சாம்ஸன், திலக் வர்மா சதம்: இந்திய அணி புதிய வரலாறு – தென் ஆப்ரிக்க மண்ணில் பதிவான சாதனைகள்

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திலக் வர்மா
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய படை அபாரமாக வென்று புதிய வரலாற்றைப் பதிவு செய்தது.

ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று நடந்த கடைசி மற்றும் 4வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை 135 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. 284 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 148 ரன்களுக்கு ஆட்டமிழந்து 135 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிக்ஸர் மழையில் நனைந்த ரசிகர்கள்

இந்திய பேட்டர்கள் சாம்ஸன், திலக் வர்மா இருவரின் பேட்டிங்கை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு நேற்று வாண வேடிக்கை நிகழ்த்திக் காட்டினர். இந்த ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி சார்பில் 23 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. இதில் 19 சிக்ஸர்களை சாம்ஸன், திலக் வர்மா விளாசினர்.

இருவரும் சேர்ந்து தென் ஆப்ரிக்கப் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். ஓவருக்கு 15 ரன்ரேட்டில் ஸ்கோர் உயர்ந்தது. பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்த இந்திய அணி, 8.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.11.4 ஓவர்களில் 150 ரன்களையும், 14.1 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டியது. 17.5 ஓவர்களில் 250 ரன்களும் குவிக்கப்பட்டன. கடைசி 6 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 84 ரன்கள் சேர்த்தது. 2வது விக்கெட்டுக்கு இருவரும் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சாம்ஸன் 28 பந்துகளில் அரைசதமும், 51 பந்துகளில் சதத்தையும் நிறைவுசெய்தார். திலக் வர்மா 22 பந்துகளில் அரைசதத்தையும், 41 பந்துகளில் சதத்தையும் எட்டினார்.

ஆனால், தென் ஆப்ரிக்கா அணியோ தனது முதல் சிக்ஸரை 50 பந்துகளுக்கு பின்புதான் அடித்தது. ராமன்தீப் சிங் பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணிக்காக முதல் சிக்ஸரை அடித்தார். அதன்பின் வருண் பந்துவீச்சில் மில்லர் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினார். தென் ஆப்ரிக்கா தரப்பில் 9 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டன.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சஞ்சு சாம்ஸன்

இந்திய மிரட்டல் பந்துவீச்சு

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா இருவரும் தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் தென் ஆப்ரிக்க பேட்டர்களை மிரட்டிவிட்டனர். ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 8 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவரும் சேர்ந்து டாப்ஆர்டர் 4 பேட்டர்களையும் சாய்த்து வெற்றியை உறுதி செய்தனர்.

ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, மைதானமும் சிறியது. பேட்டர்கள் லேசாக தூக்கி அடித்தாலே சிக்ஸர், பவுண்டரி சென்றுவிடும். இதனால் இந்த ஸ்கோரை அடிக்க தென் ஆப்ரிக்க அணி கடுமையாக போராடும், சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மாலை நேரத்தில் லேசான குளிர்காற்றும், ஈரப்பதமும், மின்ஒளியும் சேர்ந்து புதிய பந்து ஸ்விங் ஆக உதவியது. இதனால் அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரிலேயே அவரின் பந்துகள் டெஸ்ட் கிரிக்கெட் போன்று ஸ்விங் ஆகியது. ஒரு பந்தை அவுட் ஸ்விங்காகவும், மற்றொரு பந்தை இன்கட்டராகவும் வீசி அர்ஷ்தீப் அசத்தினார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஹென்ட்ரிக்ஸ் கிளீன் போல்டானார்.

தனது 3வது பந்திலேயே ஹென்ட்ரிக்ஸை தனது இன்கட்டர் மூலம் க்ளீன் போல்டாக்கி அர்ஷ்தீப் அசத்தினார். மார்க்ரமுக்கு அருமையான அவுட்ஸ்விங்கை வீச, அதை தூக்கி அடிக்க முற்பட்டு ரவி பிஸ்னாயிடம் கேட்ச் கொடுத்து மார்க்ரம் வெளியேறினார். ரெக்கில்டனும் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய நிலையில் பாண்டியா வீசிய பந்தில் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆபத்தான பேட்டர் கிளாசன் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆகினார். அர்ஷ்தீப் இன்கட்டராக வீசிய பந்தை கால்காப்பில் வாங்கிய கிளாசன் அதிர்ச்சியில் வெளியேறினார்.

ஹர்திக், அர்ஷ்தீப் இருவரும் சேர்ந்தே ஏறக்குறைய ஆட்டத்தை முடித்துவிட்டனர். டாப்ஆர்டர் பேட்டர்கள் 4 பேரும் பெவிலியன் சென்ற நிலையில் தென் ஆப்ரிக்கா தோல்வி உறுதியானது. அக்ஸர் படேல் 2 ஓவர்கள் வீசி 6 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், வருண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

டிரிஸ்டன் ஸ்டப்ஸ்(43), மில்லர்(36), யான்சென்(29) ஆகியோர் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் ஏமாற்றினர்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா இருவரும் தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் தென் ஆப்ரிக்க பேட்டர்களை மிரட்டிவிட்டனர்.

பலவீனமான நிலையில் தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சில் கட்டுக்கோப்பு இல்லை. இந்த ஆட்டத்தில் மட்டும் 17 வைடு பந்துகளை தென் ஆப்ரிக்க வீரர்கள் வீசினர். ஒரு நோபாலும் வீசப்பட்டது. இந்த ஆட்டம் மட்டுமல்ல இந்தத் தொடரில் இதற்கு முன் நடந்த 3 ஆட்டங்களிலும் வேகப்பந்துவீச்சாளர்களிடம் கட்டுக்கோப்பு, ஒழுக்கம் இல்லாமல் பந்துவீசியதால் உதிரிகள் வாயிலாக அதிக ரன்கள் சென்றன. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் கோட்ஸி, சிமிலேன் பந்துவீச்சு இந்தத் தொடரில் மோசமாக இருந்தது.

தென் ஆப்ரிக்க பேட்டர்களின் பேட்டிங்கும் நேற்று படுமோசமாக இருந்தது. 283 ரன் இலக்கு என்றாலே அழுத்தமும், நெருக்கடியும் ஏற்படுவது இயல்புதான். ஆனாலும், நல்ல பந்துகளுக்கு பேட்டர்கள் மதிப்பளித்து ஆடினால்தான் களத்தில் நிலைத்து நிற்க முடியும்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா வீசக்கூடிய நல்ல, லைன் அன்ட் லென்த், ஸ்விங் பந்துகளைக் கூட சிக்ஸர் அடிக்க வேண்டும் என முற்பட்டு தென் ஆப்ரிக்க பேட்டர்கள் விக்கெட்டுகளை பரிதாபமாக இழந்தனர். ஒரு கட்டத்தில் 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதமாக காட்சியளித்தது.

குறிப்பாக கேப்டன் மார்க்ரம் தன்னுடைய மோசமான ஃபார்மிலிருந்து எவ்வாறு மீளப்போகிறார், அணியை எவ்வாறு மீட்கப் போகிறார் என்று அவர் முன் இருக்கும் பெரிய கேள்வியாகும். கடந்த 25 இன்னிங்ஸ்களில் மார்க்ரம் இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார், 10 முறைக்கும் மேலாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல் ஏலம் நடக்கும் நிலையில் மார்க்ரம் ஃபார்ம் அவரின் ஏலத்தொகையை பெருமளவு குறைக்கும், எந்த அணியும் வாங்காமலும்கூட போகலாம். அதேபோல ரீஸா ஹென்ட்ரிக்ஸ் மோசமான ஃபார்ம் உலகக் கோப்பையிலிருந்து தொடர்கிறது.

டி20 உலகக் கோப்பைக்கு முன்பே ஹென்ட்ரிக்ஸ் சரியாக ரன் குவிக்கவில்லை. ஆனால், அனுபவமான பேட்டர் தேவை என்பதற்காக அணியில் சேர்க்கப்பட்டும், அவரின் மோசமான பேட்டிங் தொடர்கிறது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேப்டன் மார்க்ரம் தன்னுடைய மோசமான ஃபார்மிலிருந்து எவ்வாறு மீளப்போகிறார், அணியை எவ்வாறு மீட்கப் போகிறார் என்று அவர் முன் இருக்கும் பெரிய கேள்வியாகும்.

இந்திய அணி மாபெரும் சாதனை

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது.

இந்திய அணி 2016 லாடர்ஹில்லில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்ததுதான், வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப்பின் நேற்று ஜோகன்னஸ்பர்க் நகரில் அந்த சாதனையை முறியடித்து 283 ரன்களைக் குவித்தது.

33 நாட்களுக்குள் டி20 போட்டியில் 2வது அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 297 ரன்களை இந்திய அணி குவித்து சாதனை படைத்திருந்தநிலையில் இப்போது 2வது அதிகபட்சமாக 283 ரன்களைக் குவித்தது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ஒரே ஆண்டில் 5 தொடர்கள், உலகக்கோப்பை

இதன் மூலம் 2024ம் ஆண்டில் நடந்த அனைத்து டி20 தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தான்(3-0 ஜனவரி மாதம்), டி20உலகக் கோப்பை(ஜூன்), ஜிம்பாப்வே(ஜூலை1-4), இலங்கை(0-3 ஜூலை) வங்கதேசம்(3-0 அக்டோபர்), தென் ஆப்ரிக்கா(3-1 நவம்பர்) என இந்த 2024-ஆம் ஆண்டில் நடந்த அனைத்து டி20 தொடர்களையும் இந்திய அணி வென்று புதிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளது.

இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் எந்த நாட்டு அணியும் இதேபோன்று அனைத்து டி20 தொடர்களையும் ஒரு காலண்டர் ஆண்டில் கைப்பற்றியதில்லை. அதை இந்திய அணி செய்து சாதனை புரிந்துள்ளது.

ஆட்டநாயகன், தொடர்நாயகன்

இந்த ஆட்டத்தில் திலக் வர்மா 47 பந்துகளில் 120(10 சிக்ஸர், 9பவுண்டரி), சாம்ஸன் 56 பந்துகளில் 109(9 சிக்ஸர், 6பவுண்டரி) என இருவரும் இந்திய அணி இமாலய ஸ்கோர் குவிப்புக்கு காரணமாகினர். இருவரும் டர்பன்,செஞ்சூரியனில் சதம் அடித்த நிலையில் இந்தத் தொடரில் 2வது சதத்தை இருவரும் பதிவு செய்தனர்.

ஆட்டத்தின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் திலக் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திலக் வர்மா

சாம்ஸன் 4 சதங்கள்

சாம்ஸன் தொடர்ந்து இரு சதங்களை அடித்து, அதன்பின் 2 டக்அவுட்களை எதிர்கொண்டு, இப்போது சதம் அடித்துள்ளார். திலக் வர்மா தொடர்ந்து 2 சதங்களைப் பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக சஞ்சு சாம்ஸன், 2024 காலண்டர் ஆண்டில் 3 சதங்களை அடித்த டி20 கிரிக்கெட்டில் முதல் பேட்டர், முதல் இந்திய பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஐசிசியின் முழு உறுப்பு நாடுகளுக்கு எதிராக, ஒரே இன்னிங்ஸில் 2 சதங்களை அடித்த 3வது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. அது மட்டுமல்லாமல், ஒரு டி20 தொடரில் 4 சதங்களை அடித்த முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்தது, இதற்கு முன் 2 சதங்கள் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது என கிரிக்இன்போ தகவல் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் டி20 போட்டியில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி சாம்ஸன்- திலக் வர்மா என்ற பெருமையைப் பெற்றது. இதற்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா-ரிங்கு சிங் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துததான் அதிகபட்சமாக இருந்தது.

டி20 போட்டிகளில் சதம் அடித்த அதிகமான பேட்டர்களைக் கொண்ட நாடாகவும், அதிக சதங்களை அடித்த அணியாகவும் இந்திய அணி பெருமை பெற்றது. இதுவரை டி20 போட்டியில் இந்திய அணி சார்பில் 23 சதங்களை பேட்டர்கள் அடித்துள்ளனர். 2வது இடத்தில் நியூசிலாந்து சார்பில் அந்த அணியைச் சேர்ந்த 12 பேட்டர்கள் சதம் அடித்திருந்தனர்.

தென் ஆப்ரிக்கா பரிதாபம்

2022ம் ஆண்டுக்குப்பின் சொந்த மண்ணில் எந்த டி20 தொடரையும் வெல்ல முடியவில்லை என்ற தென் ஆப்ரிக்காவின் சோகம் தொடர்கிறது. 2006-ஆம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி குவித்த 434 ரன்களை ஒரு விக்கெட் வித்தியாசத்தில், ஒரு பந்து மீதமிருக்கையில் தென் ஆப்ரிக்கா வென்று சாதனை புரிந்தது. அதேபோன்று இந்த ஆட்டத்திலும் ஏதாவது அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இந்த கடைசி டி20 ஆட்டம் முற்றிலும் ஒருதரப்பாக நடந்து முடிந்தது. 148 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 135 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று என்று மோசமான தோல்வியை தென் ஆப்ரிக்கா பதிவு செய்தது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

“எந்த ரகசியமும் இல்லை, ஆகச்சிறந்த வெற்றி”

தொடரை வென்ற மகிழ்ச்சியில் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில் “ இந்த சூழலையும், காலநிலையையும் நாங்கள் பயன்படுத்திக் கொண்டது, ஏற்றுக்கொண்டதில் எந்த ரகசியமும் இல்லை. எங்கள் திட்டம் தெளிவாக இருந்தது. கடந்த முறை இங்கு வந்தபோதுகூட இதே பாணியில்தான் விளையாடினோம், அதையே தொடர முடிவு செய்தோம். போட்டியின் முடிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அது தானாக நடக்கும், உழைப்பை மட்டும் செலுத்துவோம் என வீரர்களிடம் தெரிவித்தேன். அபிஷேக், சாம்ஸன், திலக் 3 பேரும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் கிடைத்த ஒவ்வொரு வெற்றியும் மகத்தானது. தென் ஆப்ரிக்காவுக்கு பயணம் வந்து தொடரை வென்று தாயகம் செல்வது எப்போதுமே சவாலானது, ஆதலால் இது எங்களுக்கு ஆகச்சிறந்த வெற்றி. ” எனத் தெரிவித்தார்