- எழுதியவர், உமாங் போதார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பான சர்ச்சைகள் உச்சத்தில் இருந்தபோது, ஒரு முழக்கம், தீவிரமாக எழுப்பப்பட்டது.
“இப்போது அயோத்தியாவில் பிரச்னை எழுந்துள்ளது, இன்னும் இதுபோல காசி-மதுராவிலும் எழும்”.
அதாவது, ராமர் கோவில் சர்ச்சை முடிந்த பிறகு, காசியின் ஞானவாபி மசூதி மற்றும் மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி குறித்த உரிமைகோரல்களும் எழும் என்ற நோக்கில் அந்த முழக்கம் எழுப்பப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி வழக்கில் 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தற்போது குறைந்தது 12 மதத் தலங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் தொடர்பாக, நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் இருக்கின்றன.
இந்த வழக்குகளில், தற்போதுள்ள மசூதிகள், தர்காக்கள், நினைவிடங்கள் ஆகியவை கோவில்களை இடித்து கட்டப்பட்டவை என்றும், அவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மறுபுறம், இந்த வழக்குகள், வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991க்கு எதிரானவை என்று முஸ்லிம்கள் தரப்பு கூறி வருகிறது.
காசி மற்றும் மதுரா குறித்த வழக்குகள் விவாதப்பொருளாகின. மேலும், சமீபத்தில் உத்தர பிரதேசத்தின் சம்பல் நகரில் உள்ள ஜாமா மசூதியும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. இந்த ஆய்வின் போது ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தபோது, முஸ்லிம்கள் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஹுஸெஃபா அஹ்மதி, இதுபோல நாட்டில் குறைந்தது 10 கோவில்-மசூதி சர்ச்சைகள் உள்ளன என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
கோவில்-மசூதி வழக்குகளை கையாளும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஃபுஸல் அகமது அயூபி இதை பிபிசி ஹிந்தியிடம் உறுதிப்படுத்தினார்.
ஜாமா மசூதி மற்றும் ஷேக் சலீம் சிஷ்டியின் தர்கா – ஃபதேபூர் சிக்ரி, உத்தர பிரதேசம்
ஆக்ராவிலிருந்து 40 கி.மீ தூரத்தில் ஃபதேபூர் சிக்ரி உள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜாமா மசூதியின் உள்ளே சூஃபி துறவி சலீம் சிஷ்டியின் தர்காவும் உள்ளது.
இந்தாண்டு, வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங் ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்தில் இதுகுறித்து ஒரு வழக்குப் பதிவு செய்தார். சலீம் சிஷ்டியின் தர்கா காமாக்யா தேவி கோவிலின் மீது கட்டப்பட்டது என்று அவர் கோரினார்.
இந்த தர்கா பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், அதற்கு முன்பு அங்கு ஒரு கோவில் இருந்தது என்றும் அவர் கோரினார்.
முன்னதாக, ஆக்ராவின் ஜாமா மசூதியின் கீழ் கத்ரா கேசவ் தேவின் சிலைகள் இருப்பதாக, அஜய் பிரதாப் சிங் ஆக்ரா நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்துக்களுக்கு இந்த மசூதி மற்றும் தர்கா இருக்கும் இடத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. உத்தர பிரதேச சுன்னி மத்திய வக்ஃப் வாரியம், தர்கா மற்றும் மசூதி நிர்வாகக்குழு ஆகியவை எதிர்தரப்பாக இருக்கின்றனர்.
அடாலா மசூதி- ஜாவுன்பூர், உத்தரபிரதேசம்
உத்தர பிரதேசத்தின் ஜாவுன்பூரிலும் இதே நிலைமைதான். இங்கே மனுதாரர்கள் அடாலா தேவி கோவிலை இடித்து, அடாலா மசூதி கட்டப்பட்டதாக கோருகின்றனர்.
அடாலா மசூதி 1408 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 2024 ஆம் ஆண்டில், இந்து அமைப்பான ஸ்வராஜ் வாஹினி, ஜாவுன்பூரில் ஃபிரோஸ் ஷா துக்ளக் ஒரு இந்து கோவிலை இடித்து இந்த மசூதியைக் கட்டினார் என்று மனு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனுவுக்கு உத்தர பிரதேச சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஜாவுன்பூரில் உள்ள ஒரு சிவில் நீதிமன்றம், மதுரா மற்றும் ஞானவாபியில் உள்ள கோவில்-மசூதி வழக்குகளைப் போலவே, அடாலா மசூதி வழக்கையும் விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது.
ஷம்சி ஜாமா மசூதி, பதாவுன், உத்தரபிரதேசம்
இந்த மசூதி பதின்மூன்றாம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான் சம்சுதீன் இல்துட்மிஷ் என்பவரால் கட்டப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், அகில பாரதிய இந்து மகாசபாவின் ஒருங்கிணைப்பாளர் முகேஷ் படேல், பதாவுன் மாவட்ட நீதிமன்றத்தில், இந்த மசூதிக்கு பதிலாக இங்கு நீலகண்ட மகாதேவின் கோவில் இருந்தது, அது அகற்றப்பட்டே இந்த மசூதி கட்டப்பட்டது என்று கோரினார்.
அங்கு வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரினார்.
மசூதியின் நிர்வாகக் குழு மற்றும் உத்தர பிரதேச சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் ஆகியவையும் இந்த வழக்கின் எதிர் தரப்பினர்களாக உள்ளன. அவர்கள் இந்த வழக்கை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இந்த வழக்கு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991க்கு எதிரானது என்று முஸ்லிமுஸ்லிம்களின் தரப்பு கூறுகிறது.
இந்த வழக்கின் விசாரணை டிசம்பரில் தொடங்க உள்ளது.
திலா வாலி மசூதி – லக்னோ, உத்தர பிரதேசம்
இந்த வழக்கு 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப் இந்து கோவிலை இடித்து இந்த மசூதியை கட்டியதாக, ஷேஷ்நாகேஷ் திலேஷ்வர் மகாதேவ் விராஜ்மான் என்பவரின் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டில், லக்னோ சிவில் நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கலாம் என்றும், இது வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக செல்லாது என்றும் தீர்ப்பளித்தார். இது தொடர்பான மேல்முறையீடு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கமல் மௌலா மசூதி- தார், மத்திய பிரதேசம்
ஹிந்து ஃப்ரண்ட் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக் காலத்தில் மசூதியின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது அங்கு போஜ்ஷாலா வாக்தேவியின் கோவில் இருந்ததாகவும், அது இடிக்கப்பட்டு இந்த மசூதி கட்டப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசூதி குறித்து இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று, 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்தாண்டு மார்ச் மாதம், உயர் நீதிமன்றம் இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கியது. அப்போது, ஆய்வுக்குப் பின், உச்ச நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மசூதியில் எவ்வித குறுக்கீடுகளும் நடக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் ஆய்வு இங்கு நடந்து முடிந்துள்ளது.
அஜ்மீர் ஷெரீப் தர்கா, ராஜஸ்தான்
இந்த ஆண்டு, இந்து சேனா அமைப்பின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் உள்ள சூஃபி துறவி க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்கா குறித்து அஜ்மீர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தர்காவுக்கு கீழே ஒரு சிவன் கோவில் இருப்பதாக அவர் கோருகிறார். விஷ்ணு குப்தா தனது மனுவில், இந்திய தொல்லியல் துறை இங்கு ஆய்வு நடத்த வேண்டும் என்றும் தர்காவுக்குப் பதிலாக மீண்டும் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த அஜ்மீர் மேற்கு சிவில் நீதிமன்றத்தின் நீதிபதி மன்மோகன் சாண்டலின் அமர்வு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், தர்கா நிர்வாகக்குழு மற்றும் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றுக்கு நவம்பர் 27 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 20ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.
பாபா புதன்கிரி தர்கா – சிக்மகளூர், கர்நாடகா
சிக்மங்களூரில் உள்ள பாபா புதன்கிரியில் சூஃபி துறவி தாதா ஹயாத்தின் (பாபா புதன்) தர்கா ஒன்று உள்ளது.
மேலும் இங்கு இந்துக்களின் தத்தாத்ரேயர் கோவிலும் உள்ளது. இந்த இடம் பொதுவாக தென்னகத்தின் அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது.
1970களில், இந்த இடம் கர்நாடக அரசாங்கத்தால் வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் சென்றது.
கடந்த 1980 ஆம் ஆண்டில், இது வக்ஃப் சொத்து அல்ல என்றும், இந்துக்களும் முஸ்லிம்களும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் நீதிமன்றம் கூறியது.
இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான சி.டி. ரவி, இந்த வழிபாட்டுத் தலத்திற்கு இந்துக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் கூறியிருந்தார்.
குதுப் மினார், டெல்லி
டெல்லியின் புகழ்பெற்ற குதுப்மினாரில் அமைந்துள்ள குவாத்-உல்-இஸ்லாம் மசூதி தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.
வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தாக்கல் செய்த மனுவில், பல இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு, உள்ளே மசூதி கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அங்கு மீண்டும் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி கோரினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில், ஒரு சிவில் நீதிமன்றம் கடந்த கால தவறுகள், தற்போதைய மற்றும் எதிர்காலத்தின் அமைதியை சீர்குலைக்க முடியாது என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது, அது இன்னும் நிலுவையில் உள்ளது.
ஜும்மா மசூதி, மங்களூரு, கர்நாடகா
மங்களுருவின் ஜும்மா மசூதியும் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் உள்ள ஒரு நீதிமன்றம், விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், வழிபாட்டுத் தல சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது என்று கூறியது.
மசூதியின் கீழ் ஒரு கோவில் இருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் கூறியது, அங்கு ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கோரியது. இந்த வழக்கு தற்போது மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதைத் தவிர, பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
ஞானவாபி மசூதி – வாரணாசி, உத்தரபிரதேசம்
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 1991 ஆம் ஆண்டு முதல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் 2021 ஆம் ஆண்டு ஒரு புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, வழக்கு விசாரணை வேகமாக முன்னேறி வருகிறது.
நிலுவையில் உள்ள கோவில்-மசூதி வழக்குகள் பலவற்றையும் விட, இந்த வழக்கு மிகவும் முன்னேறியுள்ளது.
இது குறித்து, 1991ல் விஷ்வேஸ்வரர் கோவில் பக்தர்களும் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் 2021 ஆம் ஆண்டில், ஐந்து பெண்கள் மற்றொரு மனுவை தாக்கல் செய்தனர், அதில் அவர்கள் மசூதியில் வழிபட அனுமதி கோரினர், மேலும் மசூதியில் சிருங்கர் கௌரிதேவி, விநாயகர் மற்றும் ஹனுமான் போன்ற பல தெய்வங்களின் சிலைகள் உள்ளன, அவை பாதுகாக்கப்பட வேண்டும் என கோரினர்.
கோவிலை இடித்து முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப் இந்த மசூதியை கட்டியதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். இந்த வழக்கில் இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதில், ஒரு ஆய்வை நீதிமன்றம் நடத்தியது, மற்றொரு ஆய்வை இந்திய தொல்லியல் துறை நடத்தியது.
வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு முதல் மசூதியின் அடித்தளத்தில் வழிபாடு தொடங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்த மனுக்கள் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிரானது அல்ல என்று கூறியது. இப்போதும் இந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
ஷாஹி ஈத்கா மசூதி – மதுரா, உத்தர பிரதேசம்
மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். 2020 ஆம் ஆண்டில், ஆறு பக்தர்கள் வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி மூலம் மசூதியை அகற்றக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டில், அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த மனுக்கள் கூட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991க்கு எதிரானவை அல்ல என்று கூறியது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், உயர் நீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்ய ஒரு நீதிமன்ற ஆணையரை நியமித்தது. ஆனால், ஜனவரி 2024 இல், உச்ச நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்தது, அது இன்னும் நடைமுறையில் உள்ளது.
அதன் அடுத்த விசாரணை இம்மாதம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
ஜாமா மசூதி- சம்பல், உத்தர பிரதேசம்
சமீப நாட்களாக இந்த வழக்கு மிகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் 2024 நவம்பரில் தாக்கல் செய்த மனுவில், கல்கியின் அவதாரமான ஸ்ரீ ஹரிஹர் கோவிலை இடித்து ஜாமா மசூதி கட்டப்பட்டது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, நீதிமன்றம் ஆணையர் ஒருவரை நியமித்து ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கை கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் மேல்முறையீட்டு வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நவம்பர் 29-ம் தேதி நடந்த விசாரணையில், ஆய்வுக்குப் பிறகு அறிக்கையை சீலிட்டு வைக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி இந்த வழக்கில் மேற்கொண்டு எதுவும் செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
அடுத்து என்ன?
இந்த வழக்குகளைத் தவிர, சர்ச்சைக்குரிய பல வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. பல கோவில்-மசூதி வழக்குகளில் சிக்கியுள்ள விஷ்ணு சங்கர் ஜெயின், கடந்த காலங்களில் இடிக்கப்பட்ட அனைத்து கோவில்களையும் புனரமைக்க வழக்குகள் தாக்கல் செய்வதே, தனது நோக்கம் என்று தனது முந்தைய பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் அமைந்துள்ள ஆதினா மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பீஜமண்டல் மசூதி தொடர்பாக சில நாட்களாக சர்ச்சை நிலவி வருகிறது. இது ஒரு மசூதி என்று இந்திய தொல்லியல் துறை கூறியபோது, ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டு அங்கிருந்த ஒரு வழக்கறிஞர், அது ஒரு கோவில் என கோரி தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அஜ்மீர் தர்கா வழக்கை தாக்கல் செய்த விஷ்ணு குப்தா, தனது அடுத்த மனு டெல்லி ஜாமா மசூதிக்கு எதிராக இருக்கும் என்று முன்னதாக பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்திருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.