ஊத்தங்கரையொல் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணிநேரத்தில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி நகரை பொறுத்தவரையில் சுங்கச்சாவடி, சேலம் மேம்பாலம், திருவண்ணாமலை மேம்பாலம், பழைய பேருந்து நிலையம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கணபதிநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

கிருஷ்ணகிரி நகர் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் தனி குழுக்களாக பிரிந்து வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் தாசில்தார் தலைமையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், ஊத்தங்கரை, பாம்பாறு அணை நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் மொத்த நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பாம்பாறு அணை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நான்கு வீடுகள் மழை வெள்ளத்தில் சிக்கி சேதம் அடைந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஊத்தங்கரை பகுதியில் 24 மணிநேரமாக 50.3 சென்டிமீட்டர் கொட்டி தீர்த்த கனமழையால் காமராஜ் நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு, மீட்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

போச்சம்பள்ளி பகுதியில் கோனானூர் ஏரி நிரம்பி அதிகளவில் தண்ணீர் வெளியேறியதால், போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பு, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சமத்துவபுரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு, மீட்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊத்தங்கரை சுற்றுப்பகுதிகளில் மழை சூழ்ந்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு நேரில் சென்று மீட்புப்பணியை துரிதப்படுத்தி வருகிறார்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி – கல்லூரிகளுக்கு இன்று (டிச.02) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையில் ஆர்ப்பரிக்கும் கடல் அலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையில் ஆர்ப்பரிக்கும் கடல் அலை

எங்கு அதிக மழை?

நேற்று (டிச. 01) காலை 7 மணி நிலவரப்படி, ”கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிககனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன” என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழையும் புதுச்சேரியில் 46 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

”புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை அளவு தரவுகளை வைத்து பார்க்கும் போது இதுவே அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்னர் 2004-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தற்போது 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

ஃபெஞ்சல் புயல்

படக்குறிப்பு, புயல் கரையை கடந்தாலும், புதுச்சேரியை சூழ்ந்துள்ள மேகக்கூட்டங்கள்

புயல் மற்றும் மழை காரணமாக பொதுமக்கள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி இருந்தது.

”மாவட்ட நிர்வாகம் புயலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையை நடவடிக்கையை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம்கள் உள்ளன. இதற்காக சுமார் 4000 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, புதுச்சேரியிலுள்ள ரெயின்போ நகர் பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளம்

ஃபெஞ்சல் புயல்

படக்குறிப்பு, புதுச்சேரியில் புயலின் தாக்கத்தால் சாலையில் விழுந்துகிடக்கும் மரம்

இன்று என்ன நிலை?

இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட்-ஐ வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் டிசம்பர் 3-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

புதுவையில் கடும் பாதிப்பு

புதுவையில் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதியில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புதுச்சேரியில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த் கூறுகிறார்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க ராணுவம் வந்துள்ளதாக பிபிசி தமிழ் செய்தியாளர் கூறுகிறார்.

” மழையின் தாக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. உள்வட்ட சாலைகளில் முழுங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை தொடரும் என்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்” என்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த்.

புதுச்சேரி

படக்குறிப்பு, புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்

”இந்த நகர் உருவாகி 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுதான் வரலாறு காணாத மழை.இந்த அளவுக்கு மழையை நான் பார்த்ததில்லை. வீடுகளில் தரைத்தளம் மூழ்கியுள்ளது” என்கிறார் ரெயின்போ நகர் பகுதியில் வசிக்கும் நாராயணசாமி.

”வீடு முழுக்க தண்ணீர் சூழ்ந்துள்ளது. பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. வீட்டில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை” என்றார் ஜெனனி என்பவர்

மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ரமேஷ் குமார்,” நாங்கள் படகுகளை கொண்டு வந்துள்ளோம். 20-30 பேரை மீட்டுள்ளோம். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதே எங்களது முதன்மை பணி” என கூறுகிறார்.

புதுச்சேரி

படக்குறிப்பு, புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள்

சென்னையில் மீண்டும் விமான சேவை

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது.

226 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் சென்னையில் தரையிறக்கப்படவிருந்த 20 விமானங்கள் வேறு ஊர்களில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்றும் என்று தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புயல் கரையை கடந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் துவங்கியது.

புதுச்சேரியில் 4 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்

புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 48.45 செ.மீ மழை பெய்துள்ளது.

ரெய்ன்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கடா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 551 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் (கோவிந்த சாலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்) உயிரிழந்துள்ளனர், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாகூர் பகுதியில் 15 குடிசை வீடுகளும், வில்லியனூர் மற்றும் பாகூர் தொகுதிகளில் தலா ஒரு கல் வீடு சேதமடைந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.