வெள்ளத்தில் மூழ்கிய வாகனம் மட்டுமல்ல, வீடு, மொபைல், பிரிட்ஜுக்கும் காப்பீடு தொகை பெறலாமா? – முக்கிய தகவல்கள்
வெள்ளம், புயல் பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாகியுள்ளது. ஆண்டுதோறும் ஏதேனும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை தமிழ்நாட்டுக்கு, குறிப்பாக சென்னை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு இயற்கை பேரிடரின்போதும் வீடு, வாகனம் உள்ளிட்டவை பாதிக்கக்கூடும், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கலாம். அப்போது, அதற்கான காப்பீடுகள் குறித்த தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள விரும்புவர்.
ஃபெஞ்சல் புயலையொட்டியும் அதுகுறித்த கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இங்கே வீடு, வாகனம் உள்ளிட்டவற்றுக்கான காப்பீடு குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், அதிகம் அறியப்படாத, மின்சாதனங்கள், மொபைல், வீட்டு உபயோக பொருட்களுக்கான காப்பீடு குறித்த தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
வீட்டு காப்பீடு பெறுவது எப்படி?
வீட்டுக்கான காப்பீடு, எந்த கட்டுமான பொருட்களினாலும் கட்டப்பட்ட வீட்டுக்கும் வழங்கப்படும்.
வீட்டில் உள்ள பார்க்கிங் பகுதி, வராண்டா, வீட்டு உபயோகத்துக்கான அவுட் ஹவுஸ், சுற்றுச்சுவர், சோலார் பேனல், தண்ணீர் தொட்டிகள், சுற்றுச்சுவருக்குள் இருக்கும் பாதைகள் உள்ளிட்டவை இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும்.
வழங்கப்படும் காப்பீட்டுத் பணத்தின் 5% தொகை, கட்டுமான பொறியாளர் மற்றும் வடிவமைப்பாளருக்கான கட்டணமாக வழங்கப்படும். கட்டட இடிபாடுகளை அகற்றுவதற்கு, காப்பீட்டு பணத்தின் 2% தொகை வழங்கப்படும். வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால், தங்கள் வீட்டில் குடியிருந்தவர்கள் வெளியேறியதால் ஏற்பட்ட வாடகை இழப்பு, அல்லது இயற்கை பேரிடரால் உங்கள் சொந்த வீடு சேதமடைந்து நீங்கள் வாடகைக்கு வேறு வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தால் அதற்கான தொகையும் வழங்கப்படும்.
வீட்டை காப்பீடு செய்வது எப்படி?
இதை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. இது சொத்து காப்பீடு என்றும் அழைக்கப்படுகின்றது.
வீடு மட்டுமல்லாது, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கும் காப்பீடு பெற முடியும்.
வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களின் போது காப்பீட்டுத் தொகையை நாம் பெற முடியும்.
வெள்ளத்தில் வீடு மூழ்கினாலோ, சேதமடைந்தாலோ அல்லது நிலச்சரிவில் புதைந்தாலோ காப்பீட்டுத் தொகையை பெற முடியும் என்று நிவா பூபா (Niva Bupa) காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல விற்பனை அதிகாரி வெங்கடேஸ்வர ராவ் கூறுகிறார்.
இவர், சொத்துக் காப்பீடு மற்றும் மோட்டார் வாகன காப்பீடுகள் குறித்தும் பணியாற்றியுள்ளார்.
“வீடு மற்றும் வீட்டிலுள்ள பொருட்களுக்கும் காப்பீடு எடுக்க முடியும். ஆனால், அதற்கு வீட்டிலுள்ள பொருட்களின் விவரங்களை குறிப்பிட வேண்டும்” என்கிறார் வெங்கடேஸ்வர ராவ்.
வீடு மற்றும் அதிலுள்ள பொருட்களின் மதிப்புக்கேற்ப அதற்கான பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த காப்பீடுகளை யாரெல்லாம் எடுக்கலாம்?
யாரெல்லாம் வீட்டு காப்பீட்டை எடுக்கலாம்? அதற்கான தகுதிகள் என்ன?
வழக்கமாக, வங்கிக்கடன் மூலம் வீடு வாங்குபவர்கள் அல்லது வருமான வரி செலுத்துபவர்களே இத்தகைய காப்பீடு குறித்து அதிகம் அறிந்துவைத்திருப்பர்.
ஏனெனில், கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதுகுறித்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும். ஏதேனும் எதிர்பாராத சம்பவங்கள் அல்லது விபத்துகள் நேரும்போது, நிதி பாதுகாப்புக்காக இவை குறித்தத் தகவல் வழங்கப்படும்.
சொத்துக் காப்பீட்டை எடுக்க எவ்வித சிறப்புத் தகுதியும் தேவையில்லை என, வெங்கடேஸ்வர ராவ் கூறுகிறார்.
இந்த காப்பீடுகளில் பல விதங்கள் உள்ளன. வாடிக்கையாளர் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப காப்பீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஏதேனும் சேதங்கள் ஏற்படும்போது இத்தகைய காப்பீடுகள் நம் உடைமைகளுக்கு பாதுகாப்பு வழங்கும். நம் சொத்துக்களுக்கு எதிர்பாராத விபத்துகளால் சேதம் ஏற்படும்போது நாம் காப்பீட்டுத் தொகையை கோர முடியும்.
கடன் மூலம் வீடு வாங்கியிருந்தால் அந்த கடன் தொகைக்குக் காப்பீட்டை எடுக்க முடியும். அப்படி காப்பீடு எடுத்திருந்தால், கடனை முழுதும் செலுத்தி முடிப்பதற்கு முன் வாடிக்கையாளர் இறந்து போனால் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
அந்த கடன் தொகை, காப்பீட்டு நிறுவனத்தால் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது கடன் நிறுவனங்களுக்கு செலுத்தும்.
“கடன் தொகைக்கான பாதுகாப்புக்காக இந்த காப்பீட்டை எடுக்க வேண்டும். இதனால் வாடிக்கையாளர் இறந்தால் கடன் தொகையை குடும்ப உறுப்பினர்கள் செலுத்தத் தேவையில்லை. காப்பீட்டுத் தொகையில் மீதமுள்ள பணம், இறந்தவர் முன்மொழிந்த நபருக்குக் கிடைக்கும்,” என்றார் வெங்கடேஸ்வர ராவ்.
மின் சாதனங்களுக்கான காப்பீடு
மின்சாதனங்களுக்கான உத்தரவாதத்தைப் (warranty) பயன்படுத்த முடியாத சமயங்களில், அவற்றுக்கான காப்பீடு பயனுள்ளதாக அமையும்.
ஆனால், உங்களுடைய மொபைல் திருடப்பட்டாலோ அல்லது தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டாலோ, அப்போது அதற்கான உத்தரவதாதத்தை நீங்கள் கோர முடியாது.
அதேசமயம், திருட்டு, சூறையாடல், விபத்துகள் அல்லது இயற்கை பேரிடர்களின்போது மின் சாதனங்களுக்கான காப்பீட்டை கோர முடியும்.
அதற்கான காப்பீடு எடுத்திருந்தால் அந்த பொருளின் மதிப்புக்கு ஏற்ப காப்பீட்டை கோர முடியும்.
எந்த உபகரணங்களுக்கு காப்பீடு எடுக்கலாம்?
மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டேப்கள், ஐபேட்கள், ரேடியோ, தொலைக்காட்சி, கேமரா, கேமிங் உபகரணங்கள் ஆகியவற்றுக்கு காப்பீடு எடுக்கலாம்.
அதேபோன்று, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின் ஆகியவற்றுக்கும் எடுக்கலாம். குறிப்பிட்ட நிறுவனங்களின் (branded) ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் எடுக்கலாம்.
எப்போது எடுக்க வேண்டும்?
விலையுயர்ந்த பொருட்களுக்கு வாங்கிய உடனேயே அவற்றுக்குக் காப்பீடு எடுப்பது நல்லது என்றும் அந்த பொருளின் மதிப்புக்கு ஏற்ப காப்பீடு எடுப்பது சிறந்தது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில நாட்கள் உபயோகித்த பின்பும், அதன் தேய்மானத்தை மதிப்பிட்டு அதற்கேற்பவும் காப்பீடு எடுக்கலாம்.
ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக காப்பீடு எடுப்பதைவிட, வீட்டிலுள்ள அனைத்து மதிப்புமிக்க பொருட்களுக்கும் ஒன்றாக காப்பீடு எடுப்பது சிறந்தது என, ஒயிட் மவுண்ட் ஃபின்சர்வ் (White Mount Finserv) நிறுவனத்தைச் சேர்ந்த எம்விவிஎன் பட்ருடு பரிந்துரைக்கிறார்.
லேப்டாப் அல்லது மொபைலுக்கு மட்டுமல்லாமல் அனைத்துப் பொருட்களுக்கும் காப்பீடு எடுக்கலாம் என கூறும் அவர், ஆனால் அவை மதிப்புமிக்க நிறுவனத்தைச் சேர்ந்த (branded) பொருளாக இருக்க வேண்டும் என்றார்.
உள்ளூர் மார்க்கெட்டுகள் மற்றும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வாங்கப்பட்ட பொருட்களுக்கு அதற்கான கட்டண ரசீது இல்லாமல் காப்பீடு எடுக்க இயலாது.
எங்கு எடுக்கலாம்
காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள், முகமைகள், அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இதற்கான காப்பீடு எடுக்கலாம்.
வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் முதலில் பட்டியலிட வேண்டும். அந்த பொருட்கள் மதிப்புமிக்க நிறுவனங்களில் இருந்து வாங்கப்பட்டிருக்க வேண்டும். அதன் கட்டண ரசீதை வைத்திருக்க வேண்டும்.
சில காப்பீட்டு நிறுவனங்கள் மின்சாதனங்களை விற்கும் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருக்கும். அதன்மூலம், பொருட்களை வாங்கும்போதே வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய காப்பீட்டு சேவைகளை வழங்கும்.
சில நாட்கள் உபயோகத்திற்கு பிறகும் குறிப்பிட்ட பொருள் நல்ல நிலையில் இருந்தால் அவற்றுக்குக் காப்பீடு எடுக்கலாம். ஆனால், அதற்கான தேய்மானம் மதிப்பிடப்பட்டு அந்த நாளுக்கான மதிப்பீட்டில் தான் காப்பீடு எடுக்க முடியும்.
அனைத்துத் தகவல்களையும் அறிந்த பின்பே காப்பீடு எடுக்க வேண்டும் என பட்ருடு பரிந்துரைக்கிறார்.
காப்பீட்டுத் தொகையை கோருவதற்கான தகுதிகள் என்ன?
தீ விபத்து, வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, மின்விபத்து, கலவரங்கள், சூறையாடல் போன்ற நிகழ்வுகளில் அப்பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் காப்பீட்டை கோர முடியும்.
தொடர்ந்து பயன்படுத்துவதால் அடையும் சேதங்களுக்கோ, இயல்பாக ஏற்படும் சேதங்களுக்கோ, தவறுதலாக தண்ணீரில் போடும்போதோ காப்பீடு கோர முடியாது என்கிறார் பட்ருடு. காப்பீடு இருக்கிறது என்பதற்காக அப்பொருட்களை கவனமின்றி கையாளக் கூடாது என்கிறார் அவர்.
எல்லா காப்பீட்டு நிறுவனங்களிலும் ஒரே நிபந்தனைகள் இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எப்படி காப்பீடு தொகையை கோருவது?
சேதம் அடைந்தவுடனேயே அதுகுறித்து காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். பின்னர், அதுகுறித்து நிறுவனம் கேட்கும் தகவல்கள் மற்றும் விவரங்களை வழங்க வேண்டும்.
அந்த பொருள் தொலைந்துவிட்டால், தேய்மானத்தைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.
மீண்டும் சரிசெய்யும் நிலையில் இருந்தால், அதை சரிசெய்வதற்கான தொகை வழங்கப்படும்.
மோர்டெர் இண்டலிஜென்ஸ் (Morder Intelligence) எனும் நிறுவனம் (2024-29) வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 16% மொபைல் போன் பயனாளர்கள் மட்டுமே காப்பீடு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன காப்பீடு
கார்களுக்கு காப்பீட்டுத் தொகையை எப்படிப் பெறுவது என்று பிபிசி தமிழிடம் முன்பு விளக்கியிருந்தார், ஹுண்டாய் இன்சூரன்ஸ் பிரிவின் அதிகாரி மணிவேல்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “புதிய வாகனம், தேய்மானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட IDV (Insured Declared Value) என்று உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டு மதிப்பைப் பொறுத்து ஒவ்வொரு காருக்கும் பழுது நீக்கமும், பாகங்கள் மாற்றமும் வேறுபடலாம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்தால் அதில் நீர் புகுந்துவிடும். உங்களது இன்சூரன்ஸ் பாலிசியில் இஞ்சின் புரொடக்சன் வாய்ப்பைக் கூடுதலாக சேர்த்திருந்தால் மட்டும்தான், அதற்கான காப்பீட்டில் தொகை கோர முடியும். இல்லாவிட்டால் முடியாது,” என அவர் தெரிவித்தார்.
மேலும், “கார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதை நீங்கள் அறிந்துவுடன் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது காப்பீடு எடுத்த அலுவலகத்துக்கு அழைக்க வேண்டும்” என்றார்.
இதற்காக ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அவர்களது அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுத்திருப்பார்கள். “மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்ற காலங்களில், அதிகப்படியான காப்பீடு கோரல்கள் அவர்களுக்கு வரும் என்பதால் இணைப்பில் காத்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயிர் காப்பீடு
புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பில் இருந்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் (பி.எம். பசல் பீம யோஜனா) செயல்படுத்தப்படுகிறது.
நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பச்சை பயிறு, துவரை, நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வாழை உள்ளிட்ட வருடாந்திர தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் மற்றும் உணவு தானிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.
குறைந்தபட்ச உத்திரவாத மகசூலின் மதிப்புக்கு சமமான தொகைக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் கூடுதலாக காப்பீட்டுத் தொகை (Actuarial Premium) செலுத்தி சராசரி மகசூலின் 150% மதிப்பு வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
(குறிப்பு: இந்த தகவல்கள் புரிதலுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பாக அதற்கான நிபுணர்களை அணுகலாம்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு