யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கிராமசேவகர் உணவு நிவாரணம் வழங்கியபோது பொதுமக்களுடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 01ஆம் திகதி கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் புதன்கிழமை (04) பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
கடந்த 01ஆம் திகதி கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை (02) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று (04) வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (04) மீண்டும் இந்த வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்குக்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றுக்கு முன்வைத்த விவாதத்தின் அடிப்படையில் கைதான இருவருக்கும் பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த நவம்பர் 30ஆம் திகதி கற்கோவளம் பகுதியில் உணவு நிவாரணம் வழங்கச் சென்ற கிராம சேவகரிடம் பிள்ளைகளுக்காக உணவு கோரிய வேளை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த கிராமசேவகர் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையிலேயே இந்த இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.