ப்ரோபா-3 திட்டத்தின் மூலம், சூரியனுக்கு அருகில் இரண்டு செயற்கைக் கோள்களைச் செலுத்தி, செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவதன் மூலம், அதன் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ஐரோப்பிய விண்வெளி நிலையம் ஆய்வு செய்யவுள்ளது.
ப்ரோபா-3 (PROBA-3) செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
இதற்காக ஏவப்படும் இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம், ஓர் ஆண்டில் 50 முறை செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அத்தகைய ஆய்வுகள் ஒவ்வொன்றும் ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும்.
இதன்மூலம், நெருங்கவே முடியாத, அவ்வளவு எளிதில் ஆராய முடியாத சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா என்ற படலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர். இந்த ஆய்வுத் திட்டத்தில் விஞ்ஞானிகள் என்ன செய்வார்கள்?
இரண்டு செயற்கைக் கோள்கள் எதற்காக?
இந்தத் திட்டம் ஒருவகையில் மற்ற விண்வெளி ஆய்வுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் தனித்துவமானது. ஏனெனில், இதில் ஒன்றல்ல, இரண்டு செயற்கைக் கோள்களை ஐரோப்பிய விண்வெளி நிலையம் பயன்படுத்துகிறது.
அவற்றுக்காக, புதிய வகைத் தொழில்நுட்பங்கள், புதிய அல்காரிதம்கள், புதிய மென்பொருள்கள், சென்சார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரிதான வகையில், ப்ரோபா-3 திட்டத்தில் இரண்டு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படுவது ஏன்?
இரண்டு செயற்கைக் கோள்களையும் “துல்லியமான பாதையில் நிலைநிறுத்தி” அவற்றை ஒன்றாகப் பறக்கச் செய்து ஒரு நிலையான கட்டமைப்பு பராமரிக்கப்படும்.
அதாவது, இரண்டும் விண்வெளியில் நெருக்கமாக, ஒரு நிலையான வடிவத்தில் நகரும். இந்த வகையான முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை. செயற்கைக்கோள்கள் இரண்டுக்கும் இடையே ஒரே தொலைவையும் நோக்குநிலையையும் பராமரிக்க ஒன்றிணைந்து செயல்படும்.
எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், போர் விமான சாகசங்களின்போது, இரண்டு போர் விமானங்கள் நெருக்கமாக இணைந்து பறப்பதைப் பார்த்திருப்போம். அதைப் போன்ற ஒரு செயல்முறையை இந்தத் திட்டத்தில், விண்வெளியில் இரண்டு செயற்கைக் கோள்கள் செய்வதாகப் புரிந்துகொள்ளலாம்.
ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ப்ரோபா-1, 2 ஆகியவை இந்தத் திட்டத்தின் முன்னோடிகள். இதில் ப்ரோபா-1, 2001ஆம் ஆண்டு இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. ப்ரோபா-2 2009இல் ஏவப்பட்டது.
ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுக்கள் ப்ரோபா-3 திட்டத்தில் பணியாற்றியுள்ளனர்.
ப்ரோபா-3 சூரியனை எப்படி ஆய்வு செய்யும்?
இரண்டு செயற்கைக் கோள்களும் இணைந்து பறக்கும்போது அவற்றின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இரண்டுக்குமான இடைவெளியில் ஒரு மில்லிமீட்டர் மாறுபட்டாலும், இது பலனளிக்காது.
ஒரு செயற்கைக்கோள் சிறிது நகர்ந்தாலும், அதனுடனான தொடர்பை, பாதை அமைப்பை நிலைநிறுத்த மற்றொரு செயற்கைக் கோளும் அதே வகையில் துல்லியமாக நகர வேண்டும். அப்படிச் செயல்பட்டால் மட்டுமே இந்த இணைப்பு சாத்தியப்படும்.
சூரிய ஒளியால் கண்கள் கூசுவதைத் தவிர்க்க சன் கிளாஸ் பயன்படுத்துவோம், அல்லவா! அதையே தொலைநோக்கி போட்டுக் கொண்டால் எப்படியிருக்குமோ, அப்படிப்பட்ட கருவிகள்தான் ப்ரோபா-3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு செயற்கைக்கோள்கள்.
சூரியனின் பிரகாசம் அளவிடற்கரியதாக இருப்பதால், அதன் வளிமண்டலம் மற்றும் அதிலுள்ள பிற சிறிய பொருள்களை ஆய்வு செய்வது மிகக் கடினம். ஆகவே, அதற்கு உதவும் வகையில் இவை செயல்படுகின்றன.
இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், சூரியனின் பெரும்பகுதியை மறைப்பதன் மூலம் அக்கல்ட்டர் என்ற செயற்கைக்கோள் ஒரு செயற்கையான கிரகணத்தை உருவாக்கும். இதன் விளைவாக, சூரியனின் மிகப் பிரகாசமான ஒளி தடுக்கப்படும்.
இதன்மூலம், சூரியனின் கொரோனா படலம், கொரோனாகிராஃப் கருவி பொருத்தப்பட்டு இருக்கும் மற்றொரு செயற்கைக் கோளுக்கு தெரியும் வகையிலான அமைப்பை இரண்டும் இணைந்து உருவாக்கிக் கொள்ளும். பிறகு குறைவாக அறியப்பட்ட சூரியனின் மேற்பரப்பில் உள்ள அம்சங்களைப் படம்பிடித்து கொரோனாகிராஃப் ஆய்வு மேற்கொள்ளும்.
எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு செயற்கைக்கோள் ஒளியை மறைத்து செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கும். அந்த வேளையில் மற்றொன்று சூரியனை கண்காணிக்கும். இந்த இரண்டுமே நீள்வட்டப் பாதையில் ஒன்றாக நிலைநிறுத்தப்படும்.
எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு செயற்கைக்கோள் தொலைநோக்கியாகச் செயல்படும், மற்றொன்று துல்லியமாக 150 மீட்டர் தொலைவில் அதற்கு உதவும் வகையில் நிலைநிறுத்தப்படும். இப்படி நிலைநிறுத்துவது, சூரியனின் கொரோனா படலத்தைக் கண்காணிப்பதை எளிதாக்கும்.
சூரியனை ஆய்வு செய்யும் கொரோனாகிராஃப் கருவி, சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் ப்ளாஸ்மா கதிர்களின் வெப்பத்தை, கொரோனா படலத்தில் இருக்கும் சூரியக் கதிர்களை ஆய்வு செய்யும்.
சூரிய மண்டலத்தின் விண்வெளிப் பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்களான, சூரியப் புயல், சூரியக் காற்று ஆகியவற்றின் தோற்றுவாயாக இந்த கொரோனா படலம் இருப்பதால், அதை ஆய்வு செய்யும் இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும், சூரியனால் வெளியேற்றப்படும் மின்காந்தக் கதிர்வீச்சு, சூரியத் துகள்கள் மூலம் விண்வெளியில் ஏற்படும் நிலைமைகளை அறியலாம். இந்த ஆய்வுத் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்படும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.