செளதி அரேபியா: ஃபேஷன் ஷோவில் சீற்றம் அடைந்த இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் அடிப்படைவாதிகள் – பின்னணி என்ன?
- எழுதியவர், பிபிசி மானிடரிங்
- பதவி, ,
சௌதி அரேபியாவில் சமீபத்தில் நடந்த ஃபேஷன் ஷோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஷன் நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட மேடையின் வடிவமைப்பு, புனித கபாவின் தோற்றத்தை ஒத்திருந்ததே இந்த சர்ச்சைக்கு காரணம்.
சௌதி அரேபியாவில் நடைபெற்ற ‘ரியாத் சீசன்’ என்னும் வருடாந்திர கலாசார விழாவில், மேடை அலங்கரிப்பின் ஒரு பகுதியாக கபாவை ஒத்திருக்கும் கண்ணாடி அமைப்பு ஒன்று வைக்கப்பட்டது.
மெக்காவில் இருக்கும் கபா இஸ்லாமியர்களால் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.
எனவே இந்த ஃபேஷன் நிகழ்வு மதகுருக்கள் மற்றும் அடிப்படைவாதிகள் மத்தியில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செளதியில் இயங்கும் முக்கிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது இஸ்லாமியர்களின் புனித தலத்தை அவமதிக்கும் செயல் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், செளதி அரேபியாவின் அரசு ஊடகம் இந்த விமர்சனங்களை மறுத்துள்ளது.
வதந்திகளை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுயாதீன செளதி அரேபிய அமைப்பு ஒன்று, ஃபேஷன் நிகழ்வின் போது மேடையில் காணப்பட்டது கனசதுர வடிவிலான கண்ணாடி அமைப்பு என தெரிவித்துள்ளது.
மேலும் ஃபேஷன் நிகழ்வில் புனித கபாவின் பிம்பத்தை பிரதிபலிக்கும் அமைப்பு வைக்கப்படவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது
இருந்தபோதிலும் பல மதகுருக்கள் இது இஸ்லாமிய மதத்திற்கு ஏற்படுத்தப்பட்ட இழுக்கு என்று கூறி வருகின்றனர்.
”ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிக்கு இப்படி புனித தலத்தின் பிம்பத்தை பயன்படுத்தியது சாத்தானின் செயல்” என்று சிலர் கடுமையான வார்த்தைகளால் இந்த நிகழ்வை விமர்சித்துள்ளனர்.
நாட்டை இழிவுபடுத்தும் முயற்சியாக அவதூறுகள் பரப்பப்படுவதாக அரசு ஊடகம் கூறுகிறது.
டெலிகிராம் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் இந்த ஃபேஷன் நிகழ்வின் புகைப்படங்களும் காணொளிகளும் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
கனடாவைச் சேர்ந்த இஸ்லாமிய எழுத்தாளர் தாரிக் அப்துல் ஹலிம், ஹிதாயத் அல்சாரி என்ற பெயரில் டெலிகிராமில் இயங்கி வருகிறார்.
அவர், “அரேபிய தீபகற்பத்தில் பல கடவுள் கொள்கை மீண்டும் அதிகாரப்பூர்வ மதமாக மாறியுள்ளது”என்று பதிவிட்டுள்ளார்.
செளதி அரேபியாவின் ஆளும் குடும்பத்தின் மீது விமர்சனம்
மொராக்கோவின் இஸ்லாமிய மதகுருவான அல் ஹசன் பின் அலி அல்-கிட்டானி இந்த நிகழ்ச்சி, ஊழல் மற்றும் தேசத்தின் மதிப்புகள் சிதைவதன் அடையாளம் என்று கூறியுள்ளார்.
அறிஞர்கள் பலர் இந்த விஷயத்தில் அமைதி காப்பதாகவும், வெறும் சிலர் மட்டுமே உண்மையின் பக்கம் குரல் கொடுக்கின்றனர் என்றும் கிட்டானி குறிப்பிட்டுள்ளார்.
சிலர் செளதி அரேபியாவின் ஆளும் குடும்பத்தை விமர்சிக்க இந்த ஃபேஷன் ஷோவைப் பயன்படுத்தி கொண்டனர். செளதி அரசக் குடும்பம் சில கடும்போக்குவாதிகள் மற்றும் பல அடிப்படைவாதிகளின் நீண்டகால எதிரியாகப் பார்க்கப்படுகிறது.
ஃபேஷன் நிகழ்ச்சி மேடையில் கபாவை போன்ற வடிவமைப்பைச் சுற்றி பெண் மாடல்கள் நடந்தது சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில்தான் என்று சிரியாவைச் சேர்ந்த சிந்தனையாளர் அப்துல் ரஹ்மான் அல்-இட்ரிஸி கூறுகிறார்.
ரியாத் சீசன் என்றால் என்ன?
சௌதி அரேபியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிதான் இந்த ரியாத் சீசன்.
இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு லெபனான் ஆடை வடிவமைப்பாளர் எலி சாப், ஃபேஷன் ஷோ ஒன்றை நடத்தினார்.
அரபு சமூக ஊடக பயனர்கள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு மேடை வடிவமைப்புக்காக மட்டும் விமர்சிக்கப்படவில்லை. காஸா மற்றும் லெபனான் போருக்கு மத்தியில் இப்படி ஃபேஷன் நிகழ்வு நடத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டி பலர் விமர்சித்து வருகின்றனர்.
ஃபேஷன் நிகழ்வின் வடிவமைப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பிராந்தியத்தில் நடந்து வரும் போரை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்படுகிறார்கள் என லண்டனில் இருந்து வெளியாகும் ராய் அல்-யூம் என்ற அரபு ஊடகத்தின் செய்தி கூறுகிறது
காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு மத்தியில், செளதி அரேபியா நடனக் கலைஞர்களையும் பாடகர்களையும் அழைத்ததாக எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் எழுதியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.