இடிந்து விழும் அபாயத்தில் தெற்கு கரையோர சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் ஒவ்வொரு வருடமும் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் நினைவுகூரப்படும் அதேவேளை, மக்களை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி கோபுரங்கள் பாராமரிப்பு இன்றி காணப்படுவதாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சுனாமி கோபுரங்களின் திருத்தப்பணிகள் மற்றும் பாரமரிப்பு பணிகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் காலி, அஹங்கம, பலப்பிட்டி, அம்பலாங்கொடை, ஹிக்கடுவை, ரத்கம, தெல்வத்த மற்றும் உனவட்டுன உட்பட பல்வேறு மாவட்டங்களிலும், மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 24 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெலிகம பொலிஸ் மைதானம், திக்வெல்ல பொலிஸ் மைதானம், மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகம், தெவிநுவர மீன்பிடித் துறைமுகம், பொல்ஹேன சுமணராமய ஆலய மைதானம், மற்றும் மாத்தறை மாவட்டத்தில் உள்ள தலால தெற்கு மகா வித்தியாலயம் மற்றும் கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயம், தங்காலை விசுத்தாராமய மைதானம், தங்காலை பொலிஸ் மைதானம் என்பன குறிப்பிட்ட இடங்களாகும். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குடாவெல்ல மீன்பிடித் துறைமுகம், ரேகாவ ஆரம்பப் பாடசாலை மைதானம், படாத விகாரை மைதானம் மற்றும் சிசிலகம சீதாராமய ஆலய மைதானம் ஆகியவை குறிப்பிட்ட இடங்களில் அடங்கும்
அண்மையில், அஹங்கம ஷரிபுத்ரா மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாழடைந்த நிலையில் காணப்பட்ட சுனாமி எச்சரிக்கை கோபுரம் அகற்றப்பட்டது.
நாட்டின் கரையோரப் பகுதிகளில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை கொழும்பு தலைமை அலுவலகம் மேற்பார்வையிடுவதாக காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், நிதி பற்றாக்குறையால் பராமரிப்பு பணிகள் தாமதமாகி வருகிறது. இந்த கோபுரங்களில் பலவற்றில் உள்ள சூரிய சக்தியில் இயங்கும் பேட்டரிகள் காலாவதி திகதியை கடந்துவிட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.