வெள்ளை மாளிகையில் ஜோ பைடனைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப் – என்ன பேசினர்?

ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, வெள்ளை மாளிகை

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப், இன்று (புதன், நவம்பர் 13) வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.

வெள்ளை மாளிகையின் அதிபர் அறையான ஓவல் அலுவலகத்தில் சந்தித்து இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்தார்கள்.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், பைடனிடம் ‘அரசியல் கடினமானது’ என்று கூறினார். “பல சமயங்களில் உலகம் நல்ல முறையில் நடந்துகொள்வதில்லை, ஆனால் இன்று உலகம் நன்றாக இருக்கிறது,” என்றார்.

தாம் எதிர்பார்க்கும் சுமூகமான அதிகார மாற்றத்திற்கு அவர் பைடனுக்கு நன்றி தெரிவித்தார்

“மிகவும் சுமுகமான அதிகார மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன். எந்த அளவுக்குச் சுமுகமாக இருக்க முடியுமோ அது அந்த அளவுக்குச் சுமுகமாக இருக்கும்,” என்று டிரம்ப் கூறினார்.

அதற்கு பைடன் ‘வெல்கம்’ என்று கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, வெள்ளை மாளிகை

பட மூலாதாரம், Reuters

சென்ற தேர்தலில் கைவிடப்பட்ட பாரம்பரியம்

அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குச் சென்றிருக்கும் இந்த வழக்கம் 2020 தேர்தலில் டிரம்ப் பைடனிடம் தோற்றபோது நடக்கவில்லை.

அச்சமயம், டிரம்ப் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் மோசடி பற்றிய தவறான கூற்றுக்களை முன்வைத்தார். அதை அவர் இன்னும் கூறி வருகிறார்.

வெள்ளை மாளிகையின் பாரம்பரியத்தை உடைத்து, டொனால்ட் டிரம்ப் அதிகார மாற்றத்தைப் பற்றி விவாதிக்க பைடனை வெள்ளை மாளிகைக்கு அழைக்கவில்லை.

ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, வெள்ளை மாளிகை

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock

மாறாக, பைடனின் வெற்றி நாடாளுமன்றத்தில் சான்றளிக்கப்பட வேண்டிய நாளில், டிரம்ப் ஒரு பேரணியை நடத்தினார். நாடாளுமன்றக் கட்டிடமான கேப்பிடாலில் நடந்த கலவரத்துக்கு முன்னதாக, அவர் தனது ஆதரவாளர்களிடம் ‘ஓயாமல் போராடுங்கள்’ என்று கூறினார்.

பின்னர் அவர் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பைடனின் பதவியேற்பு விழாவுக்குச் செல்வதையும் தவிர்த்தார்.

இப்போது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவரையொருவர் அடிக்கடி கடுமையாகச் சாடிக்கொள்ளும் இரண்டு அதிபர்களும் ‘அமைதியான அதிகாரப் மாற்றத்திற்கு’ உறுதிபூண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். வெள்ளை மாளிகையின் பாரம்பரியத்திற்குத் திரும்பும் விதமாகச் இந்த சந்திப்பினை நடத்தியுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.