எந்த ஆட்சியிலும் முதல் ஆண்டு தேனிலவு! அடுத்த வருட நினைவேந்தலின்போதே அநுர அரசின் நிஜமுகத்தை கா

by admin


தோற்றுப்போன சிங்கள அரசியல்வாதிகள் நினைவேந்தலை அரசியலாக்கி ஆதாயமாக்க முனைகின்றனர். நினைவேந்தலை தடையின்றி நிகழ்த்த அனுமதி வழங்கியமைக்காக அநுர குமார ஆட்சிக்கு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நன்றி கூறியுள்ளார். யார், எப்போது அனுமதிக்கு விண்ணப்பித்தது? எப்போது அனுமதி வழங்கப்பட்டது? இவ்வருடம் இடம்பெற்றதும் வழமையான தடையுடைக்கும் மக்களின் உணர்வுபூர்வ வணக்க நிகழ்வு. இதனைப் புரியாது நன்றி கூறும் அடிமைப் புத்தி ஏன்?

‘மீண்டும் அவர்கள் குரல் கேட்கிறது, மீண்டும் அவர்கள் தூசு தட்டி எழும்புகிறார்கள்”. 

கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடக நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடும்போது இப்படிச் சொன்னார். இவர் பறங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர். 

”அவர்கள்” என்று இவர் சுட்டியது, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் இனத்துவேசம் கக்கியும் இனவாத உரைகளை நிகழ்த்தியும் அரசியல் வியாபாரம் செய்தவர்களை. இதனால் பெரும் பிழைப்பும் நடத்தியவர்கள் இவர்கள். பல சட்டமீறல்களுக்காகவும், ஊழல்களுக்காகவும் நீதிமன்றம் ஏறி இறங்கியவர்களும்கூட. 

பெயர் சொல்லிக் குறிப்பிடுவதானால் முன்னாள் கடற்படைத் தளபதி சரத் வீரசேகர, முன்னாள் ஜே.வி.பி. பிரமுகர் விமல் வீரவன்ச, சிஹல உறுமய தலைவர் உதய கம்மன்பில, பொதுஜன பெரமுனவின் நிகழ்கால அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோரைச் சொல்லலாம். இவர்கள் அனைவரும் அண்மைக் காலம்வரை ராஜபக்ச சகோதரர்களால் இனவாத சூடேற்றி வளர்க்கப்பட்டவர்கள். 

கடந்த மாத பொதுத்தேர்தல் இவர்களை ஓரம் தள்ளிவிட்டது. கோதபாய ராஜபக்சவின் வியத்கம என்ற புத்திஜீவிகள் அணி ஊடாக சிங்கள பௌத்த அரசியலில் கோலோச்சியவர் சரத் வீரசேகர. சிங்கள மேடைகளில் பீரங்கிப் பேச்சாளர் என்று மகுடம் சூட்டப்பட்டவர் விமல் வீரவன்ச. இவரது ஷகோளய| என்று அழைக்கப்படுபவர் நடனமாடும் அரசியல்வாதியான உதய கம்மன்பில. 

அடுத்தவர், இந்த நால்வரிலும் வயதில் இளையவரானாலும், எழுபத்தைந்தாண்டு கால அரசியல் குடும்ப பாரம்பரியத்தில் வந்த இளையவரான நாமல் ராஜபக்ச. இவரின் தந்தை, பெரியப்பா, சித்தப்பாமார் மட்டுமன்றி பேரனார், அவரது சகோதரர் – அவரின் பிள்ளைகள் என்று பெருங்கூட்டம் அள்ளுகொள்ளையாக இலங்கை அரசியலில் தொடர்ச்சியாக இருந்து வந்தது. படுதோல்விகளைச் சந்தித்த இந்தப் பரம்பரைக்கு மீண்டும் பிராணவாயு கொடுத்து எழுப்ப முனைந்து கொண்டிருப்பவர் நாமல் ராஜபக்ச. 

அண்மைய நாட்களில் இவர்கள் எழுப்பும் கோசங்கள் பற்றி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் இங்கு முக்கிய கவனத்தைப் பெறுகிறது. ‘தோற்றுப்போன அரசியல்வாதிகள் மக்களின் நினைவேந்தல்களை அரசியலாக்குகின்றனர்” என்பது இவரது அறிக்கையின் மூலவாசகம். 

சரத் வீரசேகரவும், உதய கம்மன்பிலவும் தேர்தலில் போட்டியிட்டு மண் கவ்வியவர்கள். தமது தோல்வியை முற்கூட்டியே கணிப்பிட்டு தேர்தலிலிருந்து ஒதுங்கியவர் விமல் வீரவன்ச. கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வரலாற்றுப் பதிவு பெற்ற தோல்வியைச் சந்தித்த நாமல் ராஜபக்ச, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து தகப்பனாரின் பொதுஜன பெரமுனவின் தேசியப்  பட்டியல் ஊடாக நாடாளுமன்ற கதிரையைப் பிடித்தவர். 

பெரமுன சமர்ப்பித்த தேசியப் பட்டியலுக்கான 29 பெயர்களில் நாமலின் பெயரே முதலாவதாக இருந்தது. அப்பா – பிள்ளை கட்சியில் பிள்ளைக்கு முதலிடம் என்பது பரம்பரைச் சீதனம் போன்றது. 29 பேர் பட்டியலில் இருவர் பௌத்த பிக்குகள். ஒருவர் முஸ்லிம். பெயருக்குக்கூட தமிழர் ஒருவருமில்லை. ராஜபக்சக்களின் பெரமுன இன மத துவேசக் கட்சி என்பதை இதனூடாகப் புரிந்து கொள்ளலாம். 

மாவீரர் நினைவேந்தல் (இதனை மாவீரர் வணக்க நிகழ்வு என்று அழைப்பர்) 1989ல் இந்திய அட்டூழிய ராணுவம் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த காலத்தில் ஆரம்பமானது. இந்திய ராணுவத்துக்குத் துணையாக ஈ.பி.ஆர்.எல்.எவ் உட்பட பல ஆயுதக் குழுக்கள் சேர்ந்திருந்து காட்டிக் கொடுத்த வேளையிலும் நினைவேந்தலை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

இலங்கை அரசின் முப்படையினரும் மாவீரர் நிகழ்வுகளை முடக்க எடுத்த செயற்பாடுகள் பல வகையானவை. கைதுகள், நீதிமன்றங்கள் ஊடான தடைகள், சட்ட நடவடிக்கைகள், முழத்துக்கு முழம் படையினரை வீதிகளில் நிறுத்தியமை, துயிலும் இல்லங்களை நிர்மூலமாக்கியமை, வணக்க நிகழ்வுகளின்போது ஈகச் சுடர்களை இரும்புச் சப்பாத்துக் கால்களால் உதைத்து வீழ்த்தியமை என்று இப்பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். 

முக்கியமாக – 2009 முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்புக்குப் பின்னர், மாவீரர் நினைவேந்தல் காலங்களில் சிங்களப் படையினரின் தர்பார் மேலோங்கி இருக்கும். அவ்வேளைகளில் ஆட்சியில் இருந்த மகிந்த, கோதபாய போன்றவர்கள் இவ்வகை அட்டூழியங்களைத் தடுக்காது, தமிழர் மீது மேலும் பல தடைகளை ஏற்படுத்தி படையினருக்கு உற்சாகம் ஊட்டி வந்ததே வரலாறு. 

விடுதலைப் புலிகளை தாமே தோற்கடித்தது என்று மார்தட்டி, சிங்கள மக்கள் மத்தியில் தங்களை மாமன்னர்களாக பிம்பம் ஏற்படுத்திப் பெற்ற வெற்றியை அறகலய சரியாகப் பதம் பார்த்தது. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போன்று கிடைத்த வாய்ப்பை ரணில் பற்றிப் பிடித்து பயன்படுத்தி, தேர்தல் மூலம் கிடைக்காத – இனியும் கிடைக்கப் பெறாத பதவியை சுலபமாகப் பெற்றுக்கொண்டார். 

இன்று எல்லாமே முடிவுக்கு(?) வந்துவிட்டது போன்ற தோற்றம் காணப்படுகிறது. இதனை தோற்றம் என்றே சொல்ல வேண்டும். விடுதலைப் புலிகளின் பெயரால் பெற்ற வெற்றியே ராஜபக்சக்களின் அரசியல் அழிவுக்கும் காரணமானது. இப்போது கை நழுவிப் போயிருக்கும் அதிகாரத்தை மீளப்பெற, விடுதலைப் புலிகளின் ஆட்கள் நினைவேந்தல் ஊடாக மீளெழும்புகின்றனர் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளதை காணமுடிகிறது. 

ஆசிரியர் சங்கச் செயலாளர் குறிப்பிட்டது போன்று, நினைவேந்தல்கள் இந்த வருடம்தான் முதன்முறையாக இடம்பெறவில்லை. தங்கள் ஆட்சிக் காலத்தில் இடம்பெறவில்லை போன்றும் புதிய ஜனாதிபதியின் காலத்தில் இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது போன்றும் சிங்கள மக்கள் மத்தியில் அபிப்பிராயத்தை ஏற்படுத்த நாமலும் அவரது சகாக்களும் முனைவது நன்றாகத் தெரிகிறது. 

இவர்களின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் ராணுவ அட்டகாசங்களையும் மீறி நினைவேந்தல் இடம்பெற்றதை மறந்துவிட்டு, விடுதலைப் புலிகளின் மாவீரர்களை எவ்வாறு இன்றைய அரசு அனுமதித்தது என்று பொதுஜன பெரமுனவின் மனோஜ் கமகே கேள்வி எழுப்பியுள்ளார். 

விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் அவர்கள் முன்னோக்கப் பயணிக்க உதவ மாட்டாது என்று தமது பங்குக்கு குரல் கொடுத்துள்ளார் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி. கோதபாய ராஜபக்சவின் சட்டவாளராகப் பணியாற்றிவிட்டு, அதற்கான வெகுமதியாக அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவரே இந்த அலி சப்ரி. 

நாடு மெதுமெதுவாக பிரிவினைவாதத்துக்குச் சென்று ஈழம் உருவாகுமா என்ற சந்தேகம் ஏற்படுவதாக புதிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சுகீஸ்வர பண்டார ஊடகங்கள் வாயிலாக கேட்கின்றார். சிங்கள மக்களை உசுப்பிவிட்டு அரசியல் லாபம் பெற முனையும் இவர்கள், இதனூடாக அநுர அரசின் மீது சிங்கள மக்களை ஏவி விடலாமெனவும் கருதுவதுபோல் தெரிகிறது. 

இவ்வாறெல்லாம் தங்களுக்கு எதிராக காய்கள் நகர்த்தப்படுமென்பது அநுர குமார அணியினருக்கு தெரியாததல்ல. அதற்காக, இந்த அரசு மனம் விரும்பியே நினைவேந்தலை விட்டுப் பிடித்தது என்றும் கூற முடியாது. விரைவில் இடம்பெறவுள்ள உள்;ராட்சிச் சபை தேர்தல், மாகாணசபை தேர்தல் என்பவற்றில் தமிழர் தாயகத்தில் கணிசமாக வெற்றி பெறவும், சில சபைகளை கைப்பற்றவும் ஆட்சித் தரப்பு இப்போதிருந்தே இலக்கு வைத்து செயற்பட ஆரம்பித்துள்ளது. இதற்காக ஓர் இடைவெளியை பொதுவெளியில் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு உண்டு. அதன் வெளிப்பாடே நினைவேந்தலுக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தாது, வெளித்தோற்றத்தில் திறந்த மனதுடன் அரசு செயற்பட்டது போன்று காட்டியது என்றே கூற வேண்டும். 

வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்வை அவர் பிறந்த வீடிருந்த காணியில் அவரது பிறந்த நாள் படத்தை பிரசுரித்துக் கொண்டாட அரச இயந்திரம் அனுமதிக்கவில்லை. நினைவேந்தல் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள் போன்றவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. போர்க்காலத்தில் மரணித்த தமது பிள்ளைகளுக்கு நினைவேந்த இ;டமளித்த அநுர குமார அரசு, மறுதரப்பில் போரில் மரணித்த தங்கள் பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்த தடை விதித்தது ஏற்புடையதன்று. 

இதனைப் புரிந்து கொள்ளாத ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,  நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கியதற்காக அநுர குமார அரசுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்துள்ளார். யார், எப்போது நினைவேந்தலுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர்? எப்போது அரசு இதற்கு அனுமதி வழங்கியது? இப்படி எதுவுமே நடைபெறவில்லை. இருதரப்பும் ஏதோ ஒரு புரிந்துணர்வுடன் தங்கள் பணியை மேற்கொண்டனர். இதனைப் புரியாதவர், நினைவேந்தலில் பங்குபற்றாதவர் எதற்காக அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும்? ஏன் இந்த அடிமைப் புத்தி? 

விரைவில் நடைபெறவிருக்கும் இரண்டு தேர்தல்கள் முடிந்த பின்னர் வரப்போகும் அடுத்த வருட நினைவேந்தலின் போதுதான் புதிய ஆட்சியாளர்களின் ஆத்மசுத்தியான இனவாத மதவாதம் அற்ற கொள்கையை அறிய முடியும். 

அதுவரை எல்லாமே அப்படி, இப்படித்தான்!  

தொடர்புடைய செய்திகள்