சுழிபுரத்தில் விபத்து – மாணவன் உயிரிழப்பு : காலதாமதமாக வந்த நோயாளர் காவு வண்டி

by guasw2

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில், யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அப்பகுதியை சேர்ந்த, சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி மாணவனான முருகசோதி ஸ்ரீபானுசன் (வயது 17)  எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.  அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணிந்த 15 வயதுடைய மற்றுமொரு மாணவனே படுகாயமடைந்துள்ளனர். 

சுழிபுரம் பகுதியில் இருந்து மூளாய் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , சுழிபுரம் சந்தியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

அந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் இருந்து எடுத்து சென்றுள்ளார். 

மாணவர்கள் இருவரும் இரத்த வெள்ளத்தில் வீதியில் கிடந்த நிலையில் , வீதியால் பயணித்தவர்கள் , நோயாளர் காவு வண்டிக்கும் , வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். 

அதேவேளை , தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்களும் வருகை தந்திருந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகவும் , நோயாளர் காவு வண்டி வராத சூழலில் , வீதியில் சென்ற வேறு வாகனங்களும் மாணவர்களை ஏற்ற பின்னடித்த நிலையில் , பட்டா ரக வாகனம் ஒன்றில் மாணவர்களை ஏற்றி , மூளாய் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற நிலையில் , ஒரு மாணவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். மற்றைய மாணவனை மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றினார். 

அதேவேளை , விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றிருந்த மாணவனின் தாய் ஒருவர் அவ்விடத்தில் மயங்கி சரிந்திருந்தார். மாணவர்களை பட்டா வாகனத்தில் ஏற்றி சென்ற பின்னர் அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டியில் , மயங்கி சரிந்த தாயை ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கேட்ட போதும் , தாம் அவ்வாறு ஏற்றி செல்ல முடியாது என கூறி , நோயாளர் வண்டியில் வந்தவர்கள் திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வட்டுக்கோட்டை பொலிஸார் , விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து அகற்றப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்