வட கொரிய அச்சுறுத்தலா, அழுத்தமா? – ராணுவ ஆட்சியை அறிவிக்க தென் கொரிய அதிபர் தள்ளப்பட்டது ஏன்?
- எழுதியவர், பிரான்சிஸ் மாவோ மற்றும் ஜேக் குவான்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் முதல் முறையாக தென் கொரியாவில் ராணுவ ஆட்சியை அறிவித்த அதிபர், நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்
தொலைக்காட்சி உரையில், “அரசு எதிர்ப்புப் சக்திகள்” மற்றும் “வட கொரியாவின் அச்சுறுத்தல்” பற்றி குறிப்பிட்ட தென் கொரிய அதிபர் யூன் சாக் யோல் இந்த முடிவை அறிவித்தார்.
ஆனால் இந்த முடிவு, வெளிப்புற அச்சுறுத்தல்களால் தூண்டப்படவில்லை. மாறாக அவரது சொந்த அரசியல் பிரச்னைகளால் தூண்டப்பட்டது என்பது விரைவில் தெளிவாகியது.
இம்முடிவால் ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தில் திரண்டனர்.
அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ராணுவ சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை நீக்க ஏதுவாக“அவசர வாக்கெடுப்பை” நடத்த அங்கு விரைந்தனர்.
நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட, அவசர வாக்கெடுப்பில் யூன் தோற்கடிக்கப்பட்டார்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பை ஏற்றுக்கொண்டு ராணுவ ஆட்சியை நீக்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் யூன் சாக் -யோலை பதவி நீக்கம் செய்வது குறித்து வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
அவரது திட்டம் எப்படி வெளிப்பட்டது?
அரசாங்கத்தை சீர்குலைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை எதிர்கொள்ள இந்த ராணுவ நடவடிக்கை அவசியம் என்றும், நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் அரச விரோத சக்திகளை தடுப்பது ராணுவச் சட்டத்தின் நோக்கம் என்றும் தனது உரையில் தென் கொரிய அதிபர் யூன் சாக் -யோல் கூறினார்
தற்காலிக ராணுவ ஆட்சிக்கு அவர் ஒப்புதல் அளித்தார்
நாடாளுமன்றத்திற்கு ராணுவ வீரர்களையும் காவல்துறையினரையும் அனுப்பினார். ஹெலிகாப்டர்கள், கட்டடத்தின் மேற்கூரையில் தரையிறக்கப்பட்டது.
முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய வீரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததாகவும், அங்கு ஊழியர்கள் தீயணைப்புக் கருவிகள் மூலம் அவர்களைத் தடுக்க முயன்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர், உள்ளூர் நேரப்படி இரவு 11:00 மணியளவில் போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடை செய்வதற்கான உத்தரவை ராணுவம் வெளியிட்டது. ஊடகங்களை அரசு கட்டுப்பாட்டில் வைப்பதற்கான உத்தரவையும் ராணுவம் பிறப்பித்தது
“இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று தென் கொரிய அரசியல்வாதிகள் அதிபர் யூன் சாக்-யோலின் ராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர்.
அவரது சொந்தக் கட்சியான மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், இது ஒரு “தவறான நடவடிக்கை” என்று விவரித்தார்.
இதற்கிடையில், மிகப்பெரிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங், ஆணையை நிராகரிக்க தனது கட்சியின் உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் கூடுமாறு வலியுறுத்தினார்.
இந்த அறிவிப்புக்கு எதிரான போராட்டத்தில் தென் கொரிய மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங்கின் அழைப்புக்கு மக்கள் பதிலளித்தனர்.
அதிபர் யூன் சுக்-யோலின் ராணுவ சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான தென் கொரியர்கள் பலத்த பாதுகாப்புடன் கூடிய நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
“ராணுவ ஆட்சி வேண்டாம்” என்றும் “சர்வாதிகாரத்தை முறியடிக்கவும்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
“பலத்த ராணுவப் பிரகடனம் இருந்தபோதிலும், எதிர்ப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது.
புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில், 300 உறுப்பினர்களில் 190 பேர் கலந்து கொண்ட நாடாளுமன்றம், அதிபர் யூன் சுக்-யோலின் ராணுவச் சட்டப் பிரகடனத்தை நிராகரிக்க வாக்களித்தது.
ராணுவச் சட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
ராணுவச் சட்டம் தற்காலிகமானது. அவசர காலத்தில் ராணுவச்சட்டம் பயன்படுத்தப்படும்.
குறிப்பாக, மக்களால் தேர்தேடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால் நிலைமையை நிர்வகிக்க முடியாதபோது ராணுவ ஆட்சி அமைக்கப்படுகின்றது.
தென் கொரியாவில், அப்போதைய சர்வாதிகாரி பார்க் சுங்-ஹீ ஆட்சிக் கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடைசியாக 1979ல் ராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
தென் கொரியா 1987 இல் நாடாளுமன்ற ஜனநாயக நாடாக மாறியதிலிருந்து, ராணுவச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை.
ஆனால், “அரசுக்கு எதிரான சக்திகளிடமிருந்து” நாட்டைப் பாதுகாப்பது அவசியம் என்று கூறி செவ்வாயன்று அதிபர் யூன் சாக்-யோல் தென் கொரியாவில் ராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
யூன் முந்தைய ஆட்சியாளர்களை காட்டிலும் வட கொரியா மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, அரசியல் எதிர்தரப்பினரை ‘வட கொரியாவின் அனுதாபிகள் என்று அழைத்தார். இதற்கு எந்த ஆதாரங்களையும் யூன் வழங்கவில்லை
இச் சட்டத்தின் கீழ், ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இதன் மூலம் சிவில் உரிமைகள் இடைநிறுத்தப்படலாம்.
அதாவது குடிமக்கள் அவர்களது சட்டப் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை இழக்க நேரிடும்.
அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை ராணுவம் அறிவித்த போதிலும், எதிர்ப்பாளர்களும் அரசியல்வாதிகளும் இந்த உத்தரவுகளை மீறினர்.
யூனுக்கு ஏன் இந்த அரசியல் அழுத்தம்?
மே 2022 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் யூன் சாக் -யோல், ஏப்ரல் 2024 முதல் சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கினார் . பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி மகத்தான வெற்றியைப் பெற்ற பிறகு, அவரது அரசாங்கம் அதன் மசோதாக்களை நிறைவேற்றுவதற்குப் போராடியது.
அவர் இந்த ஆண்டு பல ஊழல் மோசடிகளில் சிக்கியிருப்பதால், அவரது ஆட்சி குறித்த மதிப்புகளில் வீழ்ச்சியைக் கண்டார்.
மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் ஆதரவு 17 சதவீதமாக குறைந்தது.
டியோர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விலையுயர்ந்த பையை ஏற்றுக்கொண்டதாக அதிபரின் மனைவி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. பங்குச்சந்தை மோசடி குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது
மேலும் கடந்த மாதம், அதிபர் யூன் சாக் யோல், தனது மனைவி சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்காக தேசிய தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனாலும் , எதிர்க்கட்சிகளின் கோரிக்கையான, ஊழல்கள் பற்றிய விரிவான விசாரணையை அவர் அனுமதிக்க மறுத்துவிட்டார்.
இந்த வாரம், தென் கொரியாவின் எதிர்க்கட்சியானது, அதிபர் யூன் சாக் -யோலின் நிர்வாகத்திற்கு மேலும் சவால் விடும் வகையில், அதிபரால் ரத்து செய்ய முடியாத ஒரு அரசாங்க பட்ஜெட் குறைப்பு மசோதாவை முன்மொழிந்தது.
அதே நேரத்தில், அதிபரின் மனைவியை விசாரிக்கத் தவறியதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் தணிக்கை அமைப்பின் தலைவர் உட்பட பல உயர்மட்ட வழக்கறிஞர்களை பதவி நீக்கம் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன.
தற்போதைய நிலவரம் என்ன ?
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, யூனை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
பதவி நீக்கம் செய்வது குறித்து நாடாளுமன்றம் சனிக்கிழமைக்குள் முடிவெடுத்து வாக்களிக்க வேண்டும்.
தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யும் செயல்முறை நேரடியானது.
அவர்களது தீர்மானம் வெற்றிபெற, 300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் ஆதரவு தேவைப்படும் . அதாவது குறைந்தது 200 வாக்குகள் தேவைப்படும் .
தென் கொரியாவின் நாடாளுமன்றம், அதிபர் பதவி நீக்கத்திற்கு ஒப்புதல் அளித்தால், அரசியலமைப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும். இது தென் கொரிய அரசாங்கத்தின் கிளைகளை மேற்பார்வையிடும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் அகும்.
நீதிமன்றத்தின் ஆறு உறுப்பினர்கள் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தால், அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
தென் கொரிய அதிபர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.
2016-ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி பார்க் கியூன்-ஹே, பணம் பறித்துவந்த ஒரு நண்பருக்கு உதவியதற்காக குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
2004 இல் மற்றொரு அதிபரான ரோ மூ-ஹியூன் பதவி நீக்கம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தியது.
இந்த வார நிகழ்வுகள் , கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவில் தென் கொரிய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக, பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஜனவரி 6 அன்று நடந்த கலவரத்தைவிட (டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்கியது) தென் கொரியாவில் நடக்கும் சம்பவங்கள், அதன் ஜனநாயக நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
யுனின் ராணுவச் சட்டப் பிரகடனம், சட்டப்பூர்வ மீறல் மற்றும் தவறான அரசியல் கணக்கீடு ஆகிய இரண்டு காரணங்களால் உருவானது.
“இம்முடிவால் தேவையில்லாமல் தென் கொரியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படும்” என்று சோலில் உள்ள ஈவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் லீஃப்-எரிக் ஈஸ்லி கூறினார்.
“பெருகிவரும் ஊழல்கள், அரசியல் எதிர்ப்பு மற்றும் பதவி நீக்க அச்சுறுத்தல்களால் முற்றுகையிடப்பட்ட அரசியல்வாதியைப் போல் யூன் உள்ளார். அவரது நடவடிக்கைகள், இப்போது தீவிரமடைய வாய்ப்புள்ளது” என ஈஸ்லி விவரித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.