திருடப்பட்ட முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞன் கைது ! on Friday, December 06, 2024
பல்வேறு பிரதேசங்களில் வைத்து திருடப்பட்ட முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேதவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு, வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஆவார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவரின் உதவியாளர்கள் மூலமாக சந்தேக நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், சேதவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் பல்வேறு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.