தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் ராபர்ட் ஜூனியர் கென்னடியை சுகாதார செயலராக்கிய ட்ரம்ப்

by wp_shnn

தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் ராபர்ட் ஜூனியர் கென்னடியை சுகாதார செயலராக்கிய ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலராக ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடியை தேர்வு செய்துள்ளார். இவர் தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடியை, பொதுச் சுகாதாரம், மனித சேவைகள், மருந்து, உணவுப் பாதுகாப்பு, மருத்துவ ஆய்வு, தடுப்பூசிகள், சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான செயலராக ட்ரம்ப் அறிவித்துள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

கென்னடி நியமனம் குறித்து ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் சமூகவலைதளத்தில், “பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்கர்கள் நீண்ட காலமாகவே உணவு தொழில்துறை, மருந்துத் துறையின் மோசடிகள், தவறான தகவல் மற்றும் குறைவான தகவல்களினால் நசுக்கப்பட்டுள்ளனர். கென்னடி நாள்பட்ட தொற்று நோய்களை முடிவுக்குக் கொண்டுவந்து அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமான தேசமாக மாற்றுவார் “. என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து கென்னடி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில், “உங்கள் தலைமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி. அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கான உங்கள் தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்த நான் உறுதிபூண்டுள்ளேன். நாள்பட்ட தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவியல், மருத்துவம், தொழில்துறை மற்றும் அரசாங்கத்தில் உள்ள தலைசிறந்த அறிஞர்களை ஒன்றிணைக்க நமக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “நாம் அனைவரும் சேர்ந்து ஊழலை ஒழிப்போம், தொழில்துறைக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நிலவும் சிக்கல்களை தீர்த்து, நமது சுகாதார நிறுவனங்களை தரமான, சான்றுகள் அடிப்படையிலான அறிவியலின் வளமான பாரம்பரியத்துக்கு மீட்டெடுப்போம். நான் அமெரிக்கர்களுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்து தரவுகளுக்கும் அணுகலை வழங்குவேன், இதனால் அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் மருத்துவ சேவைக்கான தேர்வுகளை சிறப்பாக செய்ய முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடி? ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடி, தடுப்பூசி எதிர்ப்பு ஆர்வலர்களில் முக்கியமான ஒருவர், மேலும் மன இறுக்கம் மற்றும் பிற சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் தடுப்பூசிகள் பற்றிய இப்போது நிராகரிக்கப்பட்ட கூற்றை மிகவும் வலுவாக ஆதரித்துள்ளார்.

உலகின் மிக சக்திவாய்ந்த அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர் மறைந்த அட்டர்னி ஜெனரல் ராபர்ட் எஃப் கென்னடியின் மகனும், முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் மருமகனும் ஆவார்.

முன்னதாக அவர் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனுக்கு சவால் விடுத்தார், பின்னர் அதிபர் வேட்பாளர் போட்டியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். பின்னர், கென்னடி குடியரசுக் கட்சியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு, டொனால்ட் ட்ரம்பை முழுமையாக ஆதரிக்கத் தொடங்கினார்,

அதன் பின்னர் கென்னடி – ட்ரம்ப் நல்ல நண்பர்களாக மாறினர். அதிபர் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரங்களின் போது இருவரும் கூட்டாக விரிவாக பிரச்சாரம் செய்து கவனம் ஈர்த்தனர். “அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமானதாக ஆக்குங்கள்” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பொது சுகாதாரத்தை மேற்பார்வையிட கென்னடிக்கு ஒரு முக்கிய பங்கை வழங்க விரும்புவதாக ட்ரம்ப் கூறிவந்தார். அதற்கேற்ப ட்ரம்ப் அவரது ஆட்சி நிர்வாகத்தில் கென்னடிக்கு சுகாதாரத் துறையை ஒதுக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்