- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அப்புயலில் சிக்கிய தாயும் மகனும் கடும் போராட்டங்களுக்குப் பின் உயிருடன் மீண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் மலட்டாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் சிக்கியிருந்தனர்.
வெள்ளப்பெருக்கின் வேகத்தில் மூன்று பேரும் ஒன்றாக தப்பிப்பது முடியாது எனும் சூழலில், தாயும் மகனுமாவது உயிர்பிழைக்கட்டும் என்று எண்ணி, வெள்ளத்தின் சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளார் அத்தந்தை. இதையடுத்து, சுமார் 17 மணிநேரம் மரக்கிளையை மட்டும் பிடித்துக்கொண்டு இருந்த தாயையும் மகனையும் பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். என்ன நடந்தது?
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள்
ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30-ம் தேதி இரவு கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வடமாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன.
புயல் பாதிப்புகள் குறித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் டிசம்பர் மாத தொடக்கத்தில் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 13 ஆயிரம் ஹெக்டேர் நெல், சிறுதானியப் பயிர்கள், வாழை சேதமடைந்துள்ளன” என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், “விழுப்புரம் நகரில் 8 ஆயிரம் வீடுகளையும், மாவட்டம் முழுவதும் 35 ஆயிரம் வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. 2 இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். 97 கால்நடைகள் மற்றும் கன்றுகளும், 56 வாத்துகள் மற்றும் கோழிகளும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. 10 ஆயிரம் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளின் தீவிரத்தை நாம் உணரலாம்.
இந்த ஃபெஞ்சல் புயலில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், ஆற்றின் அருகே வசித்து வந்த கலையரசன், அவருடைய மனைவி சுந்தரி மற்றும் மகன் புகழேந்தி ஆகியோர் சிக்கிக்கொண்டனர். இதில், புகழேந்தி மற்றும் சுந்தரி ஆகிய இருவரும் 17 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர்.
கண் எதிரிலேயே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை கலையரசனை காப்பாற்ற முடியாமல், மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு தவித்த புகழேந்தியையும் அவரது தாயையும் மீட்புக் குழு மீட்டது எப்படி?
‘ஆற்றின் கரையோரம் வசித்து வந்த குடும்பம்’
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி, வெள்ளத்தில் சிக்கி தன் தந்தை உயிரிழந்த தருணம் குறித்தும், அந்த 17 மணிநேர போராட்டம் குறித்தும் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
“நான், எனது தந்தை கலையரசன், தாயார் சுந்தரி ஆகிய மூவரும் திருவெண்ணைநல்லூர் அருகே ஏமப்பூரில் மலட்டாற்றின் கரையோரத்தின் அருகில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம்.
எனது அப்பா கலையரசன், விவசாய கூலித் தொழிலாளி. எனக்கும் உதவியாக அவ்வப்போது எனது வெல்டிங் பட்டறைக்கு வந்து உதவி செய்வார்” என்று கூறிய புகழேந்தி, தொடர்ந்து பேசினார்.
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு அவருடைய ஊரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தாய், தந்தை, மகன் மூவரும் அதிகம் வெளியே செல்லாமல், வீட்டிலேயே இருந்துள்ளனர். இதையடுத்து, புயல் கரையை கடந்த 30-ம் தேதி அன்று, மலட்டாற்றில் வெள்ளம் அதிகரித்தது.
“எப்போதுமே வெள்ளம் வந்தால் ஆற்றின் கரையோரம் வரை வரும், அதற்கு மேல் வராது. அதனால் நாங்கள் வழக்கம்போல் இரவு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தோம். நவ. 30 அன்று அதிகாலை 4 மணிக்கு தண்ணீரின் இரைச்சல் அதிகமாகக் கேட்டது. நான் அதிகாலை சுமார் 5.30 மணிக்கு கதவை திறந்த போது, தண்ணீர் வீடு வாசல் வரை வந்துவிட்டது” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக வீட்டின் மேற்கூரை பகுதிக்கு ஏறியதாகவும், சிறிது நேரத்தில் நீர் வடிந்துவிடும், மீண்டும் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்ததாகவும், ஆனால் சில நிமிடங்களிலேயே தண்ணீர் வேகம் அதிகரித்து வீட்டை சூழ்ந்த போது தான் அதன் விபரீதம் புரிந்தது என்றும் புகழேந்தி கூறுகிறார்.
“உடனடியாக அங்கிருந்து மேடான பகுதிக்கு வேகமாக ஏறினோம். ஆனால், ஆற்று நீர் ஆர்ப்பரித்துக் கொண்டே எங்களை துரத்தியது. இருந்தாலும் நாங்கள் அருகில் இருந்த மரக்கிளைய துணையாக பிடித்துக் கொண்டு, ஆற்றுநீரில் நீந்தி கொண்டே வேகமாகச் சென்றோம். நாங்கள் மூவரும் ஒருவருடைய கையை ஒருவர் இறுக்கமாக பிடித்துக் கொண்டோம்.” என்று விவரிக்கிறார்.
தண்ணீரின் வேகம் அதிகமாக அதிகமாக, அதன் வேகத்திற்கு ஈடாக மூவரும் நீந்த தொடங்கியதாக புகழேந்தி கூறுகிறார். ஆனாலும், ஆற்றின் சுழலுக்கு அவர்களால் ஈடுகொடுத்து நீந்த முடியாமல் போயுள்ளது.
“சிறிது தூரத்தில் இருந்த மரத்தைப் பிடித்துத் தப்பிக்கலாம் என்று வேகமாக நீந்தியும் எங்களால் முடியவில்லை.” என்கிறார் புகழேந்தி.
இதையடுத்து, தன் தந்தை தங்கள் கண் முன்னாலேயே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட துயரத்தை கண்ணீருடன் விவரித்தார் புகழேந்தி.
“மூவரும் ஒருவரையொருவர் கையை பிடித்துக்கொண்டு அதிக தூரத்திற்கு நீந்தி, தப்பிக்க முடியாது என்பதை என் அப்பா உணர்ந்துவிட்டார். நாங்களாவது பத்திரமாக மரத்தின் அருகே செல்ல வேண்டுமென எண்ணி, எனது அம்மாவையும், என்னையும் விட்டு அப்பாவின் கைவிரல்கள் நடுக்கத்துடன் பிரிந்தது. சில விநாடிகளில் ஆற்றுத் தண்ணீரின் சுழலில் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்டார் எனது தந்தை” என்றார் புகழேந்தி.
அந்த சமயத்தில், தன் தந்தை என்ன கூற முற்பட்டார் என்பது கூட சரிவர தனக்கு விளங்கவில்லை என்கிறார் அவர்.
‘நள்ளிரவு வரை தொடர்ந்த போராட்டம்’
பிறகு அவரும் அவரது அம்மாவும் நீந்தி, தூரத்தில் இருந்த சிறிய மரத்தின் கிளையில் ஏறி பிடித்துக் கொண்டதாகவும், தனது தந்தை அருகில் எங்காவது மரத்தைப் பிடித்துத் தப்பி இருப்பார் என்று தான் நம்பிக்கையுடன், மரத்தில் இருந்ததாகவும் கூறுகிறார் புகழேந்தி.
“மதியம் கடந்து மாலை 6 மணிக்கு கும்மிருட்டானது. இதற்கிடையில், தீயணைப்புத் துறையினர் எதிர் கரையிலிருந்து எங்களை மீட்க வருவதை பார்க்க முடிந்தது என்றாலும், வேறு ஏதும் தெரியவில்லை” என்று கூறினார்.
இரவு 10 மணிக்கு மேல் அவர்கள் இருந்த பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் வந்து வட்டமிட்டது என்றும், ஆனால், அது உடனே அந்த இடத்தை விட்டு சென்று விட்டதால், என்ன செய்வது என்று புரியாமல் தவித்ததாகவும் புகழேந்தி கூறினார்.
“இறுதியில் நள்ளிரவு 12 மணியளவில் கயிறு கட்டிக் கொண்டு பேரிடர் மீட்புக் குழுவினரும் தீயணைப்பு துறையினரும் எங்கள் ஊர் இளைஞர்கள் இருவரும் நாங்கள் இருக்கும் இடத்திற்கு கழுத்தளவு நீரில் மிதந்து வந்தனர்.”
“எங்களை பாதுகாப்பாக அவர்கள் மீட்டு மேட்டுப்பகுதிக்கு அழைத்து வந்தனர். அப்பொழுதுதான் எங்கள் உயிர் திரும்ப கிடைத்தது போன்ற உணர்வு வந்தது. எனது தாயார் தண்ணீர் அதிகம் குடித்திருந்ததால் அவரால் பேச இயலவில்லை” என்று கூறுகிறார் புகழேந்தி.
மீட்கப்பட்ட புகழேந்திக்கும் அவருடைய தாய்க்கும், உடனடியாக முதலுதவி செய்யப்பட்டது.
“நான் இரண்டு மணிநேரத்திலேயே சகஜ நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால் எனது தாயார் இப்பொழுது வரை மருத்துவமனையில் தான் இருக்கின்றார்” என்று கண் கலங்கினார் புகழேந்தி.
இருவரும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, புகழேந்தியின் தந்தையைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், அவரை உயிருடன் மீட்க முடியவில்லை.
“மறுநாள் காலை 8.00 மணிக்கு தீயணைப்பு துறையினர் எனது அப்பாவை எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சுடுகாட்டினருகே ஆற்றுப் பள்ளத்திலிருந்து சடலமாக மீட்டெடுத்து வந்தனர்.”
“எங்கு சென்றாலும் நான் எனது அப்பாவுடன் தான் செல்வேன். ஆனால், இப்பொழுது தனி மரமாகி விட்டேன். வீடும் ஆற்றோடு அடித்து செல்லப்பட்டது. கடையில் உள்ள பொருட்களும் ஆற்று வெள்ளத்தில் சென்று விட்டது, என்ன செய்வது என்று தெரியவில்லை” என வேதனையுடன் கூறினார் புகழேந்தி.
‘கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை’
திருவெண்ணைநல்லூரை சேர்ந்த ஏ.ரா. வேலு பிபிசி தமிழுடன் பாதிப்புகள் குறித்து விவரித்தார்.
“எனது கடைக்கு அருகிலேயே தான் புகழேந்தி வெல்டிங் கடை வைத்து நடத்தி வருகின்றார். நாங்களும், தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மீட்புத் துறையும் பல வழிகளிலும் போராடினோம் என்றாலும் அவர்களை மீட்பதற்கு 17 மணி நேரம் ஆகிவிட்டது. இதை எங்களால் வாழ்வில் மறக்கவே முடியாது, மனிதனை விட இயற்கைக்கு அதிக சக்தி என்பதை நாங்கள் கண் முன்னே பார்த்தோம்,” என்று கூறுகிறார் வேலு.
தங்கள் ஊருக்கு அருகிலேயே ஆறு செல்லும் நிலையில், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், என்கிறார் வேலு.
“எங்கள் கிராமத்தை இப்பொழுது பார்த்தாலும் மேடு பள்ளமாக தான் இருக்கிறது. ஆற்று நீர் அடித்து உள்வாங்கிய பள்ளத்தில் மண் கொட்டப்பட வேண்டும். உரிய நிவாரணம் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
‘மீட்புப் பணியில் இருந்த சவால்கள்’
திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன், 2 உயிர்களை காப்பாற்றியது எப்படி என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.
“திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் (57) என்பவரது வீடு நவ. 30 அன்று காலை வெள்ளத்தில் மூழ்கியது. கலையரசன், மனைவி சுந்தரி (50), மகன் புகழேந்தி (25) என 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.”
“இதற்கிடையில், ஆற்றின் அருகிலேயே உள்ள எங்களது தீயணைப்பு நிலையத்திலும் ஆற்று நீர் புகுந்து, பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மின்சாரமும் இரண்டு நாட்களாக இந்த பகுதிக்குத் துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆற்றில் மூவர் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது,” என்று கூறியவர் தொடர்ந்து விவரித்தார்.
வெள்ளம் அதிகரித்துக் கொண்டே சென்றதால், அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை இருந்ததாகவும் எனவே, உடனடியாக பேரிடர் மீட்பு குழுவுக்கு அதிகாரிகள் மூலமாக தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தோம் என்றும் சுந்தரேஸ்வரன் கூறுகிறார்.
“இரண்டு குழுவினரும் விரைந்து சென்றோம் என்ற போதிலும் அப்பகுதிக்கு செல்வதில் சிக்கல் நீடித்தது. உடனடியாக, ஹெலிகாப்டர் உதவிக்காகவும் முயற்சித்தோம். அதுவும் இரவு 10 மணிக்கு முன்பாக வந்து வட்டமடித்து மரக்கிளையில் இவர்கள் இருக்கும் இடத்தை உறுதி செய்தது என்ற போதிலும் மீட்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால் மீட்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்தது.” என்று கூறினார்.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் (காவல்துறை) மற்றும் தீயணைப்பு வீரர்கள் 17 பேர் மாற்று வழியில் செல்வது குறித்து முடிவெடுத்து, ஒரு கிலோ மீட்டர் தூரம் சிக்கலான பாதையில் தண்ணீரில் சென்று அவர்களை மீட்பது என முடிவு செய்ததாக கூறும் சுந்தரேஸ்வரன், தொடர்ந்து விவரித்தார்.
“கயிறுகளை ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்தில் கட்டிக்கொண்டே ஒவ்வொருவராக அவர்கள் இருக்கும் பகுதியை அடைந்தோம். அங்கு சுந்தரி மரக்கிளையில் நடுக்கத்துடன் அமர்ந்திருந்தார். அவரை முதலில் பாதுகாப்பாக மீட்போம். அவர் அருகிலேயே மற்றொரு மரக்கிளையில் புகழேந்தி அமர்ந்திருந்தார், அவரையும் பாதுகாப்பாக மீட்டோம். அப்பொழுது நள்ளிரவு 1.20 ஆகியிருந்தது.”
புகழேந்தியையும் அவரது தாயார் சுந்தரியையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, அவரது தந்தை கலையரசன் குறித்து கேட்டபொழுது ‘அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டார், எங்காவது மரத்தில் தான் இருப்பார்’ என்று புகழேந்தி நம்பிக்கையுடன் தெரிவித்ததாக கூறுகிறார் சுந்தரேஸ்வரன்.
“வெள்ளம் வடியாததாலும் இரவு நேரம் என்பதாலும் மீட்பு பணியைத் தொடர முடியவில்லை. அதிகாலை மீண்டும் பணியை தொடங்கினோம். அங்கிருந்து கயிறு மூலமாக ஆற்றின் ஓரத்தில் பாதுகாப்பாக சென்று கொண்டே இருந்தபோது, சுடுகாட்டுக்கு சற்று அருகில் இருந்த ஆற்று ஓடை பள்ளத்தில் கலையரசன் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை மீட்டு கரைக்கு எடுத்து வந்தோம். அவரது மகனை வரவழைத்து அவர் தான் என்று உறுதி செய்தோம்” என்று கூறினார்.
“எங்கள் அலுவலகத்தைக் கூட வெள்ளத்திடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. ஆனாலும், இரண்டு உயிர்களை 17 மணி நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டது எங்களுக்கு நிம்மதியை வழங்கியது,” என்கிறார் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு