பொலிஸ் சேவையை அரசியல் மயப்படுத்தமாட்டோம் அதன் சுதந்திரத்தை உறுதி செய்வோம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ! on Tuesday, November 19, 2024
முன்னைய அரசாங்கங்களின் கீழ் பொலிஸ் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இலங்கை பொலிஸின் சுதந்திரத்தை மீண்டும் ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழலை ஒழிப்பதே தனது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸாரை அரசியல் செல்வாக்கிலிருந்து மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கையின் பொலிஸார் பக்கச்சார்பற்றவர்களாக நியாயமானவர்களாக பொதுமக்களிற்கு பொறுப்புகூறுபவர்களாக விளங்குவதை உறுதி செய்வது குறித்த தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.
சட்டமொழுங்கு உண்மையில் மக்களிற்கு சேவையாற்றவேண்டும் என்றால் பொலிஸார் தங்களின் சேவையை பக்கச்சார்பற்ற விதத்தில் அரசியல் தலையீடு இன்றி முன்னெடுக்கவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸாரின் சுதந்திரத்தை பாதுகாப்பது குறித்து உறுதியாக உள்ளோம் பொலிஸார் பொதுமக்களிற்கு பக்கச்சார்பற்ற விதத்தில் சேவையாற்றக்கூடிய சூழலை உருவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.