ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம்: திருமாவளவனின் முடிவுக்கு என்ன காரணம்? கூட்டணி கணக்குகள் மாறுபடுமா?
- எழுதியவர், நித்யா பாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ், சென்னை
டிசம்பர் 9ம் தேதி அன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடை நீக்கம் செய்து அறிவித்தார்.
விசிக தலைமை எடுத்த இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்திருந்தது ஆதவின் சமீபத்திய பேச்சு.
விகடன் பதிப்பகம் மற்றும் வாய்ஃஸ் ஆஃப் காமன் நிறுவனத்தின் சார்பில், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா, டிசம்பர் 6-ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்றது.
அம்பேத்கரின் பேரனும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வி.சி.க (முன்னாள்) துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
புத்தக வெளியீட்டு விழாவாக ஆரம்பித்த விழாவில் ஆதவின் பேச்சு, திமுக மற்றும் விசிகவுக்கு இடையிலான கூட்டணி உறவில் உரசலை ஏற்படுத்தும் பேச்சாக அமைந்ததாக தமிழக அரசியலை உற்றுநோக்குபவர்கள் கருதுகின்றனர்.
விசிக தலைமையின் நிலைப்பாட்டுக்கும் ஆதவின் நிலைப்பாட்டுக்கும் இடையே இருந்த வேற்றுமை, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
டிசம்பர் 9ம் தேதி அன்று ஆதவ் அர்ஜுனாவை கட்சி பொறுப்புகளில் இருந்து இடை நீக்கம் செய்ததாக அறிவித்தார் திருமாவளவன்.
- விசிகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் ஆதவ் அர்ஜூனா – திருமாவளவன் கூறும் காரணம் என்ன?
- தவெக மாநாட்டில் பெரியார், அம்பேத்கருடன் சேர, சோழ, பாண்டியருக்கும் கட்அவுட் – விஜய் என்ன சொல்ல வருகிறார்?
- ‘திராவிடம், தமிழ் தேசியம், ஆட்சியில் பங்கு’ – விஜய் பேச்சு பற்றி அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?
- ‘பாசிசம், கடவுள் மறுப்பு, ஊழல், பிளவுவாதம், ஆட்சியில் பங்கு’ – விஜய் பேசியது என்ன? முழு விவரம்
- தவெக மாநாடு: ‘கொள்கை எதிரி, அரசியல் எதிரி’ என்று நடிகர் விஜய் யாரை குறிப்பிட்டார்?
இந்த இடை நீக்கத்தை ஒழுங்கு நடவடிக்கையாக அறிவித்துள்ளது விசிக. முரண்பட்ட முடிவுகளை திருமாவளவன் மேற்கொண்டதால், திமுகவின் அழுத்தத்தைக் குறைக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
திருமாவளவனின் அனுமதி இல்லாமலா, இத்தனை மாதங்கள் ஆதவ், விசிகவின் நிலைப்பாட்டுக்கு மாறான கருத்துகளை பொதுவெளியில் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
திமுகவோ, இதனை ஒரு உட்கட்சி விவகாரமாகவே பார்ப்பதாக தெரிவிக்கிறது.
விசிகவின் ஒழுங்கு நடவடிக்கை, திமுகவை தாக்கிப் பேசிய ஆதவின் பேச்சு, புத்தக வெளியீட்டு விழாவில் அவர் எழுப்பிய நான்கு முக்கியக் கேள்விகள், திமுக-விசிக கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டில் விசிக ஆதிக்கம் செலுத்த இயலுமா? ஆதவ் அர்ஜுனாவின் பேச்சும் செயலும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? விளக்குகிறது இந்த கட்டுரை.
இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா
டிசம்பர் 9ம் தேதி அன்று காலை திருமாவளவன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஆதவ், “விசிக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்” என்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இம்முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
“கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும் அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது,” என்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
“ஆதவ் அர்ஜுனாவின் இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றும், “கட்சியினருக்கு ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது,” என்றும் அதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
“கட்சி நலன், கட்டுப்பாடு, நம்பகத்தன்மை, எதிர்காலம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை கட்சித் தலைமை எடுத்துள்ளது,” என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.
“கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவது, கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர் மீதான நம்பகத்தன்மையை குறைக்கும் செயலாக ஆதவின் கருத்து கருதப்பட்டது. அதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கிறார் வன்னி அரசு. மேலும் இந்த இடை நீக்கம் திமுகவின் நிர்பந்தத்தால் எடுக்கப்பட்டதல்ல என்பதையும் தெரிவித்தார்.
‘மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்’
கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு, “புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம்,” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆதவ்.
மேலும் அதில், “எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சர்ச்சைக்குரிய வகையில், மன்னராட்சி என்று புத்தக விழாவில் பேசியதைப் போலவே, திமுகவை மறைமுகமாக சாடி, “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை” என்றும், “இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன்” என்றும் ஆதவ் குறிப்பிட்டுள்ளார்.
கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிப்பதாகவும் மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
‘திமுகவுக்கு எதிரான பரப்புரை’
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, திமுகவுக்கு எதிராக நடத்தப்படும் பரப்புரை என்று கூறுகிறார், திமுகவின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை.
திமுக எத்தகைய அழுத்தத்தையும் விசிகவுக்கு தரவில்லை என்று கூறுகிறார்.
“திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்தால் பணிந்துவிடுவார் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவது ஏற்புடையதல்ல,” என்று கூறும் அவர், விசிக எடுத்துள்ள இந்த முடிவு, உள்கட்சி விவகாரமே தவிர அதில் திமுகவின் தலையீடு ஏதும் இல்லை என்றும் கூறினார்.
‘மக்கள் மத்தியில் பேசு பொருளாகும்’
ஆதவ் அந்த நிகழ்ச்சியில் நான்கு முக்கிய கேள்விகளை முன்வைத்து பேசினார். ஒன்று ஆட்சிப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு குறித்தது. “தலித் நபர் ஒருவர் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூறிய போது அதற்காக ஒலித்த முதல் குரல் விஜய்யின் குரல்,” என்று குறிப்பிட்டார்.
இரண்டாவதாக, மன்னராட்சி நடைபெற தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், பிறப்பால் ஒருவர் முதலமைச்சராகக் கூடாது என்றார்.
மூன்றாவதாக, தனி ஒரு நிறுவனம் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றுகிறது என்று குறிப்பிட்ட அவர், நான்காவதாக, தலித் மக்களுக்கு தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று கூறினார்.
புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தை மேற்கோள்காட்டி பேசிய அவர், தேர்தல் பிரசாரங்களில் திருமாவளவன் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
“ஆதவ் எழுப்பிய இந்த முக்கியக் கேள்விகள், இந்த நிகழ்வோடு முடிந்துவிடப் போவதில்லை”, என்று கூறும் மூத்த பத்திரிக்கையாளர் ஆர். மணி, இது நிச்சயமாக மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறும் என்று தெரிவித்தார்.
ஆதவின் இந்த கருத்துகள் திமுகவை நேரடியாக சாடிய கருத்துகள். திமுகவின் அழுத்தம் காரணமாகவே, திருமாவளவன் இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என்கிறார் அவர். எனினும் இந்த கருத்தை திமுகவினர் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர்.
“ஆதவ் கட்சியில் சேர்ந்தது முதல் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவரை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் அல்லது புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்ல அனுமதித்திருக்கக் கூடாது.
வெளியீட்டு விழாவிற்கு அனுப்பிவிட்டு, பிறகு கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்வது எப்படி சரியாகும்? முரண்பட்ட முடிவுகளாலும், திமுகவின் அழுத்தத்தினாலும் இத்தகைய பின்விளைவுகளை தற்போது விசிக சந்தித்து வருகிறது,” என்று கூறுகிறார் மணி.
‘ஆதவ் எழுப்பிய கேள்விகளில் தவறில்லை’
“தலித் மக்களின் நலன்களை காக்க உருவாக்கப்பட்ட ஒரு கட்சி, தலித் மக்களின் நலன் குறித்து கேள்வி எழுப்பிய ஒரு நபரை இடை நீக்கம் செய்திருப்பது முரணாக இருக்கிறது,” என்கிறார் தலித் இண்டெலெக்சுவல் கலெக்டிவ் கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் கூறுகிறார்.
தலித் நலன் சார்ந்து ஆதவ் எழுப்பிய கேள்விகளில் தவறில்லை என்று கூறுகிறார் அவர். “விசிகவை விமர்சனம் செய்து பேசியிருந்தால் இந்த ஒழுங்கு நடவடிக்கை சரி. ஆனால், திமுகவை விமர்சனம் செய்ததற்கு இத்தகைய நடவடிக்கைகள் எடுக்க இருந்த காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார் லட்சுமணன்.
“திமுக, விசிகவை ஒரு கூட்டணி கட்சி போல் நடத்தவில்லை. ஒருவேளை திமுக பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தால், இவ்வாறு பாமகவுக்கு திமுக அழுத்தம் கொடுத்திருக்காது” என்ற விமர்சனத்தையும் அவர் முன்வைக்கிறார்.
மாறுபடுமா கூட்டணி கணக்குகள்?
இந்த விவகாரம் இப்படியே புகைந்து கொண்டிருந்தால், இது விசிகவின் பலத்தை தான் குறைக்கும் என்கிறார் மணி.
“ஏற்கனவே, புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனை பங்கேற்கவிடாமல் செய்தது, தற்போது ஆதவை கட்சிப் பொறுப்பில் இருந்து இடை நீக்கம் செய்ய அழுத்தம் தந்திருப்பது என்று திமுக தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலை நீடித்துக் கொண்டே செல்லும் போது, திமுகவின் கை தான், தேர்தல் தொகுதி பங்கீட்டில் அதிகமாக இருக்கும்.
பல பிரச்னைகள் ஏற்பட வழிவகை செய்த பின்னர், விசிகவும் துணிந்து சென்று தங்களுக்கு இத்தனை தொகுதிகள் தேவை என்று கேட்கவும் இயலாது. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் உள்ளது. ஆனால், திமுக-விசிகவின் உறவைப் பொறுத்தே தேர்தல் கணக்குகள் இருக்கும்,” என்கிறார் மணி.
வரும் 2026 தேர்தலில் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா, அல்லது கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்று வன்னி அரசிடம் கேட்ட போது, அதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறினார்.
“ஆட்சி பகிர்வு அதிகாரப் பகிர்வு என்பது விசிகவின் முழக்கமாக இருக்கிறது. அதே நேரத்தில், இந்த கூட்டணியில் நாங்கள் இணையவில்லை. அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.
2011ம் ஆண்டில் நாங்கள் 10 இடங்களில் போட்டியிட்டோம். ஆனால், 2021ம் ஆண்டு தேர்தலில் 6 இடங்கள் தரப்பட்ட போது, மாநிலக் கட்சிகளின் வலிமையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பாஜக முயற்சிகளை தோற்கடிக்கவே ஒன்றிணைந்தோம்.
2019 துவங்கி, 2024 வரை வெற்றிக் கூட்டணியாக எங்களின் கூட்டணி தொடர்கிறது. அது, 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இலக்கே முக்கியம்,” என்கிறார் வன்னி அரசு.
திமுகவின் கூட்டணி கொள்கை கூட்டணி. இது போன்ற விவகாரங்கள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தாது என்று கூறுகிறார், திமுகவின் செய்தித் தொடர்பாளர் சரவணன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு