மனிதர்கள் கடவுளாக மாறும் பண்டைய இந்திய சடங்கு – பின்னணி என்ன? எங்கு நடக்கிறது?
- எழுதியவர், சுதா ஜி திலக்
- பதவி, டெல்லி
ஏறக்குறைய 300 ஆண்டுகளாக, கேரளாவில் ஒரு குடும்பத்தின் மூதாதையர் வீடு, பழங்கால நாட்டுப்புறச் சடங்கான தெய்யத்திற்கான மேடையாக இருந்து வருகிறது.
பழங்கால பழங்குடி கலாசாரங்களில் இந்த தெய்யம் உள்ளது. இந்து புராணத்தோடு இது பின்னிபிணைந்துள்ளது என்றாலும், இந்து மதத்திற்கு முன்பே இருந்துள்ளது.
தெய்யம் நிகழ்ச்சியின் போது, கலைஞர் ஒரு தெய்வத்தின் அவதாரமாக மாறுகிறார்.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு அற்புதமான நாடக அனுபவத்தைத் தருகிறது. அதே சமயம் ஆன்மீக செயலாகவும் பார்க்கப்படுகிறது.
கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில், பெரும்பாலும் ஆண் கலைஞர்கள் தெய்யத்தின் போது தெய்வங்களை உருவகப்படுத்தும் தோற்றத்திற்கு மாறுகின்றனர்.
அவர்கள் நுட்பமாகச் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டு, தங்கள் முகங்களுக்கு வர்ணம் பூசிக்கொள்கிறார்கள். தன்னிலை மறந்த நிலையில் நடனம் ஆடுவது, வசனமற்ற நாடகப் பாங்கிலான செய்கைகளை செய்வது போன்றவற்றை நிகழ்த்துகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், கேரளாவில் உள்ள குடும்பத் தோட்டங்கள், கோவில்களுக்கு அருகில் சுமார் ஆயிரக்கணக்கான தெய்யம் நிகழ்ச்சிகள் நடக்கும்.
பாரம்பரியமாக இவை விளிம்புநிலை சாதிகள் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஆண்களால் நடத்தப்படுகின்றன.
நெருப்பில் நடப்பது, தீப்பிழம்புகள் வழியாக நடப்பது, உரத்த குரலில் கோஷமிடுவது, மற்றும் தீர்க்கதரிசனம் கூறுவது போன்ற சக்திவாய்ந்த நாடக அமைப்பிற்காக இது ‘சடங்கியல் நாடகம்’ என்று அழைக்கப்படுகிறது.
குளிர்காலங்களில் நடைபெறும் தெய்யம் நிகழ்வுகள்
வரலாற்றாசிரியர் கே.கே.கோபாலகிருஷ்ணன், “Theyyam: An Insider’s Vision”என்ற புதிய புத்தகத்தில், தெய்யத்தின் வளமான மரபுகளையும், அவரது குடும்பத்தின் தொடர்பையும் விவரித்துள்ளார்.
காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கோபாலகிருஷ்ணனின் பூர்வீகக் குடும்ப வீட்டின் முற்றத்தில் தெய்யம் ஆடப்படுகிறது. அந்த நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
கேரளாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை தெய்யம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பருவமழைக்குப் பிந்தைய மற்றும் குளிர்கால மாதங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.
இந்த நேரத்தில், கோவில்களுக்கு அருகிலும், குடும்பத் தோட்டங்களிலும், குறிப்பாக கண்ணூர் மற்றும் காசர்கோடு போன்ற வட மாவட்டங்களில் பல தெய்யம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மூதாதையருக்கு மரியாதை செலுத்துதல், போர்வீரன் மற்றும் வேட்டையாடும் தெய்வத்தை வணங்குதல், வலிமை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கும் புலி ஆவிகளை வணங்குதல் ஆகியவை கோபாலகிருஷ்ணனின் வீட்டில் நடக்கும் தெய்யம் நிகழ்ச்சிகளின் கருப்பொருட்களாகும்.
காட்டில் நடத்தப்படும் சடங்கு
உள்ளூர் தெய்வங்களுக்கு மரியாதை செலுத்தும் முன், சில பாரம்பரிய பூஜைகள் அருகிலுள்ள காட்டில் செய்யப்படுகின்றன. அது ‘தெய்வங்களின் வீடு’ என்ற நம்பிக்கையுடன் அவ்வாறு செய்யப்படுகிறது.
இந்த சடங்குகளுக்கு பிறகு மக்கள் வணங்கும் அந்த தெய்வம் மனித உருவில் ஆட்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது. சடங்கின் மூலம், காட்டில் இருந்து தெய்வத்தின் ஆன்மா வீட்டிற்கு கொண்டு வரப்படுவதாக அங்கிருக்கும் மக்கள் நம்புகின்றனர்.
கோபாலகிருஷ்ணன், நாயர் சாதியின் தாய்வழிக் கிளையான நம்பியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தச் சமூகத்தில், குடும்பச் சடங்குகள் மற்றும் தெய்யம் நிகழ்ச்சிகள் போன்ற விழாக்களை ஏற்பாடு செய்வது, மூத்த தாய் மாமாவின் பொறுப்பு.
வயது மூப்பு அல்லது ஏதேனும் உடல்நல பிரச்னைக் காரணமாக மூத்த மாமா இந்த கடமையைச் செய்ய முடியாவிட்டால், அந்த பொறுப்பு குடும்பத்தின் அடுத்த மூத்த ஆண் உறுப்பினருக்கு வழங்கப்படும்.
கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தில், பெண்கள் அதிலும் குறிப்பாக மூத்த பெண்கள், சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அவர்கள் மரபுகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்து, விழாக்களுக்குத் தயாராகி, வீட்டிற்குள் ஏற்பாடுகளை நிர்வகிக்கிறார்கள்.
சடங்குகளில் பெண்களின் முக்கிய பங்கு
“மூத்த பெண்கள் மிகவும் மதிப்புடையவர்களாக கருதப்படுகின்றனர் மற்றும் குடும்பத்தின் கலாசார, ஆன்மீக மரபுகளைப் பாதுகாப்பதில் முக்கியமானவர்கள்” என்று கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.
உரத்த சத்தமிட்டு அழுதல், அக்கினி தீப்பந்தங்கள், காப்பியக் கதைகள் அல்லது சக்திவாய்ந்த நடனங்களின் காட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தெய்யம் நடத்தப்படுகிறது.
சில நேரங்களில், தீக்காயங்கள், கை,கால் இழப்பு போன்ற தீவிர உடல் ரீதியான பிரச்னைகளை கலைஞர்கள் சந்திக்க நேர்கிறது.
“சில நிகழ்ச்சிகளில், தெய்யம் ஆடுபவர் நெருப்புடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி கொள்கிறார். தீப்பிழம்புகளின் வழியாக நடப்பார் அல்லது எரியும் தீப்பந்தங்களை கையில் ஏந்துகிறார்.
இது தெய்வத்தின் தன்மை மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியைக் குறிக்கிறது. தூய்மை, தெய்வீக ஆற்றல் மற்றும் சடங்கின் சக்தி ஆகியவற்றை குறிப்பதாகவும் இது உள்ளது” என்று கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.
தெய்வங்கள், மூதாதையரின் ஆவிகள், விலங்குகள் அல்லது இயற்கை சக்திகளைத் தெய்யத்தில் குறிக்கலாம்.
மேலே உள்ள படத்தில் காணப்படும் தெய்யம் கலைஞர், ரக்தேஸ்வரி அதாவது காளியின் உக்கிரமான வடிவமாக திகழ்கிறார்.
காளியின் வெளிப்பாடாக, ரத்தத்தில் நனைந்தவராக அவர் சித்தரிக்கப்படுகிறார். காளியினுடைய ஆற்றலையும் அழித்தல் சக்தியையும் குறிக்கின்றார்.
சடங்கு சூனியம், பில்லி சூனியம் மற்றும் தெய்வீக கோபத்தின் கருப்பொருள்களை தெய்யம் ஆராய்கிறது.
உடை மற்றும் சடங்கு நடனத்தின் மூலம், இந்த கலைஞர் காளியின் சக்தி, பாதுகாப்பு மற்றும் ஆன்மீகத்தை வெளிப்படுத்துகிறார்.
தெய்யம் நிகழ்ச்சியின் போது, கலைஞர்கள் முழுமையான மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்கள் தெய்வங்களை போல் அலங்காரம் செய்து கொள்கின்றனர். பலவிதமான உடைகள், உடல் வர்ணங்கள் மற்றும் பல்வேறு வண்ணங்களுடன், அவர்கள் உயிர்பெற்ற தெய்வங்களைப் போல காட்சியளிக்கின்றனர்.
வண்ணங்களால் ஆன அலங்காரம்
நடனத்தைத் தொடங்குவதற்கு முன், கலைஞர்கள் கண்ணாடியில் தங்களது தோற்றத்தை மீண்டும் கவனமாக சரிபார்ப்பார். பின்னர் ஆன்மிக வடிவமாக மாறுவதற்கு கவனமாக ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு ஆடையும் குறிப்பிட்ட தெய்வத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது சடங்கின் பன்முகத்தன்மை மற்றும் நுணுக்கங்களைப் பிரதிபலிக்கிறது.
பல கலைஞர்கள் தங்கள் தெய்வீக தோற்றத்தை உருவாக்க முகத்தில் வண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர். சில தெய்யம் நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் அதற்கு பதிலாக முகமூடிகளையும் பயன்படுத்துகின்றனர் .
மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் நிகழ்வு
இயற்கை மற்றும் அதன் அனைத்து உயிரினங்கள் மீதான மரியாதை தெய்யத்தின் ஆன்மிக வேர்களில் தெளிவாக தெரிகிறது.
ஒரு தெய்யம் நிகழ்ச்சியில், “ஊர்ந்து செல்லும் முதலையைக்” குறிக்கும் காட்சி ஊர்வனவற்றின் வலிமையையும் சக்தியையும் குறிக்கிறது. ஆபத்துக்களிலிருந்து காக்கும் பாதுகாவலராகவும் அது போற்றப்படுகிறது.
கலைஞரின் உடை மற்றும் உயிரோட்டமான அசைவுகள், மனிதர்களுக்கும் இயற்கை உலகிற்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிப்படுத்துகின்றன
இறுதியாக பக்தர்களுக்கு ஆசி
தெய்யம் நிகழ்ச்சி முடிந்ததும், ஏராளமான பக்தர்களுக்கு தெய்வம் அருள்பாலிக்கிறார்.
மேலே உள்ள புகைப்படத்தில் ஒரு பெண் பக்தர் தனது கஷ்டங்களை தெய்வத்தின் முன் முன்வைத்து, ஆறுதலையும் தெய்வீக உதவியையும் வேண்டுகிறார்.
அவர் வேண்டுதல் செய்யும்போது , அந்த புனிதமான இடம் ஆன்மீக மீட்சிக்கான இடமாக மாறுகிறது. அங்கு அவருடைய பக்தியும் மென் உணர்வும் ஒன்று சேரும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு