விசிக – தவெக: ‘திருமாவுக்கு கூட்டணிக் கட்சிகளால் அழுத்தம்’ – விஜய் திருமாவளவன் குறித்துக் கூறியது என்ன?

விசிக - தவெக: 'திருமாவுக்கு கூட்டணிக் கட்சிகளால் அழுத்தம்' - விஜய் திருமாவளவன் குறித்துக் கூறியது என்ன?

பட மூலாதாரம், Aadhav Arjuna/X

நடிகர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் குறித்துப் பேசியது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் வெளியிட்டது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

த.வெ.க தலைவர் விஜய் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர் விஜய், கட்சி துவங்கிய பிறகு பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுதான். எனவே இந்த நிகழ்ச்சியில் அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலத்தரப்பினர் மத்தியில் எழுந்தது.

`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை த.வெ.க தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெம்டும்டேவும், இரண்டாவது பிரதியை மேனாள் நீதிபதி சந்துரு பெற்று கொண்டனர். மூன்றாவது பிரதியை ஆதவ் அர்ஜுனாவும், நான்காவது பிரதியை விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனும் பெற்றுக்கொண்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புத்தக வெளியீட்டு விழாவில் அம்பேத்கரை பற்றிப் பேசிய விஜய், “அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதைப் பெரும் வரமாகக் கருதுகிறேன். மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இருக்கும் இந்த மேடையில் நான் பங்கேற்றது பெருமையாக இருக்கிறது.”

“பிறப்பால் நாம் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் அரசியல் சாசன சட்டத்தைக் கொடுத்தவர் அம்பேத்கர். இன்றைய சூழலில் அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவை பற்றி என்ன நினைப்பார்? இப்போது நடக்கு பிரச்னைகளையும், கொடுமைகளையும் பார்த்தால் அம்பேத்கர் வெட்கித் தலைகுனிவார்,” என்றார்.

முன்னதாக, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. பின்னர் அவர் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதற்கு விளக்கமளிக்கும் வகையில் திருமாவளவன் இன்று அறிக்கை வெளியிட்டுத் தெளிவுபடுத்தியிருந்தார். இந்நிலையில், அதுகுறித்தும் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

விசிக - தவெக: 'திருமாவுக்கு கூட்டணிக் கட்சிகளால் அழுத்தம்' - விஜய் திருமாவளவன் குறித்துக் கூறியது என்ன?

பட மூலாதாரம், TVK IT WING

அதுகுறித்துப் பேசியபோது, “அம்பேத்கரின் நினைவு நாளில், இப்படி ஒரு நிகழ்வில் கலந்துகொள்வது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்” என்று பேசிய விஜய், “விசிக தலைவர் திருமாவளவன் அவர்களால் இன்று வர முடியாமல் போனது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு அவருக்குக் கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது” என்றார்.

இதுகுறித்துப் பேசும்போது, “திருமாவின் மனம் முழுவதும் இன்று நம்முடம்தான் இருக்கும்” என்று பேசியதோடு, விஜய் மத்திய அரசை விமர்சித்தும் கருத்து தெரிவித்தார்.

“அம்பேத்கர் குறித்துப் பேசும்போது சட்ட ஒழுங்கு பற்றி பேசாமல் இருக்க முடியாது. இந்தியாவில் எந்த அளவுக்கு சட்ட ஒழுங்கு மீறப்படுகிறது என்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதையெல்லாம் மத்தியில் ஆளும் அரசு கொஞ்சம்கூட கண்டுகொள்வது இல்லை” என்றார்.

திமுக அரசை கடுமையாக விமர்சித்த விஜய்

தவெக தலைவர் விஜய், “தமிழகத்தில் ஆளும் அரசு வேங்கை வயல் பிரச்னையைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது,” என்று தமிழக அரசையும் காட்டமாக விமர்சித்துப் பேசினார்.

மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகளில் அதிருப்தியை வெளிப்படுத்திய விஜய், “இதையெல்லாம் பார்த்தால் அம்பேத்கர் கோபப்படுவார்” என்றார்.

“இங்கே சம்பிரதாயத்திற்காக அரசியல் நடக்கிறது. வெள்ளத்தில் நின்று புகைப்படம் எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவது வழக்கமாகி விட்டது” என்று கூறிய அவர், தனக்கு அரசியல் செய்யத் தெரியாது என்றும் “மக்களின் உரிமைகளுக்காக உணர்வுப்பூர்வமாக குரல் கொடுப்பேன்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “இப்போது இங்கு நடக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு மக்களை மனதார நேசிக்கும் ஒரு தலைவரின் ஆட்சி. மக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை உரிமையான பாதுகாப்பை கூட உறுதி செய்யாத, கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் 200 வெல்வோம் என்று முழக்கமிடும் ஆட்சிக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை, உங்கள் சுயநலத்திற்காக நீங்கள் போடும் கூட்டணிக் கணக்குகள் 2026இல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்றார்.

‘தமிழகத்தில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்’

விசிக - தவெக: 'திருமாவுக்கு கூட்டணிக் கட்சிகளால் அழுத்தம்' - விஜய் திருமாவளவன் குறித்துக் கூறியது என்ன?

பட மூலாதாரம், Aadhav Arjuna/X

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “இனி தமிழகத்தில் மன்னர் ஆட்சி முறை உருவாகக்கூடாது” என்று பேசினார்.

“மன்னர் பரம்பரையை உருவாக்க தமிழகம் இனி ஒருபோதும் இடம் தராது. அதை ஒழிப்பதற்கு அம்பேத்கரின் சிந்தனைகள் நமக்குத் தேவைப்படுகின்றன. அம்பேத்கரின் கொள்கைகள் தமிழகத்தில் மன்னராட்சியை உடைக்கும்” என்றார்.

ஆதவ் அர்ஜுனா 2026 தேர்தல் பற்றிப் பேசியப்போது, “2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் ஒருவர் முதலமைச்சராகக் கூடாது” என்றார்.

விஜய் அரசியல் பிரவேசம் பற்றிப் பேசிய அவர், “ஒரு தலித் முதல்வராக வர வேண்டும் என முதலில் ஒலித்த குரல் விஜய் உடையதுதான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை முதலில் கூறியவர் விஜய்” என்றார்.

“சினிமாவில் ஆயிரம் கோடி வணிகத்தை கைவிட்டு விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆனால் இங்கு ஒரு தயாரிப்பு நிறுவனம், ஒட்டுமொத்த சினிமா துறையையும் கட்டுப்படுத்தி, அதில் அரசியல் செய்து வருகிறது” என்றார்.

“சினிமா துறையில் இருந்த விஜய்க்கு அரசியல் தெரியாது கொள்கை தெரியாது என்கிறார்கள். கொள்கை தெரிந்தவர்கள் அரசியலுக்கு வந்து என்ன செய்தார்கள்? ஊழல்தான் செய்தார்கள்” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு