ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 ஆண்டு கால திருமண பந்தத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பாக தம்பதியர் சார்பில் வழக்கறிஞர் மூலம் நவம்பர் 19 (செவ்வாய்க்கிழமை) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி சார்பில் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், உணர்வு ரீதியான காரணங்களால் இருவரும் பிரிய முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
“மணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு சாய்ராவும் அவரது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானும் பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்திருக்கிறார்கள். திருமண பந்தத்தில் ஏற்பட்ட உணர்வு ரீதியான சில அழுத்தங்களால் பிரியும் முடிவுக்கு இருவரும் வந்தார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தாலும், இருவரின் பந்தத்தில் ஒருவித அழுத்தம் இருந்தது. இருவருக்கும் நடுவே இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இருவராலும் அந்த இடைவெளியை குறைக்க முடியவில்லை” என்று வந்தனா ஷா குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானும் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி” என்று
அவர் பதிவிட்டுள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி முகமை தகவலின்படி, விவாகரத்து முடிவை சாய்ரா பானு முதலில் வெளியிட, பின்னர் இருவரும் தரப்பிலும் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மிகுந்த வலியுடன் திருமண பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்ததாக சாய்ராவும் ஏஆர் ரஹ்மானும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். வாழ்க்கையின் இந்த கடினமான கட்டத்தில் இருந்து வெளியே வர, மக்கள் தங்களது தனியுரிமை மதித்து நடந்து கொள்ளுமாறு இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சாய்ரா பானு – ஏ.ஆர்.ரஹ்மான் திருமணம் 1995-ஆம் ஆண்டு நடந்தது. அவர்களுக்கு கதீஜா, ரஹிமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
ஏ.ஆர். அமீன், தனது இன்ஸ்டா வலைதள பக்கத்தில் “இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வாழ்க்கை
தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர் என்பவரின் மகன் தான் ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான். சிறுவயது முதலே இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார். பள்ளிக்கல்வியைக்கூட முடிக்காதவர், தன்னுடைய இசைப் புலமையால் பின்னாளில் லண்டன் இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசை கற்றிருக்கிறார்.
விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டுக் கொண்டிருந்தவர், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அவருடைய கூடுதல் பலம்.
1992 முதல் 2000ஆம் ஆண்டு வரை அவர் இசையமைத்த படங்கள் அனைத்துமே அவருக்கு ஃப்லிம் ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது 32 ஆண்டு இசை வாழ்க்கையில் ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட உலகின் உயரிய பல விருதுகளை வென்றுள்ளார்.
திலீப்குமார் என்ற இயற்பெயர் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தனது 23-வது வயதில் 1989-ஆம் அண்டு இஸ்லாமைத் தழுவினார். தன்னைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது எளிய வாழ்க்கை மற்றும் மனித நேயம் என்று அவர் கூறினார்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த ஒரு நேர்காணலில், “இஸ்லாம் என்பது ஒரு பெருங்கடல். அதில் 70-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அன்பை போதிக்கும் சூஃபி தத்துவத்தை நான் பின்பற்றுகிறேன்.” என்று தெரிவித்தார்.
57 வயதான ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர், 2 கிராமி மற்றும் ஒரு கோல் குளோப் விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் உள்பட தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.
2009ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்கிற பெருமையை பெற்றார்.
விழா மேடையில் ஏ ஆர்.ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கே என அவர் தமிழில் பேசினார். “நான் கீழே அமர்ந்திருந்தபோது பெனோலோபி கிருஸ் ஸ்பானிஷ் மொழியில் பேசினார். ஓ.. இது நன்றாக உள்ளதே. நாமும் தமிழிலேயே பேசிவிடலாம் என நினைத்தேன். மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறினேன். நான் சொன்ன இந்த வார்த்தைகள் புனித நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.” என்று பின்னர் ஒரு தருணத்தில் அவர் கூறினார்.
உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய கலைஞர்களுடன் இணைந்து ரஹ்மான் பணிபுரிந்துள்ளார். மக்களை ஒருங்கிணைக்கு இசை ஒரு கருவியாக இருக்கும் என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து.
தேசிய கீதம் முதல் தமிழ் செம்மொழி மாநாடு பாடல் வரையில் இவருடைய இசை பரவியிருந்திருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.