by wp_shnn

மத்திய – மாநில அரசுகளின் பங்களிப்பு திட்​டங்​களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்​துரை செய்ய வேண்​டும். மத்திய வருவா​யில் மாநிலங்​களுக்கான வரிப் பகிர்​வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்​டும் என்று 16-வது நிதி ஆணைய குழு​விடம் முதல்வர் ஸ்டா​லின் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசின் 16-வது நிதி ஆணையத்​தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமை​யில், அதன் உறுப்​பினர்கள் அடங்கிய குழு​வினர் 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர். இந்நிலை​யில், சென்னை கிண்​டி​யில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் முதல்வர் ஸ்டா​லின், அமைச்​சர்​கள், அரசு உயர் அதிகாரி​களுடன் நிதிக் குழு​வினர் நேற்று காலை ஆலோசனை நடத்​தினர். இதில் முதல்வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: சு​கா​தா​ரம், கல்வி, சமூகநலம், வேளாண்மை ஆகிய துறை​களின் முன்னேற்​றத்​துக்கான முக்கிய திட்​டங்​களை, பெரும்​பாலும் மாநில அரசுகள்​தான் வடிவ​மைத்து செயல்​படுத்து​கின்றன. ஆனால், அதற்​கேற்ற வருவாயை பெருக்கு​வதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளன.

அந்த வகையில், கடந்த 15-வது நிதிக் குழு பரிந்​துரைப்​படி, மாநிலங்​களுக்கு பகிர்ந்து அளிக்​கும் வரி வருவாய் பங்கை 41 சதவீதமாக உயர்த்தியதை வரவேற்​கிறோம். அதேநேரம், இந்த பரிந்​துரைக்கு மாறாக, கடந்த 4 ஆண்டு​களில் மத்திய அரசின் மொத்த வரி வருவா​யில் 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்​களுக்கு பகிர்ந்து அளிக்​கப்​பட்​டுள்​ளது. மாநில வரிப் பகிர்​வில் உள்ள மேல்​வரி, கூடுதல் கட்டணம் ஆகிய​வற்றை மத்திய அரசு பெரு​மளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம். மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்​படுத்​தும் திட்​டங்​களுக்கான மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவும் தமிழகம் போன்ற மாநிலங்​களின் நிதி​நிலையை பாதிக்​கிறது.

எனவே, மத்திய – மாநில அரசுகளின் பங்களிப்பு திட்​டங்​களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்​துரை செய்ய வேண்​டும். மத்திய வருவா​யில் மாநிலங்​களுக்கான வரிப் பகிர்​வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்​டும்​. தமிழகத்​துக்கான வரிப் பகிர்வு 9-வது நிதிக் குழு பரிந்​துரைத்த 7.931 சதவீதத்​தில் இருந்து 15-வது நிதிக் குழு பரிந்​துரைத்த 4.079 சதவீதம் என வீழ்ச்​சியை சந்தித்​துள்ளது. இது தமிழகத்​தின் முன்னேற்​றத்தை தொய்​வடைய செய்து, தண்டிப்​பதுபோல உள்ளது. எனவே, வரிப் பகிர்வு முறை​யில் சமச்​சீரான வளர்ச்சி, திறமையான நிர்​வாகம் ஆகிய​வற்றை சம குறிக்​கோள்​களாக கருதி பரிந்​துரை வழங்க வேண்டும்.

இந்தியா​வில் கடந்த 45 ஆண்டு​களாக கடைபிடிக்​கப்​பட்டு வரும் மறுபகிர்வு முறை மூலம் எதிர்​பார்த்த அளவு வளர்ச்சி ஏற்பட​வில்லை. எனவே, வளர்ந்த மாநிலங்​களின் வளர்ச்​சியை பாதிக்காத வகையில், தேவையான நிதியை வழங்​கும் ஒரு புதிய அணுகு​முறையை நிதிக் குழு வடிவ​மைக்க வேண்​டும். கடந்த காலங்​களில் பல்வேறு நிதிக் குழுக்​களின் பரிந்​துரைகளால் தமிழகத்​துக்கு இழைக்​கப்​பட்ட அநீதி​ களுக்கு உரிய தீர்வை 16-வது நிதிக் குழு வழங்​கும் என்று நம்பு​கிறோம்.

ஒவ்வொரு மாநில​மும் அதன் முழு திறனுக்கு ஏற்ற வளர்ச்​சியை எட்டு​வதன் மூலமாகவே இந்திய திருநாட்டை உலக அரங்​கில் பொருளாதார வலிமை கொண்ட ஒரு மாபெரும் நாடாக நிலைநிறுத்த முடி​யும். இவ்​வாறு முதல்வர் பேசினார்.

முதல்வர் கூறிய 3 பிரச்சினைகள்: நிதிக்குழு கூட்டத்தில், தமிழகத்தின் 3 முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இயற்கை பேரிடர்களால் தமிழகம் பேரழிவை சந்தித்து வருகிறது. இந்த பாதிப்புகளை சரிசெய்ய அதிக நிதி செலவிட வேண்டி உள்ளதால், வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க முடியவில்லை. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களது தேவைகளை பூர்த்திசெய்ய அடுத்த 10 ஆண்டுகளில் உரிய பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், பல துறைகளில் அதிக முதலீடுகள் செய்வது அவசியம். மேலும், நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது, அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்குவது முக்கிய சவாலாக உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, பேரிடர் துயர் தணிப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள உரிய நிதி வழங்கவும், சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரம் வழங்கவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி, மானியங்கள் வழங்கவும் நிதிக் குழு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்