மாவீரர் நாள் பதிவு – யாழில் கைதான இளைஞனிடம் 48 மணி நேர விசாரணை

by admin

 பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாவீரர் நாட்கள் தொடர்பான பதிவுகள், விடுதலைப்புலிகளின் தலைவர், புலிகளின் சீருடையில் உள்ள புகைப்படங்களை தனது முகநூலில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இணுவில் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் சுமார் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை யாழ் நகர் பகுதி மற்றும் பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த இருவரிடமும் , அவர்களது முகநூல் பதிவுகள் தொடர்பில் பங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக ஒழிப்பேன் என ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்திருந்த நிலையில் மாவீரர் நாட்கள் தொடர்பில் முகநூலில் பதிவிட்டவர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் , யாழ் இளைஞன் உள்ளிட்ட மூவரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்