ரோஹித் vs ராகுல்: பிங்க் பால் டெஸ்டில் ஜெய்ஸ்வாலுடன் யார் முதலில் களமிறங்க வேண்டும்?
- எழுதியவர், நிதிஷ் குமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
ஆஸ்திரேலியா அணியுடனான அடிலெய்ட் டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாக நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு ஓப்பனராக ஜெய்ஸ்வாலுடன் யார் களமிறங்க வேண்டும் என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்த கேள்விக்கு விடை தேடும் முன், ஏன் இந்த கேள்வி எழுந்துள்ளது என்று ஆராய்வது, இதற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள உதவும்.
பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டி பெர்த் நகரின் ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 27 தொடங்கி நடைபெற்றது. இதில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 200-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, இந்த போட்டியில் அணியின் கேப்டனான பும்ரா, வீரர்கள் சிராஜ், கோலி, ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர்.
இதில் பந்து வீச்சில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், இந்திய அணியின் பேட்டர்கள், அதிலும் குறிப்பாக ஓப்பனர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ராகுலின் பங்கு மிகப்பெரியது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளின் பேட்டர்களும் முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்கள் கூட பேட்டிங் ஆட முடியாமல் திணறினர். இரு அணியின் பந்துவீச்சும் முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக இருந்தது.
ஆட்டம் இந்தியா வசமானது இரண்டாம் இன்னிங்ஸில் தான், அதிலும் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆடிய விதத்தில் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமானது.
இந்த போட்டிக்கு முன் இந்தியா ஆடிய நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ஆடாத ராகுல் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பேட்டிங் ஆட சவாலான ஆப்டஸ் மைதானத்தில் தான் ஆடியது மட்டும் இல்லாமல், ஜெய்ஸ்வாலிடம் ஆட்ட நுணுக்கங்களை கடத்தி அவரையும் சிறப்பாக ஆட வைத்தார். இதனை போட்டி முடிந்த பிறகு தனது சதத்தைப் பற்றி பேசும் போது ஜெய்ஸ்வால் கூறினார்.
“என்னை இந்த பாட்னர்ஷிப் முழுவதும் ராகுல் வழிநடத்தினார். நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக ஒன்றாக ஆடி வருகிறோம். ஒருவருக்கொருவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். ஆட்டக் களத்தில் எப்போதெல்லாம் நான் பதற்றமாக உணர்ந்தேனோ, அப்போதெல்லாம் ராகுல் நான் கவனத்தோடு இருக்க உதவினார்,” என்றார் ஜெய்ஸ்வால்.
62 ஓவர்கள் ஆடிய இந்த இணை, ரன் குவித்தது மட்டுமின்றி ஆஸ்திரேலிய வீரர்களின் மன உறுதியை உடைத்தது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ராகுல் ஓப்பனராக தொடர வேண்டுமா? ஏன் இந்த கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியுடன் ரோஹித்
முதல் டெஸ்ட் போட்டியின் போது தனிப்பட்ட காரணத்திற்காக விடுப்பில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இரண்டாம் போட்டியான அடிலெய்ட் போட்டிக்கு முன் அணியுடன் இணைந்தார்.
அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் பிங்க் பால் போட்டிக்கு முன் இந்த பந்தை எதிர்கொள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சிகள் மேற்கொண்டனர். கூடுதலாக வார்ம்-அப் போட்டியும் பிரைம் மினிஸ்டர் XI அணியுடன் இந்திய அணி ஆடியது.
இரண்டு நாட்கள் நடைபெற வேண்டிய இந்தப் போட்டி மழையின் காரணமாக, ஒரே நாளில் அணிக்கு தலா 50 ஓவர்கள் என்ற அடிப்படையில் நடைபெற்றது. இதில் ரோஹித் பங்கேற்று விளையாடினார். ஆனால், அவர் வழக்கமாக ஆடுவதை போல ஓப்பனராக ஆடவில்லை, மாறாக நான்காவது வீரராக களமிறங்கினார்.
ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை இங்கும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 44 பந்துகள் ஆடிய ராகுல் விக்கெட் இழக்காமல் ஓய்வு பெற்றார். ஆனால், நான்காவதாகக் களமிறங்கிய ரோஹித் 11 பந்துகளில் விக்கெட் இழந்தார்.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்
பெர்த் டெஸ்டில் இந்திய அணி ரோஹித் மற்றும் கில் போன்ற அணியில் தொடர்ந்து இடம்பெற்று வந்த வீரர்களை தேர்வு செய்ய முடியாத நிலையில் இருந்தது. ரோஹித் விடுப்பிலும், கில் காயத்திலும் இருந்தார். அதனால் அணியில் அவர்களுக்கு மாற்று வீரர்களாக ஜூரேல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆடினர்.
ஆனால், அடிலெய்ட் டெஸ்டில் இவர்கள் இருவரும் அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் அணிக்குத் திரும்பினால், படிக்கலுக்கு பதில் கில்லும், ஜூரேல் இடத்தில் ரோஹித்தும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
அவ்வாறு நடந்தால், அடிலெய்ட் டெஸ்டில் பேட்டர்களாக கேப்டன் ரோஹித், ஜெய்ஸ்வால், ராகுல், கில், கோலி, பந்த் ஆகியோர் இடம் பெற்றிருப்பர்.
ஆனால், இதில் ராகுல் எங்கு களமிறங்குவார் என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், ஓப்பனிங்கில் யார் ஆட வேண்டும் என்ற கேள்வியும் தொடர்கிறது.
ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடியுள்ளது யார்?
ரோஹித்தை எடுத்துக் கொண்டால், 2014-2015 ஆம் ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் தொடரில், ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்டில் விளையாடினார்.
ஆஸ்திரேலியாவில் மொத்தம் 7 போட்டிகளில் 408 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 31 மற்றும் அதிகபட்ச ரன்கள் 63. இந்த 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்துள்ளார்.
கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஓப்பனராக 2 டெஸ்ட்களில் ஆடிய ரோஹித் 32 ரன்கள் சராசரியுடன் 129 ரன்களைக் குவித்தார்.
ராகுலை பொருத்தவரை, 2014-2015 ஆம் ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் மூலம் சர்வதேச டெஸ்டில் கால்பதித்து, இரண்டு போட்டிகளில் ஆடி, ஒரு சதத்துடன் மொத்தமாக 130 ரன்களை 33 ரன்கள் சராசரியுடன் அடித்துள்ளார்.
2018-2019 ஆம் ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 3 போட்டிகளில் 5 இன்னிங்ஸ் ஆடிய ராகுல் 12 ரன்கள் சராசரியுடன் 57 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
அதன் பிறகு, கடைசியாக நடந்த பெர்த் டெஸ்டில் ராகுல் 26 மற்றும் 77 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் சராசரி 51.
ஆஸ்திரேலியாவில் 11 இன்னிங்ஸில் விளையாடிய ராகுல் 9 இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரராக ஆடி 286 ரன்களை 32 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார்.
ரோஹித்துக்கு சிறந்த இடம் எது?
ஐசிசி தரவுகளின் படி, 64 டெஸ்டில் 111 இன்னிங்ஸ் ஆடியுள்ள ரோஹித் 4,270 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 42.27 மற்றும் அதிகபட்ச ஸ்கோர் 212.
46 போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கியுள்ள ரோஹித் 2,685 ரன்களை 44 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார். அதே வேளையில், 16 போட்டிகளில் ஆறாவது இடத்தில் ஆடிய ரோஹித் சர்மா, 54.57 சராசரியுடன் 1,037 ரன்களை குவித்துள்ளார்.
மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் ரோஹித் 15 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 548 ரன்களை மட்டுமே குவித்திருந்தார்.
நடுவரிசையில் ராகுல் எப்படி செயல்படுகிறார்?
ஐசிசி தரவுகளின் படி, 54 டெஸ்டில் 93 இன்னிங்ஸில் ஆடியுள்ள ராகுல் 5,867 ரன்களை 34 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார். இதில் பெரும்பாலும் இவர் ஓப்பனராக ஆடியுள்ளார்.
ஆறாவது இடத்தில் 9 இன்னிங்ஸில் ராகுல் ஆடியுள்ளார். அதில், 29.25 ரன்கள் சராசரியுடன் 231 ரன்களையும், 5 இன்னிங்ஸில் மூன்றாவது இடத்தில் ஆடிய ராகுல் 88 ரன்களையும் குவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்டில் நான்காவது இடத்திலும் ராகுல் களமிறங்கினார். அந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 108 ரன்களை குவித்திருந்தார்.
சமீபத்திய ஃபார்ம்
கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசியாவிற்கு வெளியே நடந்த போட்டிகளில், அதிக பந்துகளைச் சந்தித்து விக்கெட் விட்ட இந்திய வீரர்கள் பட்டியலில் இவர்கள் இருவரும் முதலிடம் பிடித்துள்ளனர்.
ராகுல் 19 இன்னிங்ஸ் ஆடி அதில், 757 ரன்களை குவித்துள்ளார். 90.7 பந்துகளைத் தனது விக்கெட் கொடுக்கும் முன் சராசரியாக ராகுல் ஆடியுள்ளார்.
அதே வேளையில், ரோஹித் 23 இன்னிங்ஸ் ஆடி அதில், 919 ரன்களை குவித்துள்ளார். அவர் 89.1 பந்துகளைத் தனது விக்கெட் கொடுக்கும் முன் சராசரியாக ஆடியுள்ளார்.
இவர்கள் இருவரை தொடர்ந்து புஜாரா 87.5 பந்துகள், கோலி 84.4 பந்துகள் ஆடி விக்கெட் விட்டுள்ளதாக, க்ரிக்பஷின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்த் அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ரோஹித் 91 ரன்கள் மட்டுமே குவித்தார்.
ராகுல் பெர்த் டெஸ்டுக்கு முன் நியூசிலாந்த் உடன் ஆடிய டெஸ்ட் போட்டியில் 12 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார்.
வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்
தமிழ்நாடு அணியின் முன்னாள் வீரர் பாஸ்கி பாலசுப்ரமணியம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “அடிலெய்ட் டெஸ்டில் ரோஹித் தொடக்க ஆட்டக்காரராக ஆட வேண்டும். அவரால் புல் மற்றும் ஹூக் ஷாட்கள் (Pull and hook) நன்றாக ஆட முடியும். அவருக்குச் சிறந்த இடம் இதுவாகத்தான் இருக்கும் என்றார்.
கிரிக்கெட் விமர்சகரான ஆனந்த், “இந்த டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆட வேண்டும். அவர் இந்தியா இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது பல சிறப்பான இன்னிங்ஸை ஆடியுள்ளார்.
அதிலும் குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2018-ஆம் ஆண்டு தி ஓவல் மற்றும் 2021-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக, 2021-ஆம் ஆண்டு சென்சூரியன் மைதானத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இவர் அடித்த சதங்கள் இவரின் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தின,” என பிபிசி தமிழிடம் கூறினார்.
ஒன்-டவுனைப் பொருத்தவரை, கில் மற்றும் இதர இடங்களில் இப்போது உள்ளது போலவே, ஆட வேண்டுமென இருவரும் உடன்பட்டனர்.
ராகுல் பற்றி பாஸ்கி பாலசுப்ரமணியம் பேசும் போது, “ராகுல் தற்போதுள்ள இந்திய அணியில் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட வீரர். அவரால் ஓப்பனிங், ஒன் டவுன், மிடில் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் ஆட முடியும். அவர் ஆறாவதாகக் களமிறங்குவது அணிக்கு பலம் சேர்க்கும்” என்றார்.
ஆனால், ஆனந்தின் கருத்து இதனுடன் மாறுபட்டு இருந்தது. “ரோஹித் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் ஆறாவதாகக் களமிறங்கி ஆடியுள்ளார். அவரால் பந்து வீச்சாளர்களுடன் ஆடி அணிக்குத் தேவையான முக்கிய ரன்களை இறுதியில் குவிக்க முடியும்,” எனக் கூறினார்.
மேலும், கடந்த போட்டியில் நன்றாக ஆடி ஃபார்மில் உள்ள ராகுல் ஓப்பனராக ஆடுவதே சிறந்தது,” என அவரது கருத்தைப் பதிவு செய்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.