வங்கதேசம் – பாகிஸ்தான் நெருக்கம் காட்டுவது ஏன்? – இந்தியாவிற்கு என்ன கவலை?

வங்கதேசம் பாகிஸ்தானை நெருங்குவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்துமா

பட மூலாதாரம், @shehbazsharif

படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்பதை விசா விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன
  • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
  • பதவி, பிபிசி செய்தியாளர்

நான்கு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த அதிகார மாற்றத்திற்குப் பிறகு வங்கதேசம், பாகிஸ்தானுடனான தன் உறவுகளில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையிலான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பாகிஸ்தானிய குடிமக்களுக்கு விசா வழங்குவதற்குத் தேவையான கட்டாய பாதுகாப்பு சோதனை விதி நீக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் குடிமக்களுக்கு விசா நடைமுறை எளிமையாக்கப்படும் என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மக்களுக்கும், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும் விசா வழங்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

அதே நேரம் செம்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான், வங்கதேச குடிமக்களுக்கான விசா கட்டணத்தை தள்ளுபடி செய்தது. விசா நடைமுறையை எளிதாக்கியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2019-ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனா அரசு வங்கதேசத்திற்கு விசா கோரும் அனைத்து பாகிஸ்தானிய குடிமக்களுக்கும் வங்கதேசத்தின் பாதுகாப்பு சேவைப் பிரிவிலிருந்து பாதுகாப்பு அனுமதி பெறுவதை கட்டாயமாக்கியது.

தற்போது இந்த விதியும் நீக்கப்பட்டுள்ளது.

வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்க முயற்சிக்கிறது என்பதைக் குறிக்கும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட வங்கதேசம்

வங்கதேசம் பாகிஸ்தானை நெருங்குவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தபோது,​​இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது

பாகிஸ்தானிடமிருந்து குண்டுகளை வாங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் வங்கதேசம் கையெழுத்திட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருநாடுகளுக்கும் இடையே கடல் வழி வர்த்தகமும் தொடங்கியது.

பாகிஸ்தானின் சரக்குக் கப்பல் ஒன்று சமீபத்தில் வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்தை சென்றடைந்தது.

இதுமட்டுமின்றி பாகிஸ்தானிடம் இருந்து 25 ஆயிரம் டன் சர்க்கரை வாங்கவும் வங்கதேசம் ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கதேசம் இதுவரை இந்தியாவில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்து வந்தது.

ஷேக் ஹசீனா அரசு வெளியேறிய சிறிது காலத்திற்கு உள்ளாகவே வங்கதேசம், பாகிஸ்தானிடம் இருந்து பெருமளவில் குண்டுகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் உருவானதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வரலாற்றுப் பதற்றத்தை கருத்தில் கொண்டுபார்க்கும்போது இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது, ​​வங்கதேசம் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது. ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்தது.

இந்தியாவுடன் தொடர்புடைய வங்கதேசத்தின் நலன்கள்

வங்கதேசம் பாகிஸ்தானை நெருங்குவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்தின் பொருளாதார நலன்கள் இந்தியாவுடன் தொடர்புடையவை என்று சர்வதேச விவகார நிபுணர்கள் கருதுகின்றனர்

வங்கதேசத்துடன் சுமார் நாலாயிரம் கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்தியா, வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இதற்காக இந்தியாவும் வங்கதேசத்தில் பெரும் முதலீடு செய்தது. வங்கதேசத்தை செயல் உத்தி ரீதியிலான முக்கிய நட்பு நாடாக இந்தியா கருதுகிறது.

பாகிஸ்தான் நீண்ட காலமாக வங்கதேசத்திடமிருந்து விலகி இருப்பதற்கு இதுவே காரணம்.

ஆனால், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, அந்த நாட்டின் புவிசார் அரசியல் கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதாகத் தெரிகிறது. மேலும் இந்தியாவை சார்ந்திருப்பதை குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தானுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமாக வங்கதேசம், தெற்காசியாவின் அரசியலை இனி இந்தியாவின் கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டோம் என்ற செய்தியை அனுப்ப முயற்சிக்கிறது.

வங்கதேசம் பாகிஸ்தானை நெருங்குவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்துடன் சுமார் நாலாயிரம் கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது இந்தியா

‘இந்தியா கவலைப்படத் தேவையில்லை’

ஆனால் வங்கதேசம் பாகிஸ்தானுடன் நீண்ட காலம் நெருக்கமாக இருப்பது எளிதல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“வங்கதேசம் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் இது எளிதானது அல்ல. வங்கதேசத்தின் பொருளாதார நலன்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன,” என்று சர்வதேச விவகார நிபுணர் ஸ்மிருதி எஸ் பட்நாயக் குறிப்பிட்டார்.

“வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டுமே சுதந்திர நாடுகள். அவை தங்களிடையே வணிக உறவுகளை உருவாக்கிக்கொள்ள முடியும். இதைப் பற்றி இந்தியா கவலைப்படத் தேவையில்லை,” என்றும் அவர் கூறினார்.

“சந்தைக்கு அதன் சொந்த விதிகள் உள்ளன. இந்தியாவிற்கு பதிலாக பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை மேம்படுத்துவது வங்கதேசத்தின் பொருளாதார நலனுக்கு ஏற்புடையதாக இருக்காது,” என்கிறார் அவர்.

இருப்பினும் சமீபத்திய மாதங்களில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள், வங்கதேசம் பாகிஸ்தானுடன் நெருக்கமாவதை சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

‘ஸ்திரமின்மை கட்டத்தில் இருக்கும் வங்கதேசம்’

வங்கதேசம் பாகிஸ்தானை நெருங்குவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்போது பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொள்வது வங்கதேசத்தின் நிர்பந்தம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்

வங்கதேசம் தற்போது ஸ்திரமின்மையின் கட்டத்தில் உள்ளது என்று சர்வதேச விவகார நிபுணரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சஞ்சய் பரத்வாஜ் கூறினார்.

இஸ்லாமிய சித்தாந்தத்தை நெருங்குவது அங்குள்ள இடைக்கால அரசின் அரசியல் நிர்ப்பந்தமும் கூட என்கிறார் அவர்.

​​”அரசுக்கு நெருக்கடி அல்லது அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய சித்தாந்தத்துடன் நெருக்கமாகத் தோன்ற முயற்சிக்கிறது,” என்று சஞ்சய் பரத்வாஜ் குறிப்பிட்டார்.

“1975-இல் ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பிறகு அடுத்த அரசு வங்கதேசத்தை இஸ்லாமியமயமாக்க முயன்றது. இதற்குப் பிறகு ராணுவ ஆட்சியின் போது கூட நாட்டை இஸ்லாமியமயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானின் சித்தாந்தங்களை நம்பும் வங்கதேசத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவு ராணுவத்திற்கு கிடைக்கும் என்று நம்பப்பட்டது.” என்கிறார் சஞ்சய் பரத்வாஜ்.

மேலும், “இஸ்லாமிய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட வகுப்பினரை தன்பக்கம் கொண்டுவர அங்குள்ள இடைக்கால அரசு இப்போது முயற்சிப்பதாகத் தோன்றுகிறது.” என்றும் அவர் கூறுகிறார்.

வங்கதேசம் பாகிஸ்தானை நெருங்குவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்துமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1971 போருக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்தது

வங்கதேசம் உருவான போது இருந்த சூழ்நிலை

1971-இல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக மாறியது. அப்போது இந்தியாவில் இருந்த இந்திரா காந்தி அரசு, வங்கதேச தேசியவாதிகளுக்கு ராணுவ மற்றும் அரசியல் உதவிகளை வழங்கியது.

“வங்கதேசத்தில் உள்ள வங்காள கலாச்சார சித்தாந்தம், மதச்சார்பின்மையை ஊக்குவிக்கிறது. வங்கதேசத்தின் வங்காள கலாச்சாரம் மதச்சார்பற்றது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒன்று,” என்று பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ் குறிப்பிட்டார்.

“அதாவது இந்த சித்தாந்தம் ஜனநாயக இந்தியாவிற்கு நெருக்கமானது. அத்தகைய சூழ்நிலையில் அங்குள்ள புதிய ஆட்சி இஸ்லாமிய சித்தாந்தம் மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பது போலக் காட்டிக்கொள்வது ஒரு அரசியல் நிர்பந்தம் போலவே தெரிகிறது.” என்கிறார்.

பாகிஸ்தானுடன் உறவுகளை வலுப்படுத்துவதாக காண்பித்துக்கொள்வது, இந்தியாவுக்கு ஒரு செய்தியை தெரிவிப்பதற்கான வங்கதேசத்தின் முயற்சி என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“ஷேக் ஹசீனா காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்கவில்லை. ஆனால் அந்த காலத்திலும் வங்கதேச தூதாண்மை அதிகாரிகள் பாகிஸ்தானில் இருந்தனர். ஹசீனாவின் பதவிக் காலத்தை ஒப்பிடும்போது, இப்போது பாகிஸ்தானுடனான வங்கதேசத்தின் உறவு நிச்சயம் மேம்பட்டு வருகிறது” என்றார் ஸ்மிருதி பட்நாயக்.

”பொருளாதார ரீதியாக பாகிஸ்தானும், வங்கதேசமும் நெருங்குவதில் சவால்கள் இருந்தாலும், கருத்தியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவை நெருங்கி வர முடியும்,” என்கிறார் அவர்

இந்தியாவுக்கு இது கவலைதரும் விஷயமா?

வங்கதேசத்தில் இஸ்லாமிய சித்தாந்தம் வலுப்பெறுவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தக்கூடும்.

இருப்பினும் 1971 போருக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து பிரிந்த வங்கதேசம், இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அளவுக்கு பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இது நடப்பது அவ்வளவு எளிது அல்ல என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“1947-இல் வங்கதேசம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானுடன் இணைந்திருப்பது முடியாமல் போனது. இதற்கு கலாசார மற்றும் புவியியல் காரணங்கள் இருந்தன. இதுபோன்ற சூழ்நிலையில் வங்கதேசமும் பாகிஸ்தானும் மிக நெருக்கமாக முடியும் என்று தோன்றவில்லை,” என்று பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ் குறிப்பிட்டார்.

“பெரும்பாலான வங்கதேச மக்கள் வங்காள தேசியவாதம், மதச்சார்பின்மை மற்றும் உள்ளடக்கிய அமைப்புமுறை ஆகியவற்றை நம்புகிறார்கள். மேலும் இந்த சித்தாந்தம் வங்கதேசத்தை இந்தியாவுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது.” என்கிறார் சஞ்சய்.

ஆனால், வங்கதேசம் பாகிஸ்தானை நெருங்குவது இந்தியாவுக்கு பல நிலைகளில் நிச்சயம் சவால்களை உருவாக்கும்.

“வட-கிழக்கில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து இந்தியாவின் கவலை இருக்கும். வங்கதேசத்துடனான தனது எல்லைப் பகுதி ஸ்திரமற்றதாக மாறுவதையும், எல்லைக்கு அப்பால் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதையும் இந்தியா விரும்பாது. வங்கதேசம் வட-கிழக்கு ஆயுத குழுக்களுக்கு புகலிடம் அளித்தால், அது இந்தியாவுக்கு நிச்சயம் கவலையை ஏற்படுத்தும்,” என்று ஸ்மிருதி பட்நாயக் கூறினார்.

அதே நேரம் வங்கதேசத்தில் இஸ்லாமிய சித்தாந்தம் மற்றும் அடிப்படைவாதக் கூறுகள் வலுப்பெறுவதும் இந்தியாவுக்கு பாதுகாப்பு தொடர்பான கவலைகளை உருவாக்கலாம்.

“வங்கதேசத்தில் மதச்சார்பற்ற சக்திகளும் உள்ளன. அங்கு இஸ்லாமிய சித்தாந்தம் வலுவடைகிறதா அல்லது மதச்சார்பற்ற சித்தாந்தம் வலுவடைகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்,” என்று ஸ்மிருதி சுட்டிக்காட்டினார்.

“எந்த அண்டை நாடாக இருந்தாலும், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் அடிப்படைவாதத்தின் எழுச்சி என்பது கவலையளிக்கக்கூடியது. ஏனெனில் இதுபோன்ற சூழ்நிலையில் சிறுபான்மை சமூகத்தின் மீதான அச்சுறுத்தல் அதிகரிக்கிறது,” என்று பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ் குறிப்பிட்டார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.