ஊழியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கு 8 முதல் மாலை 4 மணி வரை பணி நேரமாக உள்ளது. அதேபோல், ‘கால் டியூட்டி’ என்ற அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும் பணிக்கு வருவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்ததைவிட, பணிநேரம் ஒரு மணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டதற்கு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள் உரிய நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் விரைவாக சென்று விடுவதாகவும், ஒரு நாளுக்கு, 4 முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே பணி செய்கின்றனர். மீதமுள்ள நேரங்களில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்கு செவிலியர்கள்தான் சிகிச்சை அளித்து, மாத்திரைகளை வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்யும்போதுகூட சில நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மட்டுமே பணியில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் முறையாக பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், மருத்துவர்கள் அறை, நுழைவுவாயில்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 4,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களின், கேமரா பதிவுகளை, சென்னையில் உள்ள பொது சுகாதாரத் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க முடியும். அதேபோல, அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலகங்களிலும், நேரடியாக கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்படு கிறது” என்றார்.