சென்னை புறநகர் பகுதியில் ஆளவந்தார் நாயகருக்குச் சொந்தமாக 1000 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளன.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சென்னை புறநகர் பகுதியில் ஆளவந்தார் நாயகருக்குச் சொந்தமாக 1000 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளன.
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னையில் இருந்து

சென்னை புறநகரில் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1,054 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு எல்லைக் கல் நடப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய் (நவம்பர் 26) அன்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

யார் இந்த ஆளவந்தார்? சென்னை புறநகரில் அவரது சொத்துகள் என்ன? அவற்றைக் காப்பாற்றுவதற்கு நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் என்ன?

சென்னை புறநகரில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலை (பழைய மாமல்லபுரம் சாலை) ஆகியவற்றில் ஆளவந்தார் நாயகருக்குச் சொந்தமாக 1,000 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த 1885 மற்றும் 1890ஆம் ஆண்டில் விவசாயம் செய்வதற்காக ஆளவந்தாருக்கு இந்த நிலங்களைக் கவுல் பட்டா என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார், ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாக அதிகாரியும் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையருமான சக்திவேல்.

கவுல் நிலம் என்பது ஒரு வகையான ஒப்பந்தம். ஒப்பந்தத்தை தான் கவுல் என்று குறிப்பிடுவார்கள். உதாரணமாக, இப்போது உள்ள கிரைய ஒப்பந்தம், குத்தகை போன்று தான் இந்த கவுல் நிலம். இதை, குறிப்பிட்ட காலத்திற்கு நிலத்தின் சொந்தக்காரர்கள் குத்தகைக்கு விடுவார்கள்.

கவுல் பட்டா நிலங்களில் விவசாயம் செய்து லாபம் ஈட்டினால், அதை நிரந்தர பட்டாவாக ஆங்கிலேய அரசு மாற்றிக் கொடுத்துள்ளது. அந்தவகையில், ஆளவந்தார் நாயகரின் கட்டுப்பாட்டுக்குள் ஏராளமான நிலங்கள் வந்ததாகவும் அவர் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்டது போக, ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமாக 1,078 ஏக்கர் நிலங்கள் உள்ளன” என்கிறார்.

இதன் மதிப்பு குறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த பகுதிக்கு ஏற்ப ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்தனர்.

யார் இந்த ஆளவந்தார்?

பெரு நிலப்பரப்புச் சொந்தமாக இருந்தப் போதிலும் ஆளவந்தார் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

பட மூலாதாரம், Social Media

படக்குறிப்பு, “கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோவளம் கிராமம், ஆளவந்தாரின் பூர்வீகமாக இருந்துள்ளது”

“கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோவளம் கிராமம், ஆளவந்தாரின் பூர்வீகமாக இருந்துள்ளது. சவுக்கு தோப்பு, மாந்தோப்பு என பெரும் நிலப்பரப்பு அவருக்குச் சொந்தமாக இருந்துள்ளது” என்கிறார், சக்திவேல்.

இதுதொடர்பாக, 1960 ஆம் ஆண்டு ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை சார்பில் சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆளவந்தாருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் உப்பு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த ஆளவந்தார், படகில் விறகுகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்குக் கொண்டு சென்று விற்பதில் ஆர்வம் காட்டி வந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

“நெம்மேலி முதல் சாளுவான் குப்பம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் 11 கி.மீட்டர் பரப்பளவில் அவருக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்கள் இருந்துள்ளன” என்கிறார், அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாக அதிகாரி சக்திவேல்.

550 ஏக்கர் நிலங்களில் ஆக்கிரமிப்பா?

550 ஏக்கர் நிலங்களில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, 550 ஏக்கர் நிலங்களில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ளது

பல்லாயிரம் கோடி மதிப்பிலான இந்த நிலங்களில், ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாக கூறி, கடந்த 2022ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஜெகந்நாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அதில், ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை மற்றும் திருப்போரூர் கந்தசாமி கோவில் ஆகியவற்றுக்குச் சொந்தமான 550 ஏக்கர் நிலங்களில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாகக் கூறியிருந்தார்.

‘இந்த ஆக்கிரமிப்புகளை 2022 ஏப்ரல் மாதத்துக்குள் அகற்றுவதாக அரசு கூறியிருந்தது. ஆனால் 10 சதவிகிதம் கூட அகற்றப்படவில்லை’ எனக் கூறி, அண்மையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் செவ்வாய் அன்று (நவம்பர் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளவந்தார் அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி செல்வகுமார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

ஆளவந்தாரின் சொத்துகள் என்னென்ன?

ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1054 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு எல்லைக் கல் வைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1,054 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு எல்லைக் கல் வைக்கப்பட்டுள்ளது

அதில், ஆளவந்தார் நாயகருக்கு சொந்தமான சொத்து விவரங்களைப் பட்டியலிட்டிருந்தார்.

அதன்படி, “அறக்கட்டளைக்குச் சொந்தமான 1,054 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு எல்லைக் கல் வைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பைத் தவிர்க்கும் வகையில், நிலத்தைச் சுற்றி ரூ.10.44 கோடி செலவில் சுவர் கட்டப்பட்டுள்ளதாகக்” கூறியிருந்தார்.

ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமாக நெம்மேலியில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் தர்கா ஒன்று அமைந்துள்ளது. தர்கா குறித்து காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தர்கா நிர்வாகம், வக்ஃபு தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளதாக செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

அறக்கட்டளையின் நிலங்களில் இருந்த 184 ஆக்கிரமிப்பாளர்களில் 59 பேருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் 123 பேருக்கு எதிரான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு மாதங்களில் இந்தப் பணி முடிவடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தவிர, அறக்கட்டளைக்குச் சொந்தமான நெம்மேலி, பட்டிபுலம், சாளுவான் குப்பம் ஆகியவற்றில் உள்ள 9.33 ஏக்கர் நிலங்களை 162 மீனவ குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் சில மீனவ குடியிருப்புகளாக உள்ளன என்று கூறுகிறார் சக்திவேல்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் சில, மீனவ குடியிருப்புகளாக உள்ளன என்று கூறுகிறார் சக்திவேல்

“ஆளவந்தாருக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு இருந்ததால், அதை மீட்பது தன்னுடைய நோக்கமாக இருந்தது” என்கிறார், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஜெகந்நாத்.

திருப்போரூர் முருகன் கோவில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமாக 2,200 ஏக்கர் நிலங்கள் உள்ளன என்றும் இவற்றில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்ததாக பிபிசி தமிழிடம் பேசிய ஜெகந்நாத் தெரிவித்தார்.

“தற்போது ஆளவந்தார் அறக்கட்டளையின் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை படிப்படியாக மீட்டு வருவதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது” என்கிறார் ஜெகந்நாத்.

“ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1,078 ஏக்கரில் 19 ஏக்கர் மட்டுமே ஆக்கிரமிப்பில் இருந்தன. அதில், மூன்று ஏக்கரில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள நிலங்கள், பொதுப் பயன்பாட்டிலும் மீனவ குடியிருப்புகளாகவும் உள்ளன” என்கிறார், அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாக அதிகாரி சக்திவேல்.

தொடர்ந்து பேசிய அவர், “அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களில் சவுக்கு பயிரிடுதல், நெல் விவசாயம் ஆகியவை நடக்கிறது. அறக்கட்டளையின் 125 ஏக்கர் நிலத்தில் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுகிறது. இதற்கு 25 லட்ச ரூபாய்க்கும் மேல் வாடகையாக வருவாய் வருகிறது” என்கிறார்.

உயிலில் என்ன உள்ளது?

ஆளவந்தார் நாயக்கரின் சொத்துகள் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் வசம் உள்ளது என்று சக்திவேல் கூறுகிறார்.

பட மூலாதாரம், Social Media

படக்குறிப்பு, ஆளவந்தார் நாயக்கரின் சொத்துகள் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் வசம் உள்ளது என்று சக்திவேல் கூறுகிறார்

கடந்த 1914ஆம் ஆண்டு தனது 80வது வயதில் ஆளவந்தார் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக உயில் ஒன்று எழுதப்பட்டுள்ளது. திருப்போரூர் பத்திர அதிகாரி ஒருவரை அழைத்து இந்த உயிலை அவர் எழுதியுள்ளதாகக் கூறுகிறார் சக்திவேல்.

அந்த உயிலில், “தனக்குச் சொந்தமான ஐந்து கிராமங்களில் உள்ள நிலங்களில் இருந்து வரும் வருவாயில் திருப்பதி தேவஸ்தானம், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில் ஆகியவற்றில் உற்சவங்களும் தளிகையும் (அன்னதானம்) செய்ய வேண்டும்” என எழுதியுள்ளதாகக் கூறுகிறார், சக்திவேல்.

மேலும், நிலங்கள் அனைத்தும் தன் பெயரிலேயே இருக்க வேண்டும் எனவும் இவற்றை யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது எனவும் ஆளவந்தார் எழுதியுள்ளதாகவும் கூறுகிறார்.

“தனது சகோதரர் வீராசாமி நாயகர் என்பவரை அறக்கட்டளையின் ஸ்தாபகராக நியமித்துள்ளார். ஆனால், அவர் அறக்கட்டளையின் சொத்துகளை விற்பனை செய்யும் வேலைகளில் இறங்கியதாக, 1916ஆம் ஆண்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது” என்கிறார் சக்திவேல்.

இந்த வழக்கில், ‘தனி நபராக இருந்தால் தன்னிச்சையாக செயல்படுவார்கள் என்பதால், அறக்கட்டளையின் உறுப்பினர்களாக மூன்று பேர் நியமிக்கப்பட வேண்டும்’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ‘ஆளவந்தார் சமய அறக்கட்டளை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

“வீராசாமி நாயகருக்குப் பிறகு அவரது வாரிசுகள் அறக்கட்டளை உறுப்பினர்களாக இருந்துள்ளனர். 1959ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் இருந்து ஆளவந்தார் நாயக்கரின் சொத்துகள், அறநிலையத்துறையின் வசம் வந்துவிட்டது” என்கிறார் சக்திவேல்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு