சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை கத்தியால் தாக்கியது யார்? என்ன காரணம்? – ஊழியர் சொல்வது என்ன?
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை’ எனக் கூறி சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற நபர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?
அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?
சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை (KCSSH) செயல்படுகிறது. இன்று (நவம்பர் 13 புதன்கிழமை) காலையில் வழக்கம் போல சிகிச்சைக்காக நோயாளிகள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவில் டாக்டர் பாலாஜி ஜெகன்னாத் இருந்துள்ளார். இவர் இத்துறையின் தலைவராக இருக்கிறார். காலை 10.30 மணியளவில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர், மருத்துவர் பாலாஜியை அவரது அறையில் சந்தித்துள்ளார்.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் பாலாஜியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மருத்துவர் பாலாஜி படுகாயம் அடைந்துள்ளார்.
மருத்துவமனை ஊழியர் சொல்வது என்ன?
மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் அங்கு நேரில் சென்று, மருத்துவமனைப் பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோருடன் பேசியது.
சம்பவம் நடந்த முதல் மாடியில், சம்பவம் நடந்த நேரத்தில் பணியில் இருந்த மருத்துவமனைப் பணியாளர் சரவணன், கத்திகுத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவர், இன்று (புதன், நவம்பர் 13) காலை சுமார் 10:30 மணியளவில் சிலருடன் புற்றுநோயியல் துறைத் தலைவர் மருத்துவர் பாலாஜி ஜெகன்னாத்தைச் சந்திக்க வந்ததாகக் கூறுகிறார்.
விக்னேஷுடன் வந்த சிலர் வெளியில் நின்றுகொள்ள, விக்னேஷ் மருத்துவரது அறைக்குள் சென்றிருக்கிறார் என்கிறார் சரவணன்.
“தன்னுடன் எடுத்துவந்திருந்த ஒரு சமையல் கத்தியால் மருத்துவரின் கழுத்தில் குத்தியிருக்கிறார் விக்னேஷ். ரத்தம் பீறிட மருத்துவர் அலறிய சத்தம் கேட்டு விக்னேஷுடன் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மருத்துவரின் உதவியாளர் உள்ளே சென்றிருக்கிறார். விக்னேஷ் நடந்து படியில் இறங்கிச் சென்றிருக்கிறார். நடந்த சம்பவத்தை அறிந்துகொண்ட மருத்துவமனைப் பணியாளர்கள் ஓடிச் சென்று விக்னேஷை வளைத்துப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்,” என்றார் சரவணன்.
சம்பவம் நடந்தபோது தாக்குதலுக்கு உள்ளான மருத்துவரது அறைக்கு வெளியே இருந்த உதவியாளரிடம் இந்தத் தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டதாகச் சொல்கிறார் சரவணன்.
மருத்துவமனை இயக்குநர் கூறியது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி, “உடலில் நெறிக்கட்டுதைப் போல கட்டிகள் ஏற்படும் பிரச்னைக்காக தனது தாயை சிகிச்சைக்காக அந்த நபர் அழைத்து வந்தார். அவரது வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன” என்றார்.
தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்த மருத்துவர் பார்த்தசாரதி, “அவர் நல்லபடியாக வந்துள்ளார். டாக்டருடன் அரைமணி நேரம் உரையாடியுள்ளார். இதற்கு முன்னதாக தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து தனியாரிடம் சென்று சிகிச்சை அளித்துள்ளார்” என்றார்.
விக்னேஷ் தாக்கியது ஏன்?
சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் மீது விக்னேஷ் என்ற நபர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.
தொடக்கத்தில், இந்தச் சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், “தாக்குதலில் ஈடுபட்ட நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர்” என்றார்.
பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மருத்துவர் பாலாஜி மீது அவர் தாக்குதல் நடத்தியதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அரசு மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
‘மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை’
பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவமனையின் பெண் செவிலியர் ஒருவர், மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்கிறார்.
மருத்துவமனை துவங்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாகக் கூறுகிறார் அவர்.
“ஆனால், அதற்கேற்ப மருத்துவமனையில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. நாங்களும் அதற்காகப் பல நாட்களாகக் கோரிக்கை வைத்து வருகிறோம்,” என்றார் அந்தச் செவிலியர்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனைப் பணியாளர்களிடம் அதிகாரத் தொனியில் பேசுவதும், குரல் உயர்த்திப் பேசுவதும் அடிக்கடி நடப்பதாகக் கூறுகிறார் அவர்.
இந்த மருத்துவமனையில் பணிசெய்வதே அழுத்தம் மிகுந்ததாக மாறிவிட்டதாகக் கூறுகிறார் அவர்.
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் கே.செந்தில், இன்று (புதன், நவம்பர் 13) சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், ஒரு மருத்துவரை நோயாளி தாக்கிய சம்பவம் நடந்திருப்பதாகக் கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், இந்தச் சம்பவங்களைக் கண்டித்தும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் இன்று மதியம் முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மிக அவசரமாகச் சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சையளிக்கப்படும், என்றார். மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைக் கல்லூரிகள், ஆரம்பச் சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என்றார்.
மேலும் பேசிய அவர், “அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்ததுவமனைகளில் இருக்கும் காவல்துறை அவுட்போஸ்ட்களில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும். நோயாளிகளுடன் வருபவர்களது எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும், மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தான் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்படும்,” என்றார்.
அரசுத்தரப்பில், வேலை நிறுத்தம் செய்யும் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
‘எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க நடவடிக்கை’
மருத்துவர் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளிக்கவும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். “இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சென்னையில் அரசு மருத்துவமனைக்குள் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.” என்று சாடியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Twitter பதிவை கடந்து செல்ல
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு
இதேபோல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் அரசு மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்துள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்கா வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.