‘தாயைப் பார்ப்பது போல் உணர வேண்டும்’ – தெலங்கானா தல்லி சிலையை மாற்றிய காங்கிரஸ் அரசு

தெலங்கானா தல்லி சிலை

பட மூலாதாரம், Telangana CM

படக்குறிப்பு, தெலங்கானா தல்லி சிலை
  • எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா
  • பதவி, பிபிசி

தெலங்கானா தலைமைச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்ட தெலங்கானா தல்லி சிலையை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி திறந்து வைத்தார்.

முந்தைய சிலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய சிலையின் தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தெலங்கானா தல்லி சிலை மக்களுக்காக உருவாக்கப்பட்டது. மக்கள் தல்லி சிலையை பார்க்கும்போது தாயைப் பார்ப்பது போல் உணர வேண்டும் என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வடிவமைத்தது யார்?

சுமார் ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சிலையை ஜவஹர்லால் நேரு கட்டடக்கலை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கங்காதரும், சிற்பி ரமணா ரெட்டியும் வடிவமைத்துள்ளனர்.

“முழு சிலையையும் செய்து முடிக்க ஐந்து மாதங்கள் ஆனது. முதல்வர் ரேவந்த் ரெட்டி மூன்று மாதங்களாக வரைபடங்களைப் பார்த்து மாற்றங்களை குறிப்பிட்டார். பேராசிரியர் கங்காதர் தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு, நாங்கள் சிலையை செதுக்கினோம்” என்று ரமணா ரெட்டி பிபிசியிடம் கூறினார்.

தெலங்கானாவில் தியாகிகள் சிலை மற்றும் தலைமை செயலகம் எதிரே உள்ள ராஜீவ் காந்தி சிலை ஆகியவற்றை செதுக்கியது ரமணா ரெட்டிதான்.

மேலும், ஜவஹர்லால் நேரு கட்டடக்கலை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் கங்காதரை அரசு சமீபத்தில் நியமித்தது.

எதிர்கட்சி எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

தெலங்கானா தல்லி சிலை

பட மூலாதாரம், brs party

படக்குறிப்பு, தெலங்கானா தல்லி சிலை

தெலங்கானா தல்லி சிலை முந்தைய பிஆர்எஸ் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த சமயத்தில் அந்தச் சிலையில் வடிவமைப்பில், சிவப்பு நிறப் புடவை, தங்க நிற பார்டர், தலையில் கிரீடம், ஒரு கையில் மக்காச்சோளம் இருக்கும். கலாச்சார அடையாளமான ‘பதுகம்மா’ , மற்றொரு கையில் இருக்கும்.

தெலங்கானா பவன், தெலுங்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சிலை காணப்படுகின்றன.

தற்போது காங்கிரஸ் அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சிலை வடிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், “செயலகத்தில் நிறுவப்பட்டிருப்பது தெலங்கானா தல்லி சிலையா? காங்கிரஸ் தல்லி சிலையா?” என்று பிஆர்எஸ் கட்சி கேள்வி எழுப்புகிறது.

தற்போதைய சிலை எப்படி உள்ளது?

தெலங்கானா தல்லி சிலை

பட மூலாதாரம், Telangana CM

படக்குறிப்பு, தெலங்கானா தல்லி சிலை

அரசால் திறக்கப்படவுள்ள சிலையானது தங்க பார்டர்களுடன் கூடிய பச்சை நிற புடவை அணிந்து, ஒரு கையில் அரிசி, சோளம், கம்பு பயிரும், கழுத்தில் ஆபரணங்கள், மூக்குத்தி, கண்ணாடி வளையல்கள் ஆகியவை அணிந்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கையை உயர்த்தி பாதுகாப்பு அளிப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடுப்பில் ஒட்டியாணத்திற்கு பதிலாக புடவையை இடுப்பை சுற்றி சொருகி இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

“பச்சை சேலை என்பது தெலங்கானாவின் பசுமையை குறிக்கிறது. இடுப்பில் சேலையை சொருகி இருப்பது வேலைக்கு செல்லும் பெண்களையும் போருக்கு சென்ற பெண்களையும் பிரதிபலிக்கிறது. கழுத்தில் நெக்லஸ், வளையல்கள் என இந்த சிலை தெலுங்கானாவின் சாமானியப் பெண்ணின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது” என்று சிற்பி ரமணா ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

” தல்லி சிலையில் இருந்த கிரீடம் இல்லை. கையில் இருந்த பதுகம்மாவும் மறைந்துவிட்டது. தெலங்கானா அன்னை காலில் அணிந்திருந்த காப்பு இல்லை” என முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கே டி ராமாராவ் கூறியுள்ளார்

முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம்

 சிற்பி ரமணா ரெட்டி

படக்குறிப்பு, சிற்பி ரமணா ரெட்டி

தெலங்கானா தல்லி சிலை நிறுவப்பட்டது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பதில் அளித்தார்.

தெலங்கானா தல்லியின் அதிகாரப்பூர்வ பிரதி கடந்த பத்து ஆண்டுகளில் எங்கும் அறிவிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

“இதுவரை தெலங்கானா தல்லியின் சிலை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. தெலங்கானா அம்மன் மற்றும் தெலுங்கானா தல்லி ஆகிய இரண்டு உருவ சிலைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்று விளக்கினார்.

“தெலங்கானா அன்னை வைரம், மரகதம், கிரீடங்களுடன்தான் இருக்க வேண்டுமா? நம் தாயைப் போன்ற தோற்றத்தில் இருக்கக் கூடாதா? தல்லி சிலை நம் தாயின் பிரதியாக இருக்க வேண்டும் என அறிஞர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி, தெலங்கானா தல்லி சிலையை வடிவமைத்துள்ளோம்” என்று ரேவந்த் ரெட்டி கூறினார்.

இந்த விவகாரம் குறித்து ரமணா ரெட்டி பிபிசியிடம் பேசினார்.

“முந்தைய சிலை தெய்வம் போன்ற தோற்றத்தில் இருந்தது. நம் அம்மாவை உருவகப்படுத்தும் போது கிரீடம் இருந்தால் இயல்பாக இருக்காது. அதனால் தெலங்கானா தல்லி என்று சொல்லும் போது சாதாரண பெண்ணின் உருவத்தை கொண்டு வந்து அதற்கேற்ப செதுக்கினோம்” என்று அவர் கூறினார்.

கையில் பதுகம்மா இல்லை என்ற பிஆர்எஸ்ஸின் விமர்சனத்திற்கு பதிலளித்த ரமணா ரெட்டி, “பத்துகம்மா என்னும் பண்டிகை மட்டும் இன்றி, சதர், சம்மக்கா-சரக்கா என பல்வேறு பண்டிகைகள் தெலங்கானா கலாசாரத்தின் அங்கமாக உள்ளது. எல்லா பண்டிகைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. ஒரு பண்டிக்கையை மட்டும் ஏன் சிலையின் சித்தரிக்க வேண்டும்?” என்றார்.

இனி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தெலங்கானா தல்லி அவதார உற்சவமும் நடத்தப்படும் என தெலங்கானா அரசு அறிவித்தது.

தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலங்கானா மாநிலம், மாவட்டம் மற்றும் மண்டலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ஆம் தேதி தெலங்கானா தல்லி அவதார உத்சவ விழாவை அதிகாரப்பூர்வமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.