வெளியாகியுள்ளது.
சிறைச்சாலையில் நடந்த துன்புறுத்தல்கள் யாவை? எங்கு நடந்தன?
“கடந்த 2011இல் சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர், சைத்னயா சிறைச்சாலையில் உள்ள வெள்ளைக் கட்டடத்தில் ஏற்கெனவே உள்ள கைதிகளை அகற்றி, அதிபர் அசத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் அங்கே அடைக்கப்பட்டனர்,” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை கூறுகிறது. 2017ஆம் ஆண்டு முன்னாள் காவலர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் அம்னெஸ்டி இந்த அறிக்கையை வெளியிட்டது.
ஒரு முன்னாள் அதிகாரி அம்னெஸ்டியிடம், “2011க்குப் பிறகு, சைத்னயா சிரியாவின் முக்கிய அரசியல் சிறையாக மாறியது” என்று கூறினார்.
கடுமையாக அடித்துத் துன்புறுத்துவது, பாலியல் வன்புணர்வு செய்வது, உணவு மற்றும் மருந்து கொடுக்க மறுப்பது உள்ளிட்ட பல்வேறு சித்திரவதைகளை, சிவப்புக் கட்டடத்தில் அடைக்கப்பட்டவர்கள் அடிக்கடி அனுபவித்ததாக முன்னாள் கைதிகளின் சாட்சியத்தையும் அந்த அமைப்பு மேற்கோள் காட்டியது.
வெள்ளைக் கட்டடத்தின் அடியிலுள்ள பகுதி “மரணதண்டனை அறை” என அழைக்கப்பட்டது. சிவப்புக் கட்டடத்தில் இருந்தவர்களைத் தூக்கிலிட இங்கு அழைத்து வருவர் என்று அம்னெஸ்டியிடம் சிறையில் இருந்து வெளியானவர்கள் கூறியுள்ளனர்.
முன்னாள் காவலர் ஒருவர், “மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் மதிய உணவு வேளையில் கொண்டுவரப்படுவார்கள். பிறகு ராணுவத்தினர் அவர்களை அடித்தள அறைக்கு எடுத்துச் செல்வர். அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்கெனவே துன்புறுத்தலுக்கு ஆளான வண்ணம் இருப்பார்கள்,” என்று கூறினார்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனலுடன் பேசிய முன்னாள் கைதிகள், சிவப்புக் கட்டடத்தில் உள்ள கைதிகள் வழக்கமாக நள்ளிரவு மற்றும் அதிகாலை 3:00 மணிக்குள், இரவு நேரங்களில் மாற்றப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
கண்கள் மூடப்பட்ட கைதிகள் வெள்ளைக் கட்டடத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் இருந்து, “மரண தண்டனை அறைக்கு” கீழே கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, 10 கயிறுகள் கொண்ட ஒரு மீட்டர் உயரமுள்ள மேடையில் அவர்களது மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
அம்னெஸ்டியின் கூற்றுப்படி 2012இல், மேலும் 20 கயிறுகளுடன் இரண்டாவது தளம் அமைக்கப்பட்டு, அறை விரிவுபடுத்தப்பட்டது.
அசத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான ஊடகங்களால் பகிரப்பட்ட காட்சிகளில், போராளிகள் சைத்னயாவை சுற்றியுள்ள அறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட டஜன் கணக்கான கயிறுகளைக் காட்சிப்படுத்தினர்.
கடந்த 2011 மற்றும் 2018க்கு இடையில் 30,000க்கும் மேற்பட்ட கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர் அல்லது சித்திரவதை செய்யப்பட்டு, மருத்துவ பராமரிப்பு இல்லாமல் அல்லது பட்டினியால் இறந்துள்ளனர் என்று உரிமைக் குழுக்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட சில கைதிகளின் சாட்சியங்களின் அடிப்படையில், 2018 மற்றும் 2021க்கு இடையில் குறைந்தது 500 கைதிகள் தூக்கிலிடப்பட்டதாக அசோசியேஷன் ஆஃப் தி மிஸ்ஸிங் அண்ட் டீடெய்னிஸ் இன் சைத்னயா (Association of the Missing and Detainees in Saydnaya Prison (AMDSP) 2022) கூறியது.
கடந்த 2017ஆம் ஆண்டில், கொல்லப்பட்ட கைதிகளின் பொருட்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் அந்த இடத்தில் தகனக் கூடத்தைக் கட்டியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது. கீழே உள்ள படங்களில், வெள்ளை கட்டடத்தை ஒட்டியுள்ள பகுதிதான் அந்தத் தகனக் கூடமாகக் இருக்கக்கூடும்.
சைத்னயா சிறையில் நடக்கும் படுகொலைகளின் அளவை மூடி மறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அதிகாரிகள் இந்த வசதியை உருவாக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அமெரிக்க புலனாய்வாளர்களால் வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஒரு கட்டமைப்பைக் காட்டியது. ஒரு சிறிய கட்டடம் தகனக் கூடமாக மாற்றப்பட்டதை அது வெளிப்படுத்தியது.
கட்டடத்தின் கூரையில் பனி உருகுவது அவர்கள் இந்தக் கூற்றை உறுதி செய்ய உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த நேரத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது 50 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
சைத்னயா சிறையின் பாதுகாப்பு வசதிகள் எப்படி?
வரலாறு முழுவதும், இந்தச் சிறை வளாகம் பலத்த பாதுகாப்புடன் இருந்துள்ளது. அசோசியேஷன் ஆஃப் தி மிஸ்ஸிங் அண்ட் டீடெய்னிஸ் இன் சைத்னயாவின் (AMDSP) 2022ஆம் ஆண்டு அறிக்கைப்படி, சிறையின் வெளிப்புறத்தில் 200 ராணுவ வீரர்கள் ரோந்து செல்வர். அதே நேரத்தில் ராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 250 வீரர்கள் மற்றும் ராணுவ காவல்துறை உள்துறை பாதுகாப்பைக் கவனித்துக் கொண்டனர்.
ராணுவத்தின் மூன்றாம் பிரிவின் 21வது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள், ஆட்சிக்கு விசுவாசமாக அறியப்பட்டவர்கள், சிறைச்சாலையை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த வீரர்கள் அதிபர் பஷர் அல்-அசத்தின் அலவைட் சிறுபான்மையினரின் அதிகாரிகளால் வழிநடத்தப்பட்டனர்.
அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், சிறைப் பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டனர். சிறைச்சாலையின் வெளிப்புறத்தில் அதிக அளவில் கண்ணிவெடிக் குழிகள் இருப்பதாக உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலையின் வெளிப்புறத்தில் பீரங்கி-எதிர்ப்பு கண்ணி வெடிகுண்டுகள் கொண்ட வளையமும், மேலும் வளாகத்தின் மையத்தில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்ட மற்றொரு வளையமும் உள்ளது.
சிரிய சிவில் பாதுகாப்புக் குழுவான ‘ஒயிட் ஹெல்மெட்ஸ்’ வெளியிட்ட படங்கள், வளாகத்தைச் சுற்றிலும் முள்கம்பிகளால் கட்டப்பட்ட உயரமான சுவர்களைக் காட்டின. இந்த வளாகத்தைச் சுற்றிலும் காவல் கோபுரங்களும் காணப்படுகின்றன.
அசத் ஆட்சி எப்போதும் சர்வதேச அமைப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, அவற்றை “ஆதாரமற்றது” மற்றும் “உண்மையற்றது” என்று அழைத்தது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கருத்துப்படி, அசத் ஆட்சியின் வீழ்ச்சி, தங்கள் உறவினர்கள் சைத்னயா சிறையில் அடைக்கப்பட்டதாக நம்பும் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அதோடு, பல ஆண்டுகளாகக் காணாமல் போயிருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன ஆனது என்பதை அவர்கள் தற்போது தெரிந்துகொள்ளலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு