வயநாடு நிலச்சரிவு: செல்போன் இயங்காத போது பல உயிர்களை காப்பாற்றிய பொழுதுபோக்கு சாதனம் ‘ஹாம் ரேடியோ’

ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம், Sabu Mathew

படக்குறிப்பு, வாக்கி டாக்கி போன்ற சிறிய ஹாம் ரேடியோ கருவி கொண்டு களத்தில் மீட்புப் பணியில் ஈடுபடும் ஹாம் ரேடியோ அமைப்பினர்
  • எழுதியவர், அம்ரிதா பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழ்

ஜூலை 30, 2024. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்தனர். அங்குள்ள வீடுகள், கடைகள் எனப் பல கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

நிலச்சரிவில் சிக்கியவர்களை காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாவட்ட நிர்வாகம் ஆகியோர் மீட்டனர். கடும் வானிலையால் அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரு வகை வானொலியைப் பயன்படுத்தியே பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மீட்புப் பணி குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டன. அதுதான் ஹாம் ரேடியோ.

வயநாட்டில் சுல்தான் பத்தேரி டி.எக்ஸ் அமைப்பின் (Sultan Bathery DX Association) உறுப்பினர்கள் சேர்ந்து ஹாம் ரேடியோ கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கும், மீட்புக் குழுவினருக்கும் தகவல்கள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தகவல் தொடர்பு எப்படி இருந்தது?

வயநாட்டில் நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால் காலையில்தான் மீட்புப் பணிகள் தொடங்கின.

“பேரிடர் காலத்தில் மின்சாரம், செல்ஃபோன் நெட்வொர்க் என எதுவும் இருக்காது. அதனால் முதல்கட்ட தகவல் தொடர்புக்கு மிகவும் எளிதான ஹாம் ரேடியோ முறையைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அது தக்க உதவியாகவும் இருந்தது,” என்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் பணிபுரியும் அருண் பீட்டர், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“ஜூலை 30ஆம் தேதியன்று காலையில் எங்கள் அமைப்பிற்கு வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மீட்புப் பணியில் உதவுமாறு அழைப்பு வந்தது. உடனே எங்கள் அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் கல்பேட்டா நகருக்குச் சென்று அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மிகவும் விரைவாக ஹாம் ரேடியோ ஸ்டேஷன் ஒன்றை அமைத்தனர்” என்று பிபிசி தமிழிடம் பேசிய சுல்தான் பத்தேரி டி.எக்ஸ் அமைப்பின் தலைவர் சாபு மேத்யூ தெரிவித்தார்.

சூரல்மலை, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இந்த அமைப்பு ஹாம் ரேடியோ நிலையங்களை அமைத்தனர்.

“மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆன்டெனா கொண்ட நிலையங்கள் அமைத்து எங்கள் குழுவினர் வாக்கி டாக்கி போல இருக்கும் சிறிய ஹாம் ரேடியோ கருவிகளைக் கொண்டு மீட்புக் குழுவினரோடு களத்திற்குச் செல்வோம், அதில் எப்போதும் ஃபோன் பேசுவது போலவே நாம் பேச இயலும்” என்றார்.

களத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு பற்றிய தகவல்கள் ஹாம் ரேடியோ நிலையங்களுக்குப் பரிமாற்றப்பட்டு, அதிகாரிகள் அதற்கு ஏற்றது போல மீட்பு வசதிகள் செய்து மக்களைக் காப்பாற்றியதாகவும் விவரித்தார்.

வயநாடு பகுதியில் ஏற்கெனவே தகவல் தொடர்புக்கு வி.ஹெச்.எஃப் ரிபீட்டர் (VHF repeater) என்னும் ஆன்டெனா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது மலைகள் நிறைந்த பகுதி என்பதால் அது ஒன்றை மட்டும் பயன்படுத்தி நீண்டதூரம் தொடர்புகொள்ள முடியாது. இதனால் பல இடங்களில் ஹாம் ரேடியோ நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

இந்தக் குழுவினர் வயநாடு நிலச்சரிவின் மீட்புப் பணிகளில் 7 நாட்கள் தொடர்ந்து செயல்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

‘வாழ்நாளில் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு’

ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம், Sabu Mathew

படக்குறிப்பு, களத்தில் ஹாம் ரேடியோ நிலையங்கள் அமைத்து தகவல் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது

“இயல்பாகவே வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தகவல் தொடர்பு செய்வது சற்றுக் கடினமாகவே இருக்கும். ஆனால் அந்த மழையில், தகவல் தொடர்பு முற்றிலுமாகத் தூண்டிக்கப்பட்டு நாங்கள் மீட்புப் பணிகளைச் செய்வது மிகவும் கஷ்டமான நிலை இருந்தது. பல மணிநேரம் மக்கள் மண்ணுக்குள் சிக்கிய நிலையில் இருந்தனர்.

அவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் பணிகளைத் தொடங்கினோம்” என்று இந்த ஹாம் ரேடியோ அமைப்பைச் சேர்ந்தவரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவருமான நிதீஷ் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “முண்டக்கையில் ஹாம் ரேடியோ நிலையம் அமைத்தபோது இரண்டு மாடிகளைக் கொண்ட மசூதி ஒன்று முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து இருந்ததைக் கண்டோம்” என்றார்.

“அந்த மசூதியின் தலைவரின் உடலை மீட்க ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹாம் ரேடியோ கொண்டு தகவல் தெரிவித்தோம். மீட்புப் படையினர் அவரது உடலை மண்ணுக்குள் இருந்து எடுக்க வந்தபோது, நிலச்சரிவு பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த மசூதியில் தஞ்சம் புகுந்த ஏராளமான மக்களின் சடலங்களை மண்ணுக்குள் இருந்து எடுத்தனர்” என்று நிதீஷ் கனத்த குரலுடன் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் பல மணிநேரம் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்ததாகவும், இது அவரது வாழ்நாளில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது நடந்த பின்னரே, மசூதி அமைந்த சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மக்களை மண்ணுக்குள் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு மக்களைக் காப்பாற்றியதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நிலச்சரிவு நடந்த சில நாட்களுக்குப் பிறகு தகவல் தொடர்புக்காக அரசுத் தரப்பில் இருந்து செல்போன் டவர் வைக்கப்பட்டதாகவும் அதுவரை ஹாம் ரேடியோ கொண்டு மட்டுமே தகவல் தொடர்பு நடந்ததாகவும் நிதீஷ் கூறினார்.

ஹாம் ரேடியோ என்றால் என்ன?

ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம், Sabu Mathew

படக்குறிப்பு, வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ஹாம் ரேடியோ நிலையம்

அமெச்சூர் ரேடியோ அல்லது ஹாம் ரேடியோ என்பது லாபம் ஈட்டும் நோக்கமின்றி பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தப்படும் ஒரு வானொலி சேவை.

“தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மக்கள் வானொலி சேவைகளைத் தானே கற்று, ஆராய்ந்து அதில் புதுமைகளைக் கண்டுபிக்க ஹாம் ரேடியோவை பயன்படுத்தலாம்.

ஆனால் முறையாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஹாம் ரேடியோவை இயக்க முடியும். இவர்கள் ‘ஹாம்ஸ்’ என்று அழைக்கப்படுவர்” என்கிறார் சென்னை பல்கலைகழக்கத்தின் இதழியல் துறை பேராசிரியரும், ஹாம் ரேடியோ ஆர்வலருமான முனைவர் ஜெய் சக்திவேல்.

இந்தியாவில் 12 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு நபரும், இந்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சம் இதற்காக நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று ஹாம் ரேடியோ இயக்குவதற்கான உரிமத்தைப் பெறலாம்.

உரிமம் பெற்ற அனைவருக்கும் ‘Call sign’ எனப்படும் தனித்துவமான ஒரு பெயர் வழங்கப்படும். அழைப்பு தொடங்கப்படுவதற்கு முன் ஒவ்வொரு நபரும் அவர்களுக்கான ‘Call sign’-ஐ சொல்லியே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வர்.

அமெச்சூர் வானொலியின் தேசிய நிறுவனத் தரவுகளின் படி, உலகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஹாம் ரேடியோவை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவில் சுமார் 15,000 ஹாம் ரேடியோ ஆபரேட்டர்கள் உள்ளனர்.

ஹாம் ரேடியோ எவ்வாறு இயங்குகிறது?

ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹாம் ரேடியோ கருவிகள்

“பொதுவாக வானொலியில் ஒரு வழித் தொடர்பு மட்டுமே நடத்த இயலும். ஆனால் ஹாம் ரேடியோவில் ஒரு தொலைபேசி அழைப்பு போல அனுப்புநர், பெறுநர் என இருவரும் தொடர்புகொள்ளலாம். ஹாம் ரேடியோ கொண்டு உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் மக்களுடனும் தொடர்பு கொள்ளலாம்” என்று முனைவர் ஜெய் சக்திவேல் தெரிவித்தார்.

இரண்டாயிரம் ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை ஹாம் ரேடியோ கருவிகள் உள்ளன. ஒரு பேட்டரி கொண்டு மட்டுமே இந்த ஹாம் ரேடியோ பல மணிநேரங்கள் வரை இயங்க முடியும்.

முன்பு ஹாம் ரேடியோவில் ‘மோர்ஸ் கோட்’ (morse code) எனப்படும் பிரத்யேக குறியீடு கொண்டு தகவல் பரிமாற்றம் நடக்கும். ஆனால் தற்போது தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக செல்போனில் பேசுவது போலத் தொடர்புகொள்ள முடியும். மொழி தெரியாதவர்களுடன் பேசுவதற்காக மட்டுமே மோர்ஸ் கோட் பயன்படுத்தப்படுகிறது.

“இதனால் உலகம் முழுவதும் மொழி தடையாக இல்லாமல் மக்கள் கருத்துகளைப் பரிமாற்றிக் கொள்ளலாம். ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட பொழுபோக்குகளுள் (hobbies) ஹாம்ரேடியோ ஒன்றாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆனால் ஹாம் ரேடியோ பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே மக்களுக்கு இதன் பயன்பாடு பற்றித் தெரிய வருகிறது” என்கிறார் முனைவர் ஜெய்சக்திவேல்.

கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி, 2015 சென்னை வெள்ளம், 2018 கேரளா வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ஹாம் ரேடியோ தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.