சிரியாவின் அதிபர் அல்-அசாத்தை பதவியில் இருந்து அகற்றுவதே தனது நோக்கம் என்று அல்-ஜவ்லானி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 2016ல் அபு முகமது அல்-ஜவ்லானி பதிவு செய்யப்பட்ட காணொளியில் பேசினார்
  • எழுதியவர், செய்தியாளர்கள் குழு
  • பதவி, பிபிசி

13 ஆண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, சிரியா அதிபர் பஷர் அல்-அசத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

‘சர்வாதிகாரி’ பஷர் அல் அசத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனக் கூறியுள்ள கிளர்ச்சிப் படைகள், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளன.

12 நாட்களுக்கு முன்பு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழு மற்றும் அவர்களின் கூட்டாளிகள் சிரியாவின் வடமேற்கு பகுதியில் ஒரு பெரிய தாக்குதலைத் திடீரென தொடங்கின.

கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை முதலில் கைப்பற்றினர். பின்னர் சிரியா ராணுவம் சரிந்ததால், தலைநகரான டமாஸ்கஸையும் கைப்பற்றினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அல்-ஜவ்லானி எங்கிருந்து வந்ததாகக் கருதப்படுகிறார்?

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி. இவர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன

சமீபத்திய ஆண்டுகளில், அவர் மிதவாதியாக நடந்துகொள்வதைப்போல் ஒரு தோற்றத்தை உலகிற்கு வழங்க முயற்சிக்கிறார்.

இருப்பினும், அமெரிக்கா அவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதியை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

அபு முகமது அல்-ஜவ்லானி என்பது ஒரு புனைப்பெயர். அவரது உண்மையான பெயர் மற்றும் வயது குறித்து சர்ச்சை உள்ளது.

அபு முகமது அல்-ஜவ்லானி அமெரிக்க ஒளிபரப்பாளரான பிபிஎஸ்ஸிடம் அளித்த பேட்டியில், தனது பெற்றோர் தனக்கு வைத்த பெயர் அகமது அல்-ஷாரா என கூறியுள்ளார். கோலன் பகுதியில் இருந்து வந்த ஒரு சிரியா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார்

செளதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் பிறந்ததாகவும், அப்போது அவரது தந்தை அங்கு பணிபுரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் டமாஸ்கஸில் வளர்ந்ததாகவும் அல்-ஜவ்லானி தெரிவித்தார்.

ஆனால், அவர் கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸோரில் பிறந்தார் என்றும், இஸ்லாமிய கிளர்ச்சிக்குழுவில் சேர்வதற்கு முன்பு மருத்துவம் படித்தார் என்றும் சில செய்திகள் கூறுகின்றன.

அவர் 1975 மற்றும் 1979 க்கு இடையில் பிறந்தார் என ஐநா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவர் 1979 இல் பிறந்தார் என்று இன்டர்போல் கூறுகிறது.

அஸ்- சஃபிர் செய்தித்தாள் அவர் 1981 இல் பிறந்தார் என்று கூறுகிறது.

அல்-ஜவ்லானி எப்படி இஸ்லாமியக் குழுவின் தலைவரானார்?

இராக்கில் 2003-ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படைகளின் கூட்டுப் படையெடுப்பிற்குப் பிறகு, அல்-கொய்தா ஜிஹாதி குழுவில் அல்-ஜவ்லானி இணைந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த கூட்டுப்படை அதிபர் சதாம் ஹுசைனையும் அவரது பாத் கட்சியையும் அதிகாரத்தில் இருந்து விரைவில் அகற்றியது. அதன் விளைவாக பல்வேறு ஆயுதக் குழுக்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்பை எதிர்கொண்டது.

ராணுவ உடையில் அல்-ஜவ்லானி

பட மூலாதாரம், Hayat Tahrir al-Sham

படக்குறிப்பு, சிரியாவின் அதிபர் அல்-அசத்தை பதவியில் இருந்து அகற்றுவதே தனது நோக்கம் என்று அல்-ஜவ்லானி கூறியுள்ளார்.

2010-ஆம் ஆண்டில், அபு முகமது அல்-ஜவ்லானி இராக்கில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு குவைத் எல்லைக்கு அருகிலுள்ள புக்கா கேம்பில் வைக்கப்பட்டார்.

அங்கு அவர் இருந்த காலத்தில், பிற்காலத்தில் இஸ்லாமிய அரசு (IS) என தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும் குழுவை உருவாக்கிய பிற ஜிஹாதிகளை அவர் சந்தித்தார். எதிர்காலத்தில் இராக் ஐஎஸ் குழு தலைவராக மாறிய அபு பக்கர் அல்-பாக்தாதி உட்பட பலரையும் அவர் புக்கா கேம்பில் சந்தித்தார்.

2011ல் சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசத்தின் ஆட்சிக்கு எதிராக ஆயுத மோதல் வெடித்ததை அடுத்து, அந்த நாட்டுக்குச் சென்று அமைப்பின் ஒரு பிரிவைத் தொடங்க, தன்னை அல்-பாக்தாதி அனுப்பியதாக அல்-ஜவ்லானி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

‘நுஸ்ரா முன்னணி’ (அல்லது ஜபத் அல்-நுஸ்ரா) என்ற ஆயுதக் குழுவின் படைத்த தலைவரானார், அல்-ஜவ்லானி.

இக்குழு ஐஎஸ் குழுவுடன் ரகசிய தொடர்பை கொண்டது . போர்க்களத்தில் பல வெற்றிகளைப் பெற்றது.

இராக்கில் ஐஎஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அல்-பாக்தாதி

2013 இல், அல்-ஜவ்லானி நுஸ்ரா முன்னணியின் ஐஎஸ் குழு உடனான தொடர்பைத் துண்டித்து, அல்-கொய்தாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். இருப்பினும், 2016 இல் அவர் அல்-கொய்தாவிலிருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்தார்.

2017- ஆம் ஆண்டில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) எனும் குழுவை உருவாக்க தனது போராளிகள் சிரியாவில் உள்ள மற்ற கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்ததாக அல்-ஜவ்லானி கூறினார்.

அல்-ஜவ்லானி முழு குழுவிற்கும் தலைவரானார்.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான சிரிய கிளர்ச்சிப் போராளிகள் அலெப்போவை நோக்கி ஒரு குடியேற்றத்தில் உள்ள கட்டிடங்களைக் கடந்து செல்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

அல்-ஜவ்லானி எந்த வகையான ஆட்சியாளர்?

அல்-ஜவ்லானியின் கீழ், வடமேற்கு சிரியாவில் உள்ள இட்லிப் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், முக்கியக் கிளர்ச்சிக் குழுவாக மாறியது.

நகரத்தில் போருக்கு முந்தைய மக்கள்தொகை 2.7 மில்லியனாக இருந்தது. சில மதிப்பீடுகளின்படி இடம்பெயர்ந்த மக்களின் வருகையால் இது நான்கு மில்லியனாக அதிகரித்துள்ளது.

இட்லிப் மாகாணத்தில் சுகாதார சேவைகள், கல்வி மற்றும் உள் பாதுகாப்பை வழங்குவதன் மூலம் உள்ளூர் அரசாங்கத்தைப் போல் இது செயல்படுகின்றது.

2021 இல் அமெரிக்க ஒளிபரப்பாளரான பிபிஎஸ்ஸிடம், அல்-கொய்தாவின் உலகளாவிய ஜிஹாத் உக்தியை தான் பின்பற்றவில்லை என்று அல்-ஜவ்லானி கூறினார்.

சிரியாவின் அதிபர் அல்-அசத்தை பதவியில் இருந்து அகற்றுவதே தனது முக்கிய நோக்கம் என்றும், அமெரிக்காவும் மேற்குலகும் இதே நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“இந்தப் பகுதி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இல்லை” என்றும், “இந்தப் பகுதி வெளிநாட்டு ஜிஹாத்தை செயல்படுத்துவதற்கான களம் அல்ல.” என்றும் அவர் கூறினார்.

2020 இல், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, இட்லிப்பில் அல்-கொய்தாவின் தளங்களை மூடி, ஆயுதங்களைக் கைப்பற்றியது. அதன் தலைவர்கள் சிலரை சிறையில் அடைத்தது.

மேலும் இட்லிப்பில் ஐஎஸ் குழுவின் செயல்பாடுகளை முறியடித்துள்ளது.

அல்-ஜவ்லானி இட்லிப்பில் உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசுகிறார்

பட மூலாதாரம், HTS

படக்குறிப்பு, 2023 சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு உள்ளூர் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட அல்-ஜவ்லானி

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்லாமிய சட்டத்தை திணிக்கிறது. ஆனால் ஜிஹாதி குழுக்களின் கட்டுப்பாட்டை விட இது சற்று குறைவான கண்டிப்புடன் செயல்படுகின்றது.

இது கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாத பிறருடன் வெளிப்படையான தொடர்பை கொண்டுள்ளது. ஆனால் இந்த மிதவாத நடவடிக்கைகள் குறித்து ஜிஹாதி குழுக்கள் விமர்சிக்கின்றன.

இருப்பினும், பொது எதிர்ப்புக்கு எதிராகவும், மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுவதாகவும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மீது மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை அல்-ஜவ்லானி மறுத்துள்ளார்.

பல மேற்குலக நாடுகள், மத்திய கிழக்கு அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றால் ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அல்-ஜவ்லானிக்கு அல்-கொய்தாவுடனான கடந்தகால தொடர்புகள் காரணமாக, அவரைப் பிடிக்க வழிவகுக்கும் எந்தவொரு தகவலுக்கும் 10 மில்லியன் டாலர் வெகுமதியை அமெரிக்க அரசாங்கம் வழங்குவதாக அறிவித்துள்ளது